இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

இரா. இரவியின் படைப்புலகம் !

நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !

நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் : 103   விலை ரூ. 70.

******
பெங்களூர் தூரவாணி நகர் ஐ.டி.ஐ தமிழ் மன்றம் சார்பில் திங்கள் தோறும் நடைபெறும் பாவாணர் பாட்டரங்கத்தைப் பொறுப்பாளராக இருந்து பொறுப்பாக நான் நடத்தி வருகின்றேன். இப்பாட்டரங்கில் அறிமுகம் செய்து அப்படியே திறனாய்வு செய்து, புதிய உறவு இதழின் நூல் உறவு பகுதிக்கு எழுதும்படி கவிஞர் இரா. இரவி அவர்கள், வெளிச்ச விதைகள், இரா. இரவியின் படைப்புலகம் என்ற இரு நூல்களையும் என்னிடம் வழங்கினார்.  நூலறிமுகம் செய்து ஏற்கனவே வெளிச்ச விதைகள் நூலைப் பற்றி திறனாய்வு எழுதி புதிய உறவிலும் வெளிவர உள்ளது . இப்பொழுது இந்நூலுக்கும் திறனாய்வு எழுதுகிறேன்.

      அண்மைக் காலமாக பல்வேறு நூல்களுக்கு பலருக்கு வழங்கிய அணிந்துரை மற்றும் திறனாய்வுகளைத் தொகுத்து அணிந்துரை இலக்கியங்களாக பலரும் வெளியிட்டு வரும் நிலை, தமிழ் இலக்கிய உலகில் வேரூன்றி உள்ளன.  அந்தளவிற்கு தமிழ் இலக்கிய உலகம் விரிவடைந்து வளர்ந்துள்ளது என்ற எண்ணம் மகிழ்வை ஈந்தபோதும், சொந்தமாக படைக்கும் படைப்புகளுக்கு நிகராகுமா? என்ற வினா என்னுள் தொக்கி நிற்கிறது.  அதே சமயம் ஏற்கனவே தனித்தனி நூல்களுக்கு தனித்தனியாக எழுதியவைகள் ஒன்றிணைத்து மறுவடிவம் எடுக்கும்போது தான் அந்த அணிந்துரை, திறனாய்வுகளின் தனித்தன்மையும் சிறப்பும் புலனாகின்றன  என்பது முற்றிலும் உண்மையே !

      இவ்வடிப்படையில் கவிஞர் இரா. இரவியின் பத்து நூல்களுக்கு பத்து தலைப்புகளில் வழங்கிய அந்தப் பத்து அணிந்துரைகளை மட்டும் தொகுத்த நூல் தான் இரா. இரவியின் படைப்புலகம் என்ற இந்நூலாகும்; கவிஞர் இரா. இரவிக்கு வழங்கிய அணிந்துரைகளை மட்டும் நூலாசிரியர் தனி நூலாக்கியுள்ளார் என்றால், கவிஞர் இரா. இரவியின் மீதும், இரவியின் படைப்புகளின் மீதும் அசையா நம்பிக்கையும் மற்றும் மதிப்பும் வைத்து, தனியாக வைத்து உயரத்தில் உட்கார வைத்து அழகு பார்த்திருக்கிறார் என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல்.

இன்றைய தமிழ் இலக்கிய நடமாடும் பல்கலை கழகமாக, உலகம் சுற்றும் இலக்கியத் தேராக, பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், இலக்கியப் பணியிலிருந்து ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேனீ தான் இந்நூலசிரியர்  பேராசிரியர் இரா. மோகன் ஆவார்.

      இவர் ஒருவருக்கே பத்து அணிந்துரை வழங்கியுள்ளார் என்றால், இந்நூலின் கதாநாயகரான கவிஞர் இரா. இரவி எப்படிப்பட்ட தகுதிகளுடையவர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவையாகிறது.  நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கவிஞர் இரா. இரவியின் தகுதியின் கூடுதலாகவே நிரம்பி வழிகின்றன.  இதில் சிலவற்றைக் காண்பதென்னவெனில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாட நூல்களில் இரா. இரவியின் கவிதைகள் இடம் பெற்றுள்ளவையாகும்.

      அடுத்து, மதுரை வெள்ளைச்சாமி கல்லூரி மாணவர் க. செல்வக்குமார், “இரா. இரவியின் அய்க்கூக் கவிதைகளில் பன்முகப் பார்வை” என்ற தலைப்பிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர் இலெ. சிவசங்கர், “கவிஞர் இரா. இரவியின் அய்க்கூக் கவிதைகள்” என்ற தலைப்பிலும் ஆய்வு செய்துள்ளனர்.

  இத்துணைச் சிறப்புக்குரியவர் என்பதால் தான் தொடர்ந்து அணிந்துரைகளை அள்ளி “இடம் பொருள் ஏவல்”என்பதற்கேற்ப விழைந்து அணி செய்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.

      இந்நூலாசிரியர் முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைப் போல் இந்நூல் 133 வது நூலாக அமையாமல் 132 வது நூலாக மலர்ந்திருக்கிறது.

  இவருடைய மற்ற 131 நூல்களை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளன.  மிகப் பெரிய படைப்பாளியான, இவரின் இந்த நூலில், கவிஞர் இரா. இரவியின் விழிகளில் அய்க்கூ என்ற நூலின் அணிந்துரையே முதல் அணிந்துரையாக இடம் பிடித்துள்ளது.  இதில் கவிஞர் இரா. இரவியைப் பற்றி இப்படி நயம்பட  பிடித்துள்ளது.

       மெல்லினம், இடையினம், வல்லினம் என்னும் மூவினமும் கவிஞர் இரவியின் ஆளுமையில் களிநடனம் புரிந்து நிற்பதை யாவரும் அறிவர்.  அவரிடமும் மென்மையும், மேன்மையும், பாரதி போன்ற ரௌத்திரமும் உண்டு.

      என்று முச்சொல்லில் முடிந்து வைத்து கவிஞர் இரா. இரவியின் மூன்று பரிமாணங்களை மிக அழகாக, அருமையாக படம் பிடித்து காட்டி, அணிந்துரை முழுக்க கவிஞர் இரவியின் முத்தாய்ப்பினை பல்வேறு அய்க்கூக்களையும் இக்கவிதைகளுக்கு பொருத்தமான எடுத்துக்காட்டுக்களை விளக்கமாகவும் விவரித்துள்ள நயம், நயமாகவே உள்ளன.  நூலாசிரியர் கவிஞர் இரா. இரவியைப் பற்றி பதிவு செய்துள்ள மூன்று பண்புகளை நானும் அனுபவப் பூர்வமாக உனர்ந்துள்ளதால் மிகச் சரியாகவே கணித்துள்ளார் என்றே கருதுகிறேன்.

      இதயத்தில் அய்க்கூ என்ற நூலுக்கு வழங்கிய அணிந்துரையில், கவிதை என்றால் அது எப்படி இருக்க வேண்டும்? என்பதை உரிமையுடன், கவிஞர் இரவியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக இரண்டு ஆலோசனைகளை முன்வைத்து, கவிஞர் இரா. இரவிக்கு அறிவுறுத்துவதாக பகர்ந்திருப்பினும், எல்லா கவிஞர்களுக்கும் பொருந்தும் வகையில் உகந்த கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டி இயம்பி இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். அவை:

1)      சுத்தத் தங்கமும் இல்லை, ‘விழி ஈர்ப்பு விசை’ என்றாற் போல் பிற கவிஞர்களின் சாயலில் அய்க்கூ படைப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நன்று.

2)      சொற்களைச் சுண்டக் காய்ச்சி, செதுக்கிக் கையாளும் கலையில் இன்னும் கூடுதலாகப் பயிற்சி எடுத்துக் கொள்ளல் வேண்டும்.



என்கிறார். நிறைகளை மட்டும் சொல்வது உண்மையான திறனாய்வாகாது.  குறைகளையும் சுட்டினால் தான் அந்தப் படைப்பாளி குறைளைக் களையவும், நிறைவான, தரமான படைப்பை படைக்கவும் வழிவகுக்கும் என்பதை வெளிப்படையாக எந்தவித சமரசமும் இல்லாமல் இயம்பி இருப்பதை வரவேற்கிறேன்.

      இதேபோன்று அய்க்கூ ஆற்றுப்படை என்ற நூலுக்கு வரைந்த கருத்தோவியத்தில், திறனாய்வாளர்களை மூன்று வகையாக பிரித்து, திறனாய்வாளர்கள் உணரும்படியாக சுட்டிக்காட்டி இருப்பதாவது:

1)      ஒரு படைப்பின் குணங்களையே கண்டு வானளாவிப் போற்றி எழுதுவோர்.

2)      படைப்பில் காணலாகும் குற்றங்களையே பெரிதுபடுத்தி எழுதுவோர்.

3)      படைப்பின் குணம்நாடி, குற்றமும்நாடி, அவற்றில் மிகைநாடி மிக்க கொள்வோர்.

திருக்குறலின் முப்பால்போல் சுட்டி, இதில் மூன்றாம்பால் தான் திறனாய்வு முனைக்கு உகந்ததெனவரையறுத்து அவ்வாறே நூலாசிரியரும் ஒவ்வொரு திறனாய்வுகளிலும் கையாண்டு தானே ஒரு உவமையாக விளங்கியுள்ளார்.

ஒரு கவிஞர் இன்னொரு கவிஞர் புகழ்ந்து பாராட்டிப் போற்றும் குணம் அருகிவிட்ட காலத்தில், கவிஞர் இரா. இரவி, கவிஞர் மு. முருகேசு அவர்களைப் பற்றி, அய்க்கூ என்ற சொல் மக்களிடையே பரவலாகி இருப்பதற்கு மூல காரணம் ஆனவர் என்று வெளிப்படையாக பதிவு செய்திருப்பதை தவிர்க்காமல் நினைவூட்டி நூலாசிரியர் பாராட்டுக்குரியவராக திகழ்கிறார்.

ஆயிரம் அய்க்கூ என்ற நூலுக்கான திறனாய்வில் ஆயிரம் அய்க்கூ கவிதைகளை ஒரே நூலில் இடம் பெற செய்த கவிஞர் இரா. இரவியை மட்டும் பாராட்டுவதோடு நின்று விடாமல், படைப்பாளி ஒரு காலத்தின் கண்ணாடி என்பதற்கேற்ப வரலாற்று பதிவாக ஒரே நூலில் ஆயிரம் பாடல்கள் கொண்ட நூலை வெளியிட்ட வாலி, வைரமுத்து அவர்களையும், அய்க்கூ கொண்ட நூலை வெளியிட்ட மித்ரா, மு. முருகேசு ஆகியோரையும் நினைவு கூர்ந்துள்ள நூலாசிரியரின் பரந்து விரிந்த இலக்கிய ம(ண)னத்தைக் கண்டு மகிழ்ந்து இரும்பூதடைகிறேன்.

அதே வேளையில் இதுவரை எவரும் சிந்திக்காத வகையில் ஆயிரம் அய்க்கூ கவிதைகளைத் தாண்டி புதுமையாக ஒரே நூலில் திருக்குறள் போல 1330 அய்க்கூக்களை அகரத்தில் தொடங்கி நகரத்தில் முடித்து குத்தூசி என்ற நூலை வெளியிட்டவன் நான் என்ற மனநிம்மதி எனக்குமுண்டு.

கவிஞர் இரா.இரவியின் படைப்புகளால் கவிஞர் என்ற அடிப்படையில் நிறைந்திருக்கும் கூறுகளை, இரவியின் மனத்திற்குள் கூடுவிட்டு கூடுபாய்வது போல் புகுந்து அறிந்து விவிலியத்தில் உள்ள பத்து கட்டளைகள் போலவே பத்துப் பண்புகளை வரிசைப்படுத்தி கவிஞர் இரா. இரவியை அடையாளப்படுத்தியுள்ள பாங்கு நேர்த்தியானது. அவைகள்;

1). ஆழ்ந்த தமிழுணர்வு 2). அயலகத் தமிழர்பால் குறிப்பாக
ஈழத்தமிழர் மீது மிகுந்த பரிவு, 3).கண்மூடிப் பழக்கவழாக்கங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான முற்போக்குச் சிந்தனை, 4). மனித நேயம், 5). வாழ்வியல் விழுமியங்களுக்கு முதன்மை தருதல், 6). தந்தை, தாய், மனைவி, மக்கள், குடும்ப உறவுகளைப் போற்றல், 7). இயற்கை மீதான ஈடுபாடு, 8). திருக்குறள் பற்று, 9). தன்னம்பிக்கைச் சிந்தனை, 10). மெல்லிய நகைச்சுவை உணர்வு.

இப்படி இரா. இரவியின் படைப்புலகில், நூலிலுள்ள கவிதைகளோடு நூலாசிரியரைப் பற்றி மேற்கோள் காட்டி பல்வேறு கருத்துக்களையும் அதற்கான சான்றுகளையும் நூலுக்கு தொடர்பில்லாரையும் தொடர்புபடுத்தியும் சமுதாய மேம்பாட்டுக்கான வழிமுறைகளையும் சுட்டி சிறந்த ஒரு கட்டுரை நூலாய் செதுக்கி உள்ளார்.

 இப்படிப்பட்ட நூலை வாசித்ததும் நூலாசிரியரின் மற்ற நூல்களையும், இந்நூலின் கதாநாயகரான கவிஞர் இரா. இரவியின் நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் பசுமையான திறனாய்வு நூலாக விளங்குகிறது இந்நூல்.

      அருமையான நூலாக விளங்கும் இந்நூலுக்கு திறனாய்வு எழுத எனக்கு வாய்ப்பளித்த கவிஞர் இரா. இரவிக்கும், இந்நூலாசிரியர் பேராசிரியர். இரா. மோகன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. பாராட்டு! இந்த அணிந்துரை இலக்கிய நூல் பல பதிப்புகளைக் காண வேண்டுமென வாழ்த்துகிறேன்.

கருத்துகள்