ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராச நகர், சென்னை-600 017.
பக்கங்கள் : 154, விலை : ரூ. 100.
*****
கவிஞர் ஒரு காலக் கண்ணாடி என்பதற்கேற்ப அந்தந்தக் காலத்துக் கவிதைகள், அந்தந்தக் காலத்தைப் படம்பிடித்து வைத்துள்ளன. சங்கக் காலம் முதல் இன்றுவரை தாம் கண்ணுற்ற, கேள்விஞானத்தால் உணர்ந்த, கற்றறிந்த, அனுபவித்த நல்லவை-அல்லவை என்று துறைதோறும், தரைதோறும் பரவி கிடப்பவற்றைச் சுட்டி அவரவர் கோணங்களில் ஓலைச்சுவடியில் தொடங்கிய மரபுக்கவிதையிலிருந்து மகாகவி பாரதியார் அறிமுகப்படுத்திய வசனக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கு என்ற அய்க்கு வரை மட்டுமன்றி, லிமரைக்கூ, சென்ரியூ, ரென்கா, லிமர்பூன், பழமொன்ரியூ என்றும், புதிய முயற்சியென தன்னைத்தானே பிதற்றிக் கொண்டு, ‘டுவிட்டூ’ என்ற இருவரிக் கவிதை, மூன்றுவரிக் கவிதையில் ஈற்றடி ஒரே சொல் கொண்ட ‘மூசொ’ என்ற கவிதை, ஒரேவரிக் கவிதை என்று எழுதி வந்துள்ளனர், எழுதுகின்றனர்.
இன்று தமிழ்க் கவிஞர்களோ, அல்லது பிறமொழிக் கவிஞர்களோ கையாளப்படும் அய்க்கு போன்ற நவீன கவிதைகள் அத்துணையும் சப்பாணிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட்தில்லை. புதிய முயற்சி என இக்காலத்தவர் கண்டுபிடித்ததுமல்ல, காலங்காலமாக ஓலைச்சுவடியின் காலந்தொட்டு தமிழிலக்கண யாப்பு ஒட்டி திருக்குறள் என்ற ஒன்றே முக்கால் வரியில் அமைந்த குறள்வெண்பா, ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் என்ற ஒருவரிக் கவிதை போன்று ஆயிரக்கணக்கானோர் எழுதிய ஒருவரி, இருவரி, மூவரிக் கவிதைகளின் அய்க்கு தான் சப்பானுக்கு ஏற்றுமதியாகி, மீண்டும் தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் தமிழ்க் கவிதை உலகம் வியந்து நோக்குமளவில் விரிந்து பரந்துள்ளதை மறுக்க இயலாது.
எனினும் கவிதை என்று எழுதப்படுபவை எல்லாம் கவிதை தானா? கவிதை என்பது எது? கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான அளவுகோல் உண்டா? என்ற வினாக்கள் நெடுங்காலமாக உலவி வருவதும், சிலர் கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று விடைகளாக கவிதை எழுதுவதும் தொடர்கதையாகவே தொடர்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் கவிதை என்றால் வாசிக்கின்ற ஒவ்வொருவரின் நெஞ்சிலும் ஆழமாக விதை ஊன்றப்பட்டு முளைத்து அழிவென்னும் வெளிச்சம் படர வேண்டும். அதாவது வாழ்வியல் வெளிச்ச விதையாகப் பதியமிடும் கவிதைகள் கவிதையாகும்.
இக்கண்ணோட்டத்தில் நூல் முழுக்க ஒவ்வொரு கவிதையும் வெளிச்ச விதைகளாக விதைக்கப்பட்டிருக்கும் நூல் தான், “அய்க்கு முதற்றே உலகு” ஆகும். இந்நூலாசிரியர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களால், “புலிப்பால் இரவி” என்றும், தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களால், “அய்க்கு திலகம்” என்றும், மற்ற எல்லோராலும் “அய்க்கு இரவி” என்றும் விளிக்குமளவிற்கு பேறு பெற்றக் கவிஞரிவர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்காரரான இரா. இரவி ஆவார்.
இவரின் பதினைந்தாவது நூலாக இந்த “அய்க்கு முதற்றே உலகு” மலர்ந்துள்ளது. இந்நூலை கலாம் நாற்பது என்று முதல் பகுதியாக வைத்து, பழமொன்ரியூ என்ற பகுதியை ஈற்றாக வைத்து முப்பது பகுதிகளால் வடிவமைத்துள்ளார். இந்நூலிலுள்ள அத்துணைக் கவிதைகளும், வீரிய வெளிச்ச விதைகளாக உள்ளன. எனினும் என்னை மிகவும் ஈர்த்து, என் கவிதைகளோடு உறவு கொண்டு என் கவிதைகளை எனக்கு நினைவூட்டும் கவிதைகளிலிருந்து சில கவிதைகளை நயம்பட உரைக்க முயல்கிறேன்.
கற்றோர், கல்லாதவர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பாகுபாடு இருப்பினும் முரண்படுவதில் மட்டும் எல்லோரும் எப்பொழுதும், எல்லாவற்றிலும் முரண்பட்டு ஒழுகும் மனித சமுதாயத்தில் முரண்படாமல் வாழ்ந்த அறிவிலறிஞர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பற்றியும், சமுதாயம் முரண்படாமல் கடைபிடிக்க வேண்டிய முத்தான மூன்று குணங்களைப் பற்றியும் நூலின் முதல் கவிதையாக,
மூன்றிலும் முரண்பாடில்லை
பேச்சு எழுத்து செயல்
கலாம்!
பேச்சு எழுத்து செயல்
கலாம்!
என்று முத்தாய்ப்புக் கவிதையாக அமைத்துள்ளார். இஃதே போன்று “தன்னம்பிக்கை முனை” என்ற பகுதியிலும் முதல் கவிதையாக,
கைகளின்றியும் வாழலாம்
கால்களின்றியும் வாழலாம்
வாழ இயலாது தன்னம்பிக்கையின்றி!
கால்களின்றியும் வாழலாம்
வாழ இயலாது தன்னம்பிக்கையின்றி!
என்று இடம்பெற்று கையாலாகாத தற்குறிகளாய்ச் சுருங்கி துவண்டு கிடப்போரை வீறு கொண்டு எழுந்திட தன்னம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.
இல்லை
கிழக்கும் மேற்கும்
சூரியனுக்கு!
கிழக்கும் மேற்கும்
சூரியனுக்கு!
உண்மை இல்லை
தேய்வதும் வளர்வதும்
நிலவு!
தேய்வதும் வளர்வதும்
நிலவு!
என்று இரண்டு கவிதைகளை வைத்து, அறிவியல் கவிதைகள் அருகியுள்ள காலத்தில், கவிஞர்கள் எல்லோரும் சங்கக் காலத்திலிருந்து என் வரையில் கரடுமுரடான ஒழுங்கற்றக் கோள்களை இயற்கை என்ற பொதுமையில் முரண்பாடுகளை அழகியலாகப் பாடி வெறும் கற்பனைக் கவிதைகளைக் குவித்துள்ளோரிடையே உண்மையான அறிவியலைச் சுட்டியுள்ள விதம் மிக அருமை.
பூக்காமல் காய்ப்பதால்
இனிப்பு அதிகமோ?
பலா!
இனிப்பு அதிகமோ?
பலா!
என்ற இந்த அய்க்கு ஆய்வுக்குரியதாகும். பலா பூக்குமா? அல்லது பூக்காமல் காய்க்குமா? என்று இதுவரை எவருமே கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் இக்கவிதையை வாசித்தவர்கள் பலாமரத்தைக் காண நேர்ந்தால், நின்று பூக்கள் இருக்கா, இல்லையா? என்று ஊன்றி கவனிப்பார்கள். அந்தளவுக்கு வினா தொடுத்து விடையும் பகர்ந்து சிந்தனையைத் தூண்டியுள்ளார். பூத்து, காய்த்துக் கனியாகும் எல்லா செடி, கொடி மரங்களின் பழங்களிலும் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு உண்டு. பூப்பதாலேயே இனிப்பைக் கெடுக்கும் பிற சுவைகளும் இயல்பாகவே கலந்து விடுகிறதோ? பூக்காத்தாலேயே தேனொத்த கூடுதலான இனிப்பைப் பலாமரம் தருகிறதோ? என்ற ஐயம் தானாக எல்லோர் மனதிலும் எழுந்திடவே செய்துள்ளார். இன்னொரு செய்தியும் இதில் அடங்கியுள்ளதையும் உணர முடிகிறது. அது என்னவெனில், எல்லாப் பழங்களிலும் சொத்தைப் பழமுண்டு; இச்சொத்தையால் இனிப்புச்சுவை குன்றி விடுகிறது. பலாவில் சொத்தை இல்லை. இதனால் அதிக சுவை கிடைக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
படைப்பாளர்களின் நடை, வெளிப்படுத்தும் விதம் வேறு வேறாக இருந்தாலும் சில நேரங்களில், சில படைப்புகளின் பொருள், கண்ணோட்டம், சிந்தனை, கற்பனை யாவும் எதிர்பாராமல் ஒத்துப் போகும், என்பதற்கிணங்க சில கவிதைகள் என் கவிதைகளை நினைவூட்டுகின்றன. எடுத்துக்காட்டுகளாக ..
.
கண்டுபிடியுங்கள்
காந்த சக்தி
உள்ளது கண்களில்! ...
காந்த சக்தி
உள்ளது கண்களில்! ...
என்ற கவிதை
கண்களில் நுழைந்து
இதயத்தை இழுத்துபிடிக்கும்
காந்தம் காதல்!
இதயத்தை இழுத்துபிடிக்கும்
காந்தம் காதல்!
என்ற என் கவிதையையும்,
பொய்த்தும் வாட்டியது
பெய்தும் வாட்டியது
மழை!
பெய்தும் வாட்டியது
மழை!
என்ற கவிதை,
கொடுத்தும் கெடுத்தது
கொடுக்காமலும் கெடுத்த்து
மழை!
கொடுக்காமலும் கெடுத்த்து
மழை!
என்ற என் கவிதையையும்,
அறிந்திடுக,
மேடு பள்ளம் சாலை
இன்ப துன்பம் வாழ்க்கை!
மேடு பள்ளம் சாலை
இன்ப துன்பம் வாழ்க்கை!
என்ற கவிதை,
ஆற்றிற்கு மட்டுமல்ல
வாழ்க்கைக்கும் இருகரை
இன்பத் துன்பம்!
வாழ்க்கைக்கும் இருகரை
இன்பத் துன்பம்!
என்ற என் கவிதையையும் நினைவூட்டின.
இவை போன்று பல கவிதைகள், என் கவிதைகளை மீண்டும் ஒரு முறை நான் அசைபோட நினைவூட்டிய நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு நன்றி. இவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தை மேம்படுத்தி, தீவினைகளின் வேரறுத்து நல்வினைகளை நிலைநிறுத்தப் போராடும் போராளிகளாக, போர்வாளாக, புன்மைப்புவியைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக உள்ளன.
சுவைகளில் அறுசுவை, அதிசயங்கள் எழு, அணிகலங்களில் ஒன்பான் மணி, தொல்காப்பியங்களில் ஒன்பது, திருக்குறளில் முப்பால் உள்ளது போல, முப்பது சுவைகளை ஒன்றிணைத்து அய்க்கு முதற்றே உலகு என்ற நூலாக கடைந்தெடுத்த அமுதமாக வழங்கியுள்ளார்.
அய்க்கு கவிதைகளைப் பயணிக்கும் முன்னோடி. கவிஞர்களில் முதல் வரிசையில் முதன்மையானவர்களில் ஒருவராகத் திகழும் அய்க்கு இரா. இரவியின் நூலை, காலத்தோடு சேர்ந்து பொருளீட்ட ஓடிக் கொண்டிருக்கும்போதே மூச்சினை இயல்பாக இழுத்துவிட்டபடி ஓடுவது போல அவசர காலத்திற்கேற்ப அவசரமாக வாசிக்க உகந்த அய்க்கு கவிதை நூலை வாங்கி வாசித்துப் பயனடைய வாசகப் பெருமக்களே வாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக