புயலெனப் புறப்படு பெண்ணே ! கவிஞர் இரா .இரவி !
சமையல் அறையில் முடங்கியது போதும் பெண்ணே
சாதிக்கப் பிறந்தவள் நீ புயலெனப் புறப்படு பெண்ணே !
தென்றலாய் மென்மையாய் இருந்தது போதும்
புயலாய் வன்மையாய் புறப்படு பெண்ணே !
காலம் காலமாய் ஏமாந்தது போதும் பெண்ணே
கண்ணே மணியே என்றால் மயங்காதே பெண்ணே !
பிள்ளைப் பெறும் இயந்திரமல்ல பெண்கள் என்று
பெரியார் அன்றே உரக்க உரைத்தார் நன்றே !
பட்டுப் புடவைகள் மீதான ஆசையை அழித்திடு
பட்டுப் பூச்சிகளை வாழட்டும் பெண்ணே !
தங்க நகை மீதான ஈடுபாட்டை ஒழித்திடு
தன்மானத்தோடு வாழ்ந்திட வழிகள் கண்டிடு !
அலங்காரங்களில் நேரம் கழித்தது போதும் !
ஆக்க வழிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் !
போகப் பொருள் அல்ல பெண்கள் என்பதை
போதை ஆண்களுக்குப் போதித்துப் புறப்படு !
விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே பெண்கள்
விண்வெளி சென்று சாதித்து உள்ளனர் இன்று !
ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராகப் பெண்கள்
அனைத்துத் துறையிலும் சாதித்திட வேண்டும் !
முப்பத்தி ஐந்து சதவிகிதம் கெஞ்சியது போதும்
முன்மொழிய வேண்டும் இனி ஐம்பது சதவிகிதம் !
பெண்களுக்கான இட ஒதிக்கீடு நிறைவேற்ற மறுத்தால்
பெண்களின் வாக்கு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றிடு !
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புறப்படு
பாரதிதாசன் கண்டப் பெண்ணாகப் புறப்படு !
வீர மங்கையரை மனதில் நிறுத்தி புறப்படு
வீராங்கனையாக வீர நடையிட்டு புறப்படு !
பலவீனமானவள் அல்ல பெண் பலமானவள்
பார் அறிந்திட பறை சாற்றி புறப்படு பெண்ணே !
புலியை முறத்தால் விரட்டிய இனத்தில் வந்தவளே
புவியை ஆளப் பிறந்தவளே புயலாக புறப்படு !
கருத்துகள்
கருத்துரையிடுக