திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
திசைகளாகும் திருப்பங்கள் !
(தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்)
(தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்)
நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா !
அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
மதம் பரப்ப வந்த ஜி.யு.போப் அவர்கள் தமிழ் பரப்பியது போலவே, பல அருட்தந்தையர் மதம் தாண்டி தமிழ் மொழியின் மீது ஈர்ப்புக் கொண்டு, பற்றுக் கொண்டு தமிழ் வளர்த்து வருகின்றனர்.
அருட்தந்தை ஆ. லொயோலா அவர்கள். பரபரப்பான ‘அருட்தந்தை’ பணிகளுக்கிடையே இலக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள் வடித்துள்ளார் இந்த நல்ல நூலிற்கு அணிந்துரை வழங்கிட தந்து உதவிய இனிய நண்பர் முனைவர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் அவர்களுக்கு முதல் நன்றி.
இந்த நூலில் மொத்தம் 20 கட்டுரைகள் உள்ளன. முத்தாய்ப்பான நல் முத்திரைப் பதிக்கும் கட்டுரைகள் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல். இன்றைய மாணவர்கள் பலர், பாடம் தாண்டி பொது நூல்கள் படிப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இந்த நூலை கல்லூரிக்கு பாடமாக்கினால் வேறு வழியின்றி படிக்க நேரிடும். அவர்கள் மனதில் நல்விதை விதைத்து, தன்னம்பிக்கை வளர்த்து, நேர்வழியில், அறவழியில் நடந்து, முன்னேறி சாதித்து, சிகரம் தொட்டிட உதவிடும் மிகச் சிறந்த நூலாகும் இந்நூல்.
அருட்தந்தையாக இருந்து கொண்டு, நாளிதழ்கள், இதழ்களில் வரும் தன்னம்பிக்கை தொடர்பான தகவல்களைத் திரட்டி கட்டுரைகள் வடித்துள்ளார். பாராட்டுகள். படித்து விட்டு மனதிற்குள் பாராட்டிய பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன.
முதல் கட்டுரையான “மாத்தி யோசி” யில், பீகார் மாநிலத்தில் பிறந்த தஷ்ரத்மான்ஜி” என்ற "மலை மனிதர்" தனிஒரு மனிதனாகவே மலையைத் தகர்த்து பாதை அமைத்து ஊருக்கு உதவிய நிகழ்வை எடுத்து இயம்பி கட்டுரை வடித்துள்ளார்.
கட்டுரையின் தொடுப்பு, எடுப்பு, முடிப்பு மூன்றும் முத்தாய்ப்பு. முதல் கட்டுரையின் முடிப்பு, பதச்சோறாகப் பாருங்கள்.
"நினைப்பது ஒன்று. நடப்பது இன்னொன்று.
நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக் கொள்வோம்.
நாம் நினைப்பது ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.
தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாதே."
நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக் கொள்வோம்.
நாம் நினைப்பது ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.
தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாதே."
சென்னை மழையில் மதங்கள் தாண்டி மனிதநேயத்தோடு உதவிய யூனுஸ் பற்றி எடுத்து இயம்பி அற்புதக் கட்டுரைகள் வடித்துள்ளார். நேர்மறை சிந்தனை விதைக்கும் விதமாக, நேர்மையை, அறத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள், பொன்மொழிகள், திருக்குறள் என பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். மனச்சோர்வு, கவலை உள்ளவர்கள் இந்த நூல் படித்தால் அவற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்து சாதனைப் படைப்பார்கள் என்று உறுதி கூறலாம்.
“மனித நேயத்தோடு வாழ்ந்துபார்.
மனிதப்பிறவியின் மகத்துவம் புரியும்”.
மனிதப்பிறவியின் மகத்துவம் புரியும்”.
"தன்னைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்தவரைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் ஓர் அபாயகரமான தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது”.
உண்மை தான். சில இளைஞர்கள் எந்தவித அக்கறையுமின்றி, இலட்சியமுமின்றி, மதுக்கடைகளில் அடிமையாகி வரும் அவலம் நாட்டில் அரங்கேறி வருவதைக் கண்டு வருத்தமுற்று. அவர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக கட்டுரைகள் வடித்து உள்ளார். அப்படிப்பட்டவர்கள் இந்நூல் ஆழ்ந்துப் படித்தால் திருந்துவது உறுதி என்று உறுதியிட்டு கூறலாம்.
வெள்ளை என்றால் உயர்வு, கருப்பு என்றால் தாழ்வு என்ற தவறான கற்பிதம், உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றது. அந்தத் தவறான கருத்தைத் தகர்க்கும் விதமாக “நிறமே நிரந்தரம்” கட்டுரை உள்ளது. கருப்பு என்பதும் நிறம் தான். தாழ்வு மனப்பான்மை கூடவே கூடாது என்று நன்கு வலியுறுத்தி உள்ளார்.
“அறிதிறன் பேசி அடிமைத்தனம்” (SMARTPHONE ADDICTION) கட்டுரைமிக நன்று. காலத்திற்கேற்ற கட்டுரை. இன்றைய இளைய தலைமுறை அடிமையாகி வருவதும் உண்மையே. உடலுக்கு ஏற்படும் தீங்குகளை இழிவாக எடுத்து இயம்பி. அதிலிருந்து விடுபட ஆலோசனைகள் வழங்கி உள்ளார். படிக்கும் வாசகர்கள் மனதில் மாற்றம் உருவாக்கும் நல்ல நூல்.அறிதிறன் பேசியை ஊறுகாய் போல தொட்டுக் கொள்ள வேண்டும் .சோறு போல உண்ணக் கூடாது .என்பதை உணர்ந்து ,அளவோடு பயன்படுத்துவது சிறப்பு .
"வன்முறையில்லா உலகம்" கட்டுரையில் வன்முறைகளின் வகைகளை எடுத்து இயம்பி வன்முறை இல்லாத அமைதி பூங்காவாக மாறிட அறிவார்ந்த அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
“கருணையுடன் இருப்பது, அகிம்சையைக் கடைப்பிடிப்பது, தேவையில் இருப்போருக்கு உதவுவது, அன்பை விதைப்பது, அறத்தை அறிவுறுத்துவது, மானிடத்தின் மகத்துவத்தை போற்றுவது, இயற்கையைப் பேணிக்காப்பது. பிறர்நல அக்கறை பகிர்வு மனப்பான்மை இருக்கக் குணம், நட்பு கொள்ளுதல், உடனிருக்கும் உணர்வு, தோழமை உணர்வு, நல்லிணக்கச் செயல்பாடுகள்."
உலகப் பொதுமறை திருக்குறளில் குறிப்பிட்டது போல மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட அறவுரையை அறிவுரையாக வழங்கி உள்ள நூல்.
‘எம் மொழியே எம் உயிரே’ என்ற கட்டுரையில், உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார்.
‘தாய்மொழி எம் உயிர்மொழி’ என்கிறார். கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி தமிழருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“மிகப் பெரிய அவலம் என்னவென்றால் தமிழை யாரும் வந்து அழிக்கவில்லை. தமிழனே அழித்துக் கொண்டிருக்கிறான்”.
பொருத்தமான ஹைக்கூ ஒன்றை மேற்கோள் காட்டி உள்ளார் .
“மாடு கூட அம்மா என்கிறது
பச்சைத் தமிழன் பிள்ளையோ
மம்மி என்கிறது.”
தமிழர்களின் இல்லங்களில் இருந்து மம்மி, டாடி என்ற சொற்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் பரப்பிடும் தமிங்கிலம் ஒழிந்து, நல்ல தமிழ் பேசிட தமிழர்கள் முன்வர வேண்டும். இப்படி பல சிந்தனைகளை விதைத்தது கட்டுரை.
இப்படி நூல் முழுவதும் 40 கட்டுரைகளும் சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக நல்ல பல தகவல்களின் சுரங்கமாக மகிழ்வான நிகழ்வுகள் பலவற்றை நினைவூட்டும் விதமாக தன்னலமின்றி பொதுநல நோக்குடன் நேர்மையான வழியில் தாய்மொழிப் பற்றுடன் வாழ வழி சொல்லி உள்ள நூலை நூலாசிரியர் அருட்தந்தை ஆ. லொயோலா அவர்களுக்கு பாரட்டுகள். வாழ்த்துகள்.
இதுபோன்ற நல்ல நூல்களை தமிழ்ச் சமூகத்திற்கு தொடர்ந்து நல்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கின்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக