முக நூலில் கவிஞர் செ.திராவிடமணி கூடலுார்.







முக நூலில்  கவிஞர் செ.திராவிடமணி கூடலுார்.



இனியவை_இனியவை_இறையன்பு எனும் புத்தகம் வழியாக....

எவ்வளவுதான் போதனைகள் வந்தாலும் உலகின் வன்முறைகள் தீர்ந்தபாடில்லையே? என நாம் வினா எழுப்புகிறோம். எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் நம்மையும் வன்முறைக்கு பொறுப்பாளி ஆக்கி அதிர்ச்சி வைத்தியம் தருகிறார் இறையன்பு.

எல்லார் மனத்திலும் வன்மம் இருக்கிறது. நாம் வசவுகளைப் பார்சலில் அனுப்பினால், சாபங்கள் கூரியரில் வந்து சேர்கின்றன என்பது நடைமுறைச்சிந்தனை.

பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்த்து, “தகராறுகளின் தொகுப்பே வரலாறு” என அவர் முத்திரை குத்தும்போது, பழம் பெருமை பேசி மகிழும் நம் முகத்தில் குத்துவது போல இருக்கிறது.

கோபத்தை அதன் சுவடுகூட இல்லாமல் அழிக்க ஒரே வழி, இதயத்தில் அன்பு பிரவாகமாகப் பெருக்கெடுக்க வேண்டும். அடுத்தவரை வெல்வது வீரமல்ல. தன்னை அடுத்தவர் வெல்வதும் வீரமல்ல. தன்னைத்தானே வெல்வது தான் வீரம். அன்பு இந்தச் செயலைச் சாதிக்க உதவும்.

வன்முறையாளர்களை இருவகைப்படுத்துவார் இறையன்பு. ஒன்று, அடுத்தவர்களை வன்முறைக்கு உட்படுத்துவோர். இன்னொரு வகையினர் தம்மையே வன்முறைக்கு
உட்படுத்திக்கொள்பவர்கள்.

வீட்டிற்குள் நுழையும் போது காலணிகளைக் கழற்றி வீசுவது முதற்கொண்டு பேனா மூடியை வேகமாகக் கழற்றி மூடுவது வரை நம்மை அறியாமலேயே வன்மம் நம் ஒவ்வொரு செயலிலும் கலந்து போயிருக்கிறதாம். இந்த வன்மம் போக்க என்ன வழி? இறையன்பு சொல்கிறார் கேளுங்கள்.

சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு அன்பு குறித்த பாடங்கள், மனித நேயக் கதைகள், கவிதைகள் மட்டுமே பாடமாக்கப்பட வேண்டும்.

அமைதி என்கிற மதிப்பீடு எல்லோருக்கும் அறுபது வயதுக்கு பின்னர் வரக்கூடியதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அமைதி என்பது மனம் சார்ந்து நிகழ வேண்டிய அற்புதம். அது வயது சார்ந்து நிகழக்கூடிய விஷயமில்லை.

இன்றைய மென்பொருள் உலகத்தில் இளைஞர்களிடையே ஒருவித பரபரப்பு எப்போதும் எரிந்து கொண்டிருப்பதாகவே இருக்கிறது. இந்த வித அமைதியின்மை இளைஞர்களிடத்தில் தோன்றுவதற்கான காரணங்களை இறையன்பு ஆராய்கிறார்.

வாய்ப்புகள் அதிகமிருக்கும் இடத்தில் அமைதியின்மையும் அதிகமாகவே இருக்கும் என முடிவும் சொல்கிறார்.

எது பணிவு? எது அடக்கம்? எது வீரம்? என்பதைப் புரிந்து கொள்வதில் ஒரு விதக்குழப்பம். அடங்கியிருத்தல், கீழ்ப்படிதல், ஒப்படைத்தல் ஆகியவற்றில் ஒரு தெளிவின்மை.

இவையே இளைஞர்களிடத்தில் அமைதியின்மை ஏற்படக் காரணங்கள்... எதைச் சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவது என்பது அடங்கியிருப்பது. சொல்பவற்றில் நியாயம் இருந்தால் மட்டுமே கட்டுப்படுவது கீழ்ப்படிதல்.

ஒப்படைப்பது மிக உயர்ந்த நிலை. அதற்கு கட்டளைகள் தேவையில்லை என்கிறார் இறையன்பு.

அடங்கியிருப்பவர்கள் அதிகமாக இருக்கும் சமூகத்தை எளிதில் அடிமைப் படுத்திவிடலாம் என்பதால் ஒப்படைத்தலோடு இளைய சமுதாயச் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் இறையன்பு...

இவ்வாறாக நுாலாசிரியர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் தனது பார்வையைப் பதிவுசெய்து, இறையன்புவின் இனிய சிந்தனைகளை நனி சிறக்க நம் இதயத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார்.

நன்றி

கருத்துகள்