மாற்றங்களை ஏற்போம் ! நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மாற்றங்களை ஏற்போம் !


நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு மனிதத்தேனீ பதிப்பகம்,
விஜயா பிரிண்டர்ஸ் 114/2 டி.பி.கே. ரோடு, மாலைமுரசு அருகில்,
மதுரை. 625 001.  0452-2343829              பக்கங்கள்  132        விலை ரூ.50.
******
      நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் மாமனிதர், தந்தை பெரியார் சொல்வார் “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்” என்று. நூலாசிரியர் ஓய்வு, சோர்வு என்றால் என்னவென்றே அறியாதவர்.  பேசிய பேச்சுக்கள் காற்றோடு போய்விடும் என்பதால் அவற்றை ஆவணப்படுத்தி நூலாக்கி வருவது சிறப்பு.

     " மாற்றங்களை ஏற்போம்" நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது மானிட தத்துவம் அது போல மாற்றங்களை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  நூலில் 40 கட்டுரைகள் உள்ளன.

      அறிவியல், மொழி, ஆளுமை, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஆன்மீகம், சுற்றுச்சூழல், மருத்துவம், ஊடகம், அரசியல் என்று பல்வேறு தலைப்புகளில் பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.  பாராட்டுகள்.  132 பக்கங்கள் உள்ள நூல் ரூ. 50 என்பது மிகக் குறைவு அடக்கவிலைக்கே வழங்குகின்றார்.

      உலகம் அழிந்து விடும் என்று வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான அறிவியல் கட்டுரை நன்று. புள்ளிவிவரங்களுடன் விளக்கியது சிறப்பு.  கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டும் என்ற கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.  

தமிழ் வளர்த்த மதுரை கட்டுரை மிக நன்று. கட்டுரையின் முடிப்பு மிக நன்று.

      “முதன் முதலில் அயல்நாட்டினருக்குத் தமிழ் கற்பித்த பெருமை மதுரையைச் சாரும்.  வாய் கிழியப் பேசுவதைக் காட்டிலும் தமிழன் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.  அதுவே மதுரைக்கு நிலைத்த பெருமை சேர்க்கும்."

  நூலில் வெற்றிடம் இன்றி துணுக்குச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

      "விமர்சனம் விரிவாக்கும்" கட்டுரை உளவியல் கருத்து எழுதி உள்ளார்.  சிலருக்கு விமர்சனம் என்றாலே  பிடிக்காது.  நல்ல விமர்சனமாக இருந்தால் நம்மை திருத்திக் கொள்ள வாசிப்போம், சுவாசிப்போம் கட்டுரை மிக நன்று.

      “தமிழ் வாசிப்பது, நாளிதழ் வாசிப்பது, வார, மாத இதழ் வாசிப்பது, புத்தகம் வாசிப்பது, இணையதளத்தில் நல்ல கருத்தை வாசிப்பது பயன் தரும்.  எழுத்து, வாசிப்பவனின் அறிவை கூர்மைப்படுத்திட வேண்டும்.  இந்த நூலும் வாசிப்பவனின் அறிவை கூர்மைப்படுத்துகின்றது என்றால் மிகை அன்று.  பல்வேறு தகவல்களை  நிகழ்வுகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக நூல் உள்ளது.

      தமிழுக்கு கதி இருவர். ஒருவர் கம்பன், மற்றொருவர் திருவள்ளுவர் என்பார். கம்பன் புகழ் கன்னித் தமிழ் கட்டுரையில் கம்பனின் கவித்திறனை எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுகள்.

      கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்து பல்லாண்டுகளாக பல்வேறு நற்பணிகள் செய்து வருபவர் நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம்.  முக்கியமான தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் மறக்காமல் விழா நடத்தி விடுவார். மதுரையில் உள்ள நாட்களில் தவறாமல் இவ்விழாக்களுக்கு நான் செல்வது வழக்கம். 

 செய்தியை செய்தித்தாளில் ஆவணப்படுத்துவதுடன், முகநூல், வலைப்பதிவிலும் பதிவு செய்து விடுவார்.  அச்சகத்தொழில் செய்து கொண்டு அடிக்கடி மேடைகளில் பேசிக்கொண்டு எழுத்துத்  படித்து உள்ளார். பாராட்டுகள்.

      ‘முதுமையும் வாழ்வதற்கே’ கட்டுரையில் தொகுப்பு, எடுப்பு, முடிப்பு அனைத்தும் அருமை கட்டுரையின் தொடுப்பு .
“பணி நிறைவு என்பது நமது வாழ்வின் அடுத்தக்கட்டத் தொடக்கம்.  பரபரப்பான நிலையில் இருந்து அமைதியான பகுதியை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஆரம்பம்.  இந்த காலகட்டத்தில் தான் நம்மைக் குறித்து நமக்குத் தேவையில்லாத சந்தேகங்கள் வரும்.  அவை தாம் நம்மை வீழ்த்திவிடும்”.

      பணி நிறைவு பெற்ற 58 வயதிலேயே வாழ்க்கையே முடிந்துவிட்டது போல கவலை கொள்ளும் மனிதர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.  திருப்பூர்  குமரனை ஆங்கிலேயர் தடியால் தாக்கி மண்டை பிளந்து இரத்தம் சிதறி நினைவிழந்து சாய்ந்த போதும் அவரது கையிலிருந்து நாட்டுக் கொடி கீழே விழவே இல்லை என்று துணுக்குச் செய்தியும் நூலில் உள்ளது.

      ‘வெல்வதற்கே பிறந்தோம்’ கட்டுரை தன்னம்பிக்கை விதை விதைக்கும் கட்டுரை.   காந்தியடிகள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மேற்கோள் காட்டி முடித்தது/ சிறப்பு தலைப்புகளே நம்முள் தன்னம்பிக்கை விதைக்கின்றன.  சொந்தக் காலில் நில்லுங்கள், உன்னை நம்பு, பள்ளிப்பருவம் பொற்காலம் அறிவுக் கூர்மை. வெற்றியைத் தரும்.  இப்படி தலைப்புகளே ஆளுமை விதைப்பதாக உள்ளன.  பாராட்டுகள்.

      மாற்றங்களை ஏற்போம் ‘நூலின் தலைப்பில் உள்ள கட்டுரை “பாதைமாறிச் செல்லும் இளைஞர்களை நெறிப்படுத்த வெண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்து விடாது.  பெற்றோர் சொல்வதை இன்றைக்குப் பிள்ளைகள் கேட்பதில்லை.

      "மதுப்பழக்கத்தை விட்டொழித்துப் பயிற்சி. முயற்சி சுயக்கட்டுப்பாடு, ஈடுபாடு, நல்ல நட்பு வட்டத்தை உருவாக்குதல், மாற்றத்தை எதிர் கொள்ளுதல் போன்ற சிறந்த பண்புகள் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் இளைஞர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகவே இருக்கிறது எதிர்காலம்”

      இளைஞர்கள் கொடிய குடிப்பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார். சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.  இளைஞர்கள்  நல்வழிக்கு வருகிறார்கள் என்ற  நம்பிக்கையை விதைத்தது.

      நம்வழி நேர்வழி கட்டுரை நன்று.  நாம் நேர்மையாக நடந்தால் யாருக்கும் அஞ்சி வாழவோ அல்லது காலில் விழுந்து காக்காப் பிடிக்கவோ அவசியம் இல்லை.  ஒருவன் நேர்மையாக வாழ்ந்தால் யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்ந்து வாழலாம்.

      இந்த நூலில் உலகம் பொதுமறையான திருக்குறளின் அறிவொளி கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக வாழ்வியல் கருத்துக்களையும் வெற்றிக்கான வழிகளையும் சாதனைக்கான முயற்சியையும் நன்கு விளக்கி உள்ளார்.

      15500 கூட்டங்களில் பேசுவது என்பது சாதாரண செயல் அல்ல.  அளப்பரிய சாதனை.  ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு நல்ல கருத்துக்களை விதைத்த ஓய்வறியாத உழைப்பாளி அவர்களின் எழுத்தில் உருவான நூல். தகவல் சுரங்கமாக உள்ளது.  தமிழின் இமயம் மு.வ. அவர்கள் அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்களுக்கு சொன்னதையே உங்களுக்கும் நான் சொல்கிறேன். “பேசும் பேச்செல்லாம் காற்றோடு காணாமல் போய் விடும், எழுத்தாக்கினால் இறந்த பின்னும் நிலைக்கும்”
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்