தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !





தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நீர் வற்றிய குளம் !   கவிஞர் இரா .இரவி !

நீர் வற்றிய குளம் கோடை விடுமுறையில் 
நண்பர்களுடன் மட்டை விளையாடும் திடல் !

ஆடுகளும்  மாடுகளும்  புல்  மேயும் இடமானது 
அழகிய மீன்கள் இல்லாது ஒழிந்தன !

அசோகர் குளம் வெட்டினார் மரம் நட்டார் என்று 
அன்று படித்த நினைவு இன்றும் உள்ளது !

ஆள்வோர் குளத்தில் கட்டிடம் கட்டுகின்றனர்
ஆலைகளுக்காக மரங்களை வெட்டுகின்றனர் !

நீர் வற்றிய குளங்கள் எல்லாம் இன்று
நீண்ட பெரிய கட்டிடங்கள் ஆகின !

மதுரையில் உய்ரநீதிமன்றம் இருக்குமிடம் 
மாபெரும் உலகனேரி இருந்த இடம் !

இப்படி எத்தனையோ குளங்கள் ஏரிகள் 
எத்தனையோ  கட்டிடங்கள் ஆகிவிட்டன !

கோடையில் வற்றிய குளம் என்பது 
கோடை முடிந்து மழையால்  நிரம்பலாம்  !

வறண்ட நேரம் பார்த்து பலரும் 
வளைத்துப் போட்டு கட்டிவிடுகின்றனர் !

குளம் என்பது ஊருக்குப்  பயன்பட்டது 
குறுகிய சிந்தனையில் கட்டிடம் கட்டுகின்றனர் !

காணமால் போன குளங்களின் எண்ணிக்கை 
கணக்கைப்  பார்த்தால் கண்களில் கண்ணீர் !

புறம்போக்கு என்று சொல்லும் பல இடங்களில் 
பழைய குளங்கள் இருந்த சுவடுகள் தெரியும் !

குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் 
கொக்குகள் மீன் உண்ண வரும் !

மழைநீரை குளங்களில் சேமித்து வந்தால் 
மண் செழிக்கும் வளம் கொழிக்கும் !

நீர் வற்றிய குளங்கள் சில மிச்சம் உள்ளன 
நாம் தூர் வாரி மழை நீரை சேமிப்போம் 

போனது போகட்டும் எஞ்சிய குளங்களை
போராடியாவது காப்போம் வாருங்கள் ! 

கருத்துகள்