இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின்
பிறந்த நாள் 25.4.1912
இலக்கிய இமயம் மு .வரதராசனார்
கவிஞர் இரா .இரவி
அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வ
முனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ
திருவேங்கடம் என்பது இயற்பெயர்
தாத்தாவின் பெயரான வரதராசன் நிலைத்த பெயர்
எழுத்தராகப் பணித் தொடங்கி உயர்ந்த
துணைவேந்தராகப் பணி முடித்த முதல்வர்
எழுத்தர் ஆசிரியர் விரிவுரையாளர் துணைப் பேராசிரியர்
துறைத் தலைவர் துணைவேந்தர் படிப்படியாக உயர்ந்தவர்
இழப்பைக் கண்டு என்றுமே வருந்தாதவர்
உழைப்பின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அன்றே
செந்தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நன்றே
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
உலக நாடுகள் பல கண்ட தமிழ் அறிஞர்
இந்திய மொழிகள் பல அறிந்த பண்டிதர்
இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில்
இனிய நட்பும் தொடர்பும் கொண்டவல்லவர்
பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில்
பண்பான உதவிகள் புரிந்த நல்லவர்
சிறுகதை நாவல் கட்டுரை என இவர்
செதுக்கியதில் ஈடு இணையற்ற இலக்கிய சிற்பி
மனதில் பூத்த கருத்துக்களைத் தொகுத்து
முதல் நாவலாக செந்தாமரை தந்த எழுத்தாளர்
கள்ளோ காவியமோ இரண்டாம் நாவல் மூலம்
கள்வரென அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்
புன்னகை அணிந்திருக்கும் பூ முகம் பெற்றவர்
புத்திக் கூர்மையால் சுடர் முகம் கொண்டவர்
அறுபத்தி இரண்டு வயதில் காலத்தால் அழியாத
எண்பத்தி அய்ந்து நூல்கள் எழுதிய சகலகலா வல்லவர்
மாநிலத்தில் முதல் மாணவனாகப் புலவர் பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் நூற்றாண்டு கடந்தும் நின்றவர்
-------------------------------------------------------------------------
மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு
நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வானதி பதிப்பகம் சென்னை.17 விலை ரூபாய் 60
தமிழ் உன்னை வளர்த்தது
தமிழை நீயும் வளர்க்க வேண்டும் .
----மு .வரதராசன்
தமிழ் அறிஞர் மு .வ. அவர்கள் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களுக்கு எழுதிய மடலின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .வைர வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ் அன்னைக்கு அணி சேர்க்கும் விதமாக நூல்களை எழுதி குவித்துள்ளார் .தமிழ்த்தேனீ இரா .மோகன். இவருடைய மற்றொரு நூலிற்கான அணிந்துரையில், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் , முனைவர் வெ.இறையன்பு . இ.ஆ.ப .அவர்கள் குறிப்பிட்டது. முற்றிலும் உண்மை. தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்கள் அருகில் அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் . 90 நூல்களை எழுதி குவித்தவரின் தரமான நூல் இது .மாமனிதர் தமிழ் அறிஞர் மு .வ.என்ற ஆளுமையின் திறமை ,நேர்மை, எளிமை உணர்த்தும் அற்புத நூல் .மு .வ . பற்றி தமிழ்த்தேனீ இரா .மோகன் எழுதிய ஆறாவது நூல் இது .இலக்கிய ஆறாகப் பாயும் நூல் இது .
நூலில் உள்ள கருத்துக்களில் பதச் சோறாக சில வரிகள் உங்கள் ரசனைக்கு .
"மு.வ .எழுத்துலகில் இவர் தொடாத துறையும் இல்லை .தொட்டுத் துலங்காத துறையும் இல்லை. என்னும் அளவிற்கு மு.வ . வின் படைப்பாற்றல் இமாலயச் சாதனையாக வெளிப்பட்டது .பொதுவாக கல்வி உலகில் மாணவர்களால் மதிக்கப் பெரும் பேராசிரியர்கள் உண்டு . மு.வ .வோ மாணவர்களை மதித்த பேராசிரியர் ஆவார் . தம் புதினங்கள் நான்கினுக்குத் தம்மிடம் பயின்ற முதலணி மாணவர்களான ம .ரா .போ .குருசாமி ,கா .அ.ச .ரகுநாயகம் ,சி .வேங்கடசாமி ,ரா .சீனிவாசன் ஆகிய நால்வரிடம் அணிந்துரை பெற்ற தாயுள்ளம் கொண்டவர் மு .வ ."
இந்த நிகழ்வைப் படித்ததும் வியந்துப் போனேன் .இப்படியும் பண்போடு வாழ்ந்துள்ளார்கள் என்று எண்ணி . .
நான்கு மாணவர்களின் பெயர்களை முன் எழுத்துக்களுடன் ஆவணப் படுத்தி உள்ளார் . நூல் ஆசிரியர் .மு .வ .அவர்களின் செல்ல ப் பிள்ளை என்பது உண்மை .ஒரு மகன் தந்தையின் பண்பை உற்று நோக்குவதுப் போல உற்று நோக்கி படைத்துள்ளார் .மு .வ .அவர்களின் உள்ளம் உயர்ந்த உள்ளம் யாருக்கும் வாய்க்காத நல் உள்ளம் .மாணவர்களை மதித்த உள்ளம் .
தமிழ் அறிஞர் மு .வ .அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் அவர்களின் நூல்களின் வாயிலாகவே மு .வ .என்ற இலக்கிய ஆளுமையைப் பற்றி அறிந்து அவரது படைப்புகளை படிக்கத் துவங்கினேன். ஒரு கதை எப்படி? எழுத வேண்டும் என்பதுப் பற்றி
மு .வ .அவர்களின் கதை படித்து அறிந்துக் கொண்டேன். இன்றைய எழுத்தாளர்கள் அனைவரும்
மு .வ .அவர்களின் படைப்புகளைப் படித்து அறிய வேண்டும் .பிற மொழிக் கலப்பு இன்றி, அழகு தமிழ் நடையில் தெளிந்த நீரோடைப் போன்று எழுதி உள்ளளார் .என்பதை அறிய முடிகின்றது .இந்த நூலின் மூலமாக.சங்கத் தமிழை எளிமைப் படுத்தி , இனிமைப் படுத்தி வழங்கியவர் மு .வ .என்பதை உணர்த்துகின்றது இந்நூல் .
எனக்கு மு .வ . அவர்களை நூல்கள் வழி அறிமுகம் செய்தவர் பேராசிரியர் இரா .மோகன்.கவி அரசர் தாகூரை மு .வ. அவர்களின் நூலைப் படித்து தான் அறிந்துக் கொண்டேன் .தாகூர் பற்றி கவிதை எழுதினேன் . மிகச் சிறந்த மனிதர் மு .வ . முதன் முதலில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டப்போது பாராட்டு விழா வேண்டாம் என்று மறுத்த பண்பாளர் மு .வ .மு .வ . அவர்களின் புகழைப் பறை சாற்றும் நூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள். இன்றைய இளைய தலைமுறை அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .
உன் நண்பன் யார் ? என்று சொல் நீ யார் ? நான் என்று சொல்கிறேன் .என்று சொல்வார்கள். அதுப்போல மு. வ .அவர்கள் யார் என்று சொல்ல அவர் யார் பற்றி நூல் எழுதி உள்ளாரோ ? அதை வைத்தே மு .வ .யார் என்று சொல்லி விடலாம் .
மு .வ .எழுதிய நூல்கள் .
காந்தி அண்ணல் ,கவிஞர் தாகூர் ,அறிஞர் பெர்னாட்சா,திரு .வி.க . இந்த நான்கு பெருமக்களையும் தமிழ் உலகிற்கு விரிவாக அறிமுகம் செய்து வைத்தவர் மு .வ .
"தேவையே இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது .தேவைகளைக் குறைத்து வாழலாம் ."மண் குடிசை ( பக்க எண் 52.) தமிழ் அறிஞர் மு .வ. அவர்களின் அத்தனை நூல்களையும் ஆராய்ந்துப் படித்து மலர்களில் தேன் எடுப்பதுப் போல எடுத்து இலக்கிய தேன் வழங்கி உள்ளார் .மு .வ. அவர்களின் வைர வரிகளை பக்க எண்களுடன் சான்றாக மிகத் துல்லியமாகப் எழுதி உள்ளார்கள் .
மு வ .வின் படைப்புகளான கள்ளோ ? காவியமோ ?, கரித்துண்டு , நெஞ்சில் ஒரு முள் போன்ற நூல்கள் ஆழ்ந்து படித்ததன் காரணமாக ,அந்த நூலில் உள்ள வரிகளுடன் நூல் எழுதி உள்ளார். இலக்கிய விருந்துப் படைத்துள்ளார் .
மதுரையில் காந்தி அருங்காட்சியத்தில் மு .வ அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை மிகச் சிறப்பாக ,கோலாகலமாக, மதுரை வியக்கும் வண்ணம் ஒரு நாள் முழுவதும் நடத்தி மு வ .வின் புகழை உலகு அறிய வைத்தவர் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி செயல் பட்டும் வருகிறார் .விழாவில் முழுவதும் இருந்து ரசித்தேன் நான் .
மு .வ .பற்றிய பிம்பம் இமயத்தை வென்றது .
சூரியனின் இதயத்திலிருந்து சிந்திக்கவும்
நிலவின் உதடுகளிலிருந்து பேசவும்
வல்லவர் மு .வ .
---- ஈரோடு தமிழன்பன்
மு .வ .பற்றி இப்படி மற்றவர்கள் எழுதியதைத் தேடிப் பிடித்து நூலில் ஆவணப் படுத்தி உள்ளார். இந்த நூலில் மு .வ. அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியலும் ,நூல் ஆசிரியர் பேராசிரியர்
இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியலும் உள்ளது .படித்து பிரமித்துப் போனேன். இலக்கிய ஆர்வலர்கள் .ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல். தரமான நூலை பதிப்பித்த வாதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .இந்த நூல் மு .வ .என்ற மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக ஒளிர்கின்றது .
-----------------------------------------------------------------------------
“டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “
பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி
முனைவர் வா.மு.சே. ஆண்டவர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
சேதுச்செல்வி பதிப்பகம்,26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை-93.
அலைபேசி : 94445 51750, vimalaandu@gmail.com விலை : ரூ. 150
*****
இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது. இந்த நூலை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் முனைவர் பா. கந்தசாமி மற்றும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வர் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் ஆகிய இருவரும் தொகுத்து நூலாக்கி உள்ளனர். அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையினை கட்டுரை வடிவில் வடிப்பதற்கு உழைத்த உழைப்பை உணர முடிகின்றது. இலக்கிய இமயம் மு.வ. அவர்களின் புகழ் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக இந்த நூல் ஒளிர்கின்றது.
இலக்கிய இமயம் மு.வ. பற்றி அறிஞர் அண்ணா சொன்னவை. டாக்டர் மு.வ. அவர்கள் தம்முடைய எழுத்தின் மூலம் பேச்சின் மூலம் தாமும் சிந்திப்பார். அவருடைய பேச்சையும் எழுத்தையும் பெற்றவர்கள் தாமும் சிந்திக்கத் தொடங்குகின்ற வகையில் அந்த எழுத்துக்கும் பேச்சுக்கும் தனிச்சிறப்பு இருக்கிறது.
டாக்டர் மு.வ. அவர்களைப் பார்த்துவிட்டு அவர்களுடைய ஏடுகளைப் படித்தால் இந்த சாந்தபுருசரா இவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களையும் எழுதி இருக்கிறார்? உண்மை தானா? என்று எண்ணிப் பார்ப்பார்கள். அப்படித் தோற்றத்திலேயும், நடைமுறையிலும், தன்மையிலேயும் அமைதியே உருவாக இருந்து கொண்டு, அந்த அமைதியைத் துணைக் கொண்டு, ஆர்வத்தை உடன் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக பல அரிய கருத்துக்களை அவர் தந்திருக்கிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றல்மிகு சொல்வலிமையினால், மு.வ. அவர்களை பார்த்திராத இன்றைய இளைய தலைமுறையினருக்கு காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். மு.வ. அவர்கள் பற்றிய பிம்பத்தை மேலும் மேலும் உயர்த்தும் விதமாக நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.
மு.வ. அவர்களின் படைப்பை படித்தவர்கள், ஆராய்ந்தவர்கள், பழகியவர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் என தேடிப் பிடித்து, தகவல் தந்து, வேண்டுகோள் விடுத்து, கட்டுரைகள் பெற்று நூலாக்கி உள்ளனர். நூலில் மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன. முத்தாய்ப்பாக உள்ளன. முத்திரை பதிக்கும் விதமாக உள்ளன.
மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரை விற்பனையில் சாதனை படைத்த உரை. அவருக்கு திருக்குறள் மீது அளப்பரிய பற்றும், பாசமும், புலமையும் உண்டு. அவர் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சிறப்பாக புலவர்
பா. வீரமணி எழுதி உள்ளார்கள்.
“தமிழகத்தில் திருக்குறளைப் போதித்தவர்களில், பரப்பியவர்களில் டாக்டர் மு. வரதராசனார் தலையாயவர். தமிழ் படிக்கும் மாணவ மாணவியரிடத்து மட்டுமல்லாமல் சாதாரணப் பாமரரிடத்தும் திருக்குறளைக் கொண்டு சென்றவர்”.
மு.வ.வின் இலக்கியப் பணி : முனைவர் தெ. ஞானசுந்தரம்
பெருந்தகை மு.வ. தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் அறிந்தவர். எனினும் சங்க இலக்கியம், திருக்குறள் சிலம்பு ஆகியவற்றில் தோய்ந்தவர் என்றும் அவற்றில் அரிய ஆய்வு முடிவுகளைக் கண்டு அறிந்தவர் என்றும் கூறலாம்.
மொழியியல் அறிஞர் மு.வ. : பேராசிரியர் ச. வளவன்
தமிழ் இலக்கியத்தையும், தமிழர் நலனையும், தமில் மொழியினையும் போற்றும் வகையிலும், போற்றவும் காக்கவும் துணிந்தவர் மு.வ. சங்க இலக்கியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்றவர் அவர். அவற்றின் சிறப்புகளை நூல்களில் காட்டியவர் அவர்.
மு.வ.வும் மொழி நடை இயல்பும் : முனைவர் இராம. குருநாதன்,
மு.வ. காலத்திற்கு முன் புதினங்கள் எழுதிட, பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்ற பேராசிரியர்கள் படைப்பிலக்கியத்தில் வெற்றி பெற்றதாக கருத இயலாது. அப்படியே வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் நடை கடுநடையாக இருந்தது. மு.வ. தம் எழுத்து யாவரும் உணர்ந்து படிக்கக் கூடியதாகவும், எளிமை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கரை செலுத்தினார்.
மு.வ.வும் திராவிட இயக்கமும் என்ற கட்டுரையை
திரு. க. திருநாவுக்கரசும்,
மு.வ.வும் பாரி நிலையமும் என்ற கட்டுரையை
திரு. செ. அமர்ஜோதி அவர்களும்,
மு.வ.வும், ஈழ மண்ணும் என்ற கட்டுரையை
திரு. செ. கணேசலிங்கமும் எழுதி உள்ளனர்.
தொகுப்பாசிரியரகளில் ஒருவரான பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் எழுதியுள்ள மு.வ.வும் பழந்தமிழ் இலக்கியமும் என்ற கட்டுரையில் இருந்த சிறு துளிகள்.
“தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு ஓர் இலட்சிய நெறியில் வாழ்ந்தவர் மு.வ. அவர்கள். மனித இதயத்தின் உணர்வுகளையும், இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும் நெருங்கிப் பிணைப்புடையனவாய் இனிய உறவுடையனவாய் மு.வ.கருதினார். இவற்றை மேனாட்டு அறிஞர்களின் அரிய ஆய்வுக் குறிப்புகளுடன் நிறுவினார்.
இலக்கிய இமயம் மு.வ. என்ற மிகப்பெரிய ஆளுமையாளர் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூல். வருங்கால சந்ததிகளும் மு.வ. பற்றி அறிந்து கொள்ள ஆவணப்படுத்திய அற்புதமான நூல். மு.வ. வின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடமும் ஒரு கட்டுரை வாங்கி இருக்கலாமே என்று தோன்றியது. தொகுப்பாசிரியர் இருவருக்கும் பாராட்டுக்கள்.
---------------------------------------------------------------------------------------------------
இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் )
நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன்.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வெளியீடு சாகித்ய அகதமி விலை ரூபாய் 40.
மு .வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் வரலாறு .அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு .அவரது குண நலன்கள் என அனைத்தும் நூலில் உள்ளது .
நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .மு .வ .அவர்களை நேரில் பார்க்காத என் போன்ற பலருக்கும் ,இளைய சமுதாயதிற்கும் மு .வ .பற்றிய பிம்பம் மனதில் பதியும் படியாக உள்ளது .நூலில் 5 கட்டுரைகள் உள்ளது .பின் இணைப்பாக 4 பகுதிகள் உள்ளது. மிகச் சிறந்த ஆய்வு நூலாக உள்ளது .ஒரு மாணவர் ஆசிரியருக்கு செய்த மரியாதையாக மு .வ . வின் மாணவர் பொன் சௌரி ராஜன்எழுதியுள்ள நூல் .நூலின் முதல் வரிகளை வாசித்துப் பார்த்தவுடன் நூல் முழுவதும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .
" பறந்துபோய் மலையுச்சியை அடைவோம் என்று சொல்லுகின்றவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பது வீண் .படிப்படியாக நடந்து ஏறி மலை உச்சியை அடைகின்றவர்களைப் பின் பற்றுவதே கடமை "( காந்தி அண்ணல் ப .8)என்று ( மு .வரதராசன் ) மு .வ . காந்தி அண்ணல் பற்றி எழுதிய கருத்து அவருக்கும் பொருந்தும் .மணி மணியாக ,நாள் நாளாக ,ஆண்டு ஆண்டாகத் திட்டமிட்டுக் கல் மேல் கல் வைத்து வீடு கட்டுவது போல இடையறாது உழைத்துப் படிப்படியாக முன்னேயறிவர் மு .வ . மு வ .அவர்கள் வேலம் என்னும் சிற்றூரில் 25.4.1912 அன்று பிறந்தார் .அவரது வாழ்க்கை வரலாறு உணவு நெறி ,இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்தவர் மு .வ .நன்றியோடு வாழ்ந்தார் .புகழை வேண்டாம் என்று சொல்லியபடி வாழ்ந்து காட்டியவர் .இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .
மு வ .அவர்களின் வாழ்வில்அவருக்குள் மாற்றம் நிகழ்த்திய ஒரு நிகழ்வு நூலில் உள்ளது .
" திருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன் .அந்த காலத்தில் என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு .இருந்தது என்னை விட படித்த பெரியண்ணன் ( சவுரி ராசன் ஜேசுதாசன் ) சின்னண்ணன் ( பாரஷ்டர் பேட்டன் ).ஒரு நாள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்துக் கையலம்ப எழுந்தேன் .குழாயருகே சென்ற போது நான் மட்டும் வெறுங்கையோடு நிற்பதையும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக கையில் ஏந்தி நிற்பதையும் உணர்ந்தேன் .சின்னண்ணன் கையில் இரண்டு தட்டுகளைக் கண்டேன் .அவரிடம் என் தட்டை பெற முயன்றேன் .அவர் இரண்டையும் உமி இட்டுத் தேய்க்கத் தொடங்கி என்னிடம் கொடுக்க மறுத்து விட்டார் .
அன்று என் வாழ்வில் பெரிய திருப்பம் நேர்ந்தது .கல்வி பற்றிய செருக்கு என் உள்ளத்தில் சுவடு தெரியாமல் அழிந்தது .மூளையால் உழைக்காமல் ,கை கால் கொண்டு உழைக்கும் எவரைப் பார்த்தாலும் அவர்களும் என்னைப் போன்ற மனிதர்களே என்று மதிக்கும் மனப்பான்மை அமைந்தது .
( மு .வ .வின் சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ஆனந்த விகடன் 10.6.1973) இந்த நிகழ்வை படிக்கும் வாசகர்களின் மன செருக்கை
அழிக்கும் விதமாக உள்ளது .இது போன்ற பயனுள்ள பல தகவல்கள் நூலில் உள்ளது .
மு .வ .காலத்தைக் கண்ணாகக் கருதியவர் மு .வ .வின் வெற்றி ரகசியம் இதுதான் ." காலந்தவறாமைக் கடவுள் மனிதனுக்கு வகுத்தளித்த அடிப்படை அறமாக மேற்கொண்டு பணியாற்றியவர் .இதனால்தான் நல்ல ஆசிரியராகவும் ,சிறந்த தந்தையாகவும் ,உற்றுழி உதவும் நண்பனாகவும், சமுதாயத் தொண்டனாகவும் அவர் விளங்க முடிந்தது .
பொன்னை விட மேலான நேரத்தை எப்படி மதிக்க வேண்டும் .எப்படிபயனுள்ளதாக்க வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் பயனுள்ள நூல் இது. தரமான பதிப்பாக பதிப்பித்த சாகித்ய அகதமிக்கு பாராட்டுக்கள் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்
மு .வ .
இவர் கற்றன இவ்வளவுதாம் என்று வரையறுக்க முடியாத அளவு கற்றமை ,மாணாக்கர் எழுப்பும் வினாக்களுக்கு விடையறுப்பதில் பொறுமை. மாணாக்கரது உழைப்பிற்கு ஏற்ப உதவுதல் இவற்றில் நிலம் போன்று விளங்கினார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் நூலில் உள்ளது .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பலர் இன்று ஆசிரியப் பணியோடு என் பணி முடிந்தது என்று வாழ்ந்து வருகின்றனர் .மு .வ .அவர்களைப் போல இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பலர் இன்று ஆசிரியப் பணியோடு என் பணி முடிந்தது என்று வாழ்ந்து வருகின்றனர் .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மு .வ .அவர்களைப் போல இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .
மு வ .ஆர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 85 .மு வ .அவர்கள் அவர் மட்டுமல்ல தன் மாணாக்கர்களையும் இலக்கியவாதிகளாக உருவாக்கி உள்ளார்.மு வ .அவர்களின் செல்லப் பிள்ளை தமிழ்த்தேனீ முனைவர் மோகன் அவர்கள் பேராசிரியராகப் பனி புரிந்து கொண்டே நூல் ஆசிரியராக 85 நூல்களைத் தாண்டி விரைவில் 100 நூல்களை தொட உள்ளார் .தமிழ்த்தேனீ முனைவர் மோகன் அவர்கள்எழுதிய மடல்களுக்கு மு வ . பதில் மடல் இட்டு தெளிவு தந்த தகவல் நூலில் உள்ளது.
தனது படைப்புகளில் மனித நேயத்தை வலியுறுத்தி ,மனிதனை நெறிபடுத்தும் பணியினை இலக்கியத்தால் செய்த சகலகலாவல்லவர் மு .வ. என்பதை மெய்பிக்கும் நூல் .அவரது நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் நூல் உள்ளது .
திருக்குறளுக்கு உரை வந்தது, வருகின்றது ,வரும் .ஆனால் மு .வ .அவர்களின் திருக்குறள் உரைக்கு இணையான ஒரு உரை இது வரை வரவும் இல்லை .இனி வரப்போவதும் இல்லை .மு வ .அவர்களின் தமிழ்ப் புலமைக்கு மகுடமாகத் திகழ்வது அவரது திருக்குறள் உரை.
இந்த நூலில் மு வ .அவர்களின் பாத்திரங்களின் பெயர்கள் ,உரையாடல்கள் மேற்கோள் காட்டி அவரது ஆற்றலை நன்கு உணர்த்தி உள்ளார் .சாகித்ய அகதமி பதிப்பாக மு .வ .அவர்கள் எழுதிய " தமிழ் இலக்கிய வரலாறு " என்ற நூல் 27 பதிப்புகள் வந்துள்ளது .இன்னும் பல பதிப்புகள் வரும் .
மு வ .அவர்கள் படைப்பாளியாக மட்டுமன்றி இலக்கிய திறனாய்வாளராகவும் சிறந்து விளங்கி உள்ளார் .கட்டுரை நூல்கள் மொழியியல் நூல்கள் எழுதி உள்ளார் .தான் வாழ்ந்த நேரத்தை ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கி படைத்தான் காரணமாக மு வ .அவர்கள் உடலால் உலகை விட்டு மறைந்த போதும் படைப்புகளால் இன்றும் வாழ்கின்றார் .என்றும் வாழ்வார் .அவர் எழுதிய இறுதி நூல் " நல்வாழ்வு "அவரது நல் வாழ்வை முடித்துக் கொண்டார் .நம் மனங்களில் வாழ்கிறார் .மு .வ .என்ற இலக்கிய ஆளுமையை இளைய தலைமுறைக்கு நன்கு அறிமுகம் செய்து வைத்த
நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கும் சிறப்பாக வெளியிட்டுள்ள சாகித்ய அகதமிக்கும் பாராட்டுக்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக