ஆறோடும் நீரோடும் ! கவிஞர் இரா .இரவி !
ஆறோடும் நீரோடும் போராடியே உழவர்களின்
ஆருயிர் பிரிந்து வருவது வேதனை வெட்கம் !
ஆற்றில் வெள்ளம் வருகின்றது சிலநேரம்
ஆற்றுப்படுத்திச் சேமிக்க வழி இல்லை !
ஆற்றுமணல் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும்
அந்நியர் குளிர்பானக் கொள்ளை ஒழிக்க வேண்டும் !
விவசாயத்தின் உயிர் மூச்சு தண்ணீர் என்பதால்
விவசாயம் பொய்த்திட மூச்சை விடுகிறான் விவசாயி !
உயிர் வாழ உணவு வேண்டும் உணருங்கள்
உணவு வழங்க உழவன் உயிர் வாழ வேண்டும் !
விவசாயிகளின் எண்னிக்கை குறைவது இழுக்கு
விவசாயம் பெருகினால்தான் நாடு செழிக்கும் !
உழவுத் தொழிலே சிறந்தது என்று அன்றே
உரைத்தார் உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் !
இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று
அன்றே உரைத்தார் உத்தமர் காந்தியடிகள் !
முதுகெலும்பை முறிக்கும்படி விவசாயத்தை
மண்ணில் அழித்து வருகின்றனர் சிலர் !
விவசாயம் வாழ விவசாயி வாழ சிந்தியுங்கள்
விவேகமாக திட்டங்கள் தீட்டி செயல்படுத்துங்கள் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னால்
கண்டுகொள்ளாமல் இருப்பது முறையோ ?சரியோ ?
காவிரி மேலாண்மை வாரியம் நியமித்தால்
காவிரிக்காகச் சண்டைப் போட அவசியம் இல்லை !
வருடா வருடம் கருநாடகத்திடம் கெஞ்ச வேண்டாம்
வருடா வருடம் கருநாடகம் மிஞ்ச வேண்டாம் !
பகிர்ந்து உண்டு வாழ வழி செய்திட வேண்டும்
பகிர்தலில் நல்ல நியாயம் இருக்க வேண்டும் !
முல்லை பெரியாறு நீர் உயர்த்திட வேண்டும்
முரண்டு பிடிக்கும் கேரளா திருந்திட விடும் !
புதிதாக யாரும் இனி அணை கட்டக்கூடாது
பழைய அணைகளை பராமரித்தாலே போதும் !
உணவு வழங்கிடும் உழவன் தண்ணீரின்றி
உயிர் விடுவது உலகிற்கு அவமானம் ! வெட்கம் !
கருத்துகள்
கருத்துரையிடுக