ஆனால், இந்திய அரசும் தமிழக அரசும் இந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணராமலும், இதனை உச்சநீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலும் - ஒரு பாரம்பரிய விளையாட்டுக்கு மூடுவிழா நடத்தப்படுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர்.
ஜல்லிக்கட்டில் மாடும் மனிதனும் தொடர்புபட்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிய பந்தம். ஏறுதழுவுதல் என்பது தமிழர் பண்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் ஒரு பாரம்பரிய விளையாட்டு. சிந்து சமவெளி நாகரிகத்திலும், தொல்தமிழர் ஓவியங்களிலும், நடுகற்களிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது.
மஞ்சு விரட்டு என்பது ஊரில் உள்ள மாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைச் சுதந்திர வெளியில் திரிய விடுவதாகும். வட மாவட்டங்களில் இவ்விளையாட்டு உயிர்ப்புடன் நிலவுகின்றது. பொங்கல் திருநாளை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடிய பின்னர் பொதுவாக பரிசுப் பொருள்கள் கட்டி ஊர்ப் பொதுவிடங்களில் இளைஞர் பிடிக்குமாறு விடும் ஒரு விழாவாக மாடு விரட்டுதல் நடைபெறுகிறது.
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மாடு விடுதல் என்னும் விளையாட்டு நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஊர் சார்பாக வளர்க்கப்படும் மாடுதான் இந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகின்றது. எந்த மாடு முதலில் வருகின்றதோ அதற்குப் பரிசு தரப்படுகிறது. அறுவடை முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் விளையாட்டுக்கள் இவை. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் போற்றப்படுகின்றன. அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள்.
மடகாஸ்கர் நாட்டின் ரூபாய் தாளில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு
மாடு விரட்டுதல் என்பது மிகச்சில நிமிடங்கள் நடக்கும் ஆபத்தில்லாத விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டு அதைவிட குறைவான நேரமே நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டில் காயம்படாத காளைகள்தான் இடம்பெற வேண்டும் என்பதும், பங்கேற்கும் காளைகளை காயம்படச் செய்யக் கூடாது என்பது விதிகளாக கடைபிடிக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளில் கோயில் காளை என்பது முக்கியமானதாகும். ஊரே ஒன்று சேர்ந்து வளர்க்கும் இந்தக் காளையை யாரும் பிடிப்பது கூட இல்லை. ஆண்டில் ஓரிரு முறை மட்டுமே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்கின்றன.
மாடுகளை துன்புறுத்தவே வாய்ப்பில்லாத இந்த விளையாட்டை, மாடுகளைத் துன்புறுத்தி கொலை செய்யும் மேற்குலக நாடுகளின் காளைச் சண்டையுடன் தொடர்புபடுத்தி தடை செய்துள்ளனர். உள்ளூர் மக்களின் கலாச்சார மனித உரிமைக்கு இந்தத் தடை எதிரானதாகும். அவ்வாறே உயிரினப் பன்மயப் பாதுகாப்புக்கும் ஜல்லிக்கட்டு தடை ஆபத்தாக மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்
உலகைக் காக்க இரண்டு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அறிவியலாளர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் கருதுகின்றனர். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், உயிரினப் பன்மயம் அழியாமல் காத்தல் ஆகியனதான் அந்த இரண்டு அதிமுக்கியமான உலகக் கடமைகள். இந்த இரண்டு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். தவறினால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்.
உலகின் உயிரியல் பன்மயத்தை (biodiversity) காப்
இந்த அமைப்பு 18 ஆண்டுகாலம் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் 2010 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் ஒரு உடன்பாட்டை எட்டின (Nagoya Protocol). அதன்படி, உயிரினப் பன்மய அழிவைத் தடுத்தல், மரபணு வளங்களை அடைதல் மற்றும் பலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்த செயல்திட்டங்களை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளன. இந்திய நாடும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.
உயிரியல் பன்மயப் பேரவையின் கீழ் உள்ளூர் மக்கள் உலகின் உயிர்வாழ்க்கையைக் காப்பதில் முதன்மை பங்காற்றுகின்றனர். இந்தப் பேரவையின் விதி 8 பத்தி J இன் கீழ் 'உயிரிப் பன்மயப் பாதுகாப்புடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவினைக் காப்பாற்றுவதும், மதிப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.
Convention on Biological Diversity: Article 8. (j)
Each Contracting Party shall, as far as possible and as appropriate: (j) Subject to its national legislation, respect, preserve and maintain knowledge, innovations and practices of indigenous and local communities embodying traditional lifestyles relevant for the conservation and sustainable use of biological diversity and promote their wider application with the approval and involvement of the holders of such knowledge, innovations and practices and encourage the equitable sharing of the benefits arising from the utilization of such knowledge, innovations and practices;
விதி 10 பத்தி C பிரிவின் கீழ் "பாரம்பரிய கலாச்சார வழக்கங்களுக்காக மரபுவழியில் உயிரியல் வளங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதும் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.
Convention on Biological Diversity: Article 10. (c)
Each Contracting Party shall, as far as possible and as appropriate: Protect and encourage customary use of biological resources in accordance with traditional cultural practices that are compatible with conservation or sustainable use requirements;
ஐநா உயிரியல் பன்மய உடன்படிக்கை என்பது உலகநாடுகளால் ஏற்கப்பட்ட பன்னாட்டு சட்டம் ஆகும். எனவே மேற்கண்ட பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்டப்பிரிவுகள் பிரிவு 8 J மற்றும் பிரிவு 10 C ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான கடமை இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உண்டு.
ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கையை நிறைவேற்றும் வகையில் 'ஆய்ச்சி இலக்கு' எனும் வியூகத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது (Aichi Biodiversity Targets). 2011 - 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் உலகின் உயிரியல் பன்மய அழிவைத் தடுப்பதற்கான செயல்திட்ட வியூக இலக்குகள் இவையாகும்.
இந்த இலக்கின் 13 ஆம் பிரிவு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இனங்கள் உட்பட, பழக்கப்பட்ட விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் மரபின வேறுபாட்டினை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
Aichi Biodiversity Targets – 13
By 2020, the genetic diversity of cultivated plants and farmed and domesticated animals and of wild relatives, including other socio-economically as well as culturally valuable species, is maintained, and strategies have been developed and implemented for minimizing genetic erosion and safeguarding their genetic diversity.
இதே இலக்கின் 18 ஆம் பிரிவு 'உயிரிப் பன்மயப் பாதுகாப்புடன் தொடர்புடைய உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவு, பாரம்பரிய கண்டுபிடிப்புகள், பழக்கங்கள் மற்றும் உயிரியல் வளங்களின் மரபுவழி பயன்பாடும் மதிக்கப்பட வேண்டும். உயிரியல் பாதுகாப்பு உடன்படிக்கையை செயல்படுத்துதலில் இவை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் இணைக்கப்பட வேண்டும்" என்கிறது.
Aichi Biodiversity Targets – 18
By 2020, the traditional knowledge, innovations and practices of indigenous and local communities relevant for the conservation and sustainable use of biodiversity, and their customary use of biological resources, are respected, subject to national legislation and relevant international obligations, and fully integrated and reflected in the implementation of the Convention with the full and effective participation of indigenous and local communities, at all relevant levels.
ஆக, உயிரியல் பன்மயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உலகளாவிய முயற்சிகளில், உள்ளூர் மக்களின் அறிவு, அவர்களின் மரபுவழி நம்பிக்கைகள், கலாச்சார நடவடிக்கைகள், அவற்றோடு தொடர்புடைய உயிரினங்களும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர் மாட்டு இனங்களும் உலகளாவிய உயிரிப்பன்மய பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
பாரம்பரிய அறிவு
ஒவ்வொரு நிலப்பகுதியிலும் நிலவும் பருவகாலம், அங்கு உள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்வாழ்வன, கால்நடைகள் குறித்த அறிவு அந்தப் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்துவரும் உள்ளூர் மக்களிடம் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. பேசும் மொழி, பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள், கதைகள், ஓவியங்கள், நம்பிக்கைகள் என பல வழிகளிலும் ஒரு தலைமுறையின் பாரம்பரிய அறிவு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கையின் கீழ் 'பாரம்பரிய அறிவு' என்பது 'பாரம்பரிய அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் பழக்கம்' என்று வரையறுக்கப்படுகிறது. பலதலைமுறையினரின் பட்டறிவிலும், செய்முறைகளிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் இந்த அறிவு பொதிந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், உள்ளூரில் பேசப்படும் மொழிக்கும் இந்த அறிவுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
(Traditional knowledge, innovations and practices of indigenous and local communities describes the body of knowledge built by indigenous and local communities over generations. Developed from experience gained over the millennia and adapted to the local culture and environment, traditional knowledge tends to be collectively owned, transmitted orally from generation to generation and has a diversity of forms ranging from stories and folklore to agricultural and animal husbandry practices.)
எனவேதான், 'உயிரியல் வளங்களின் மரபுவழி பயன்பாடு' என்பதை ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கை மதிக்கக் கோருகிறது. 'உள்ளூர் மக்களின் அடையாளம், வாழ்வாதாரம், பண்பாடு, மொழி அனைத்தும் அவர்கள் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலுடனும் உயிரின வளத்துடனும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால் - உள்ளூர் மக்களின் பண்பாடும் நம்பிக்கைகளும் கூட உயிரியல் பன்மயத்தைக் காப்பதில் ஒரு அங்கம் தான்.
(Customary use of biological resources refers to indigenous and local systems for the control, use and management of natural resources. Customary use of biological resources includes spiritual, cultural, economic and subsistence functions.)
உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவில் கால்நடைகள் வளர்ப்பு குறித்த அறிவு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாரம்பரிய கால்நடை இனங்களின் தொடர்ச்சி என்பது ஒரு தனித்த செயல் அல்ல. பாரம்பரிய கால்நடைகளின் இருத்தல் மக்களின் பண்பாடுடனும் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுடனும் இணைந்ததாக இருக்கிறது.
உண்மையில் இந்தியாவின் மரபின கால்நடைகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் சமூகத்தினரின் பாரம்பரிய கண்டுபிடிப்புகளே ஆகும். அவற்றை இன்றுவரைக் காப்பாற்றி வளர்த்து வருவதும் உள்ளூர் மக்கள்தான்.
உலகளவில் வேறுபட்ட கால்நடை மரபினங்களைக் கொண்டுள்ள நாடுகளில் முதன்மையானது இந்தியா. இங்கு 45 மரபின வகையான மாட்டினங்கள், 4 வகையான ஒட்டக இனங்கள், 19 வகையான ஆட்டு இனங்கள், 39 வகையான செம்மறி ஆட்டு இனங்கள், 19 வகையான கோழியினங்கள், 11 வகையான வாத்து இனங்கள் உள்ளன.
இவை அனைத்தும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக உள்ளூர் மக்களின் அறிவு வளத்தால் பராமரிக்கப்பட்டு வரும் பழக்கப்பட்ட வீட்டு விலங்கு வகைகள் ஆகும். கருத்தரிக்கச் செய்தல், சரியான மேய்த்தல், நோய்த்தடுப்பு என எல்லாவித பராமரிப்புகளையும் மேற்கொண்டு உள்ளூர் மக்கள் இவற்றை பாதுகாத்து வந்துள்ளனர்.
தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் உள்ளன. இந்த மாட்டு இனங்கள் மக்களின் பண்பாட்டில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற காளை மாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் பல பாரம்பரிய மாட்டு இனங்கள் வளர்க்கப்படுவதற்கு காரணமாக உள்ளன. ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும்.
ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகள் பிரதானமாக உள்ளன. கூடவே புலிக்குளம், மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய உள்ளூர் மாட்டு இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்
உலகெங்கும்
உள்ளூர் மக்களின் பண்பாட்டுடன் கால்நடைகள் பின்னிப்பிணைந்துள்ளன.
பண்பாட்டுத் திருவிழாக்களில் கால்நடைகள் பங்கெடுப்பது கால்நடை இனங்களின்
வளர்ச்சிக்கும் எதிரானது அல்ல. பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளான ஆடு, மாடு,
நாய் உள்ளிட்ட விலங்குகள் மனிதனுடன் இணைந்தே வாழ்கின்றன. மனித
பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் அவை இணைந்தே பயணிக்கின்றன.
இன்றைக்கும்
கிராமப்புற வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் குடும்பத்தினர்
கால்நடைகளையும் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். உள்ளூர் மக்களின்
வாழ்வில் ஒரு அங்கமாக உள்ள காளைகள் கலாச்சார திருவிழாக்களில் பங்கேற்பதை
விலங்குகளின் பாதுகாப்புக்கு எதிரானதாக சித்தரிப்பது முட்டாள்தனமானது
மட்டுமல்ல, தவறான உள்நோக்கமும் கொண்டதாகும்.
தமக்கென்று
ஒரு கலாச்சாரத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்களும் தன்னுடைய கலாச்சாரத்தை
இழந்தவர்களும் - இன்னொரு பரம்பரிய கலாச்சாரத்தை அழிக்க முயற்சிப்பது
அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும்.
'விலங்குகளை
வதை செய்யாதே' என்று புதிதாகக் கிளம்பியுள்ளவர்கள் எவரும் கால்நடைகளுடன்
வாழ்பவர்களும் இல்லை. அதை வளர்ப்பவர்களும் இல்லை. பாரம்பரிய காலநடை வளம்,
அதன் வளர்ப்பு முறை போன்ற எதையும் இவர்கள் அறிந்தவர்கள் இல்லை.
மிஞ்சிப்போனால், வெளிநாட்டு நாய்களை அதிக விலைகொடுத்து வாங்கி, அதனை
குளிர்சாதன அறைகளில் வைத்து கொஞ்சுவதுதான் கால்நடைகளுக்கும் இவர்களுக்குமான
உறவு.
பன்னெடுங்காலமாக கால்நடைகளும் தாமும்
ஒன்றாகவே வாழ்ந்துவரும் பாரம்பரிய மக்களின் பண்பாட்டை இவர்கள் அறிய
மாட்டார்கள். தான் பட்டினி கிடந்து மாடுகளுக்கும் உணவளிக்கும் நாட்டுப்புற
மக்களின் பண்பாட்டு பழக்கங்களை 'காட்டுமிராண்டித்தனம்' என்று விமர்சிப்பது
ஏற்புடையது அல்ல. அதில் நியாயம் ஏதும் இல்லை.
மற்றவர்களின்
பண்பாட்டு வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அழிக்க முயல்வதுதான்
இனவெறிக்கும், இனப்படுகொலைக்கும் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இந்த
சகிப்புத்தன்மையற்ற போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
உள்ளூர்
மக்களின் பண்பாட்டு வேறுபாடுகளை அழிக்க முயலாமல், அதனை அங்கீகரித்து,
பாதுகாக்க முன்வருவதே நாட்டு நலனுக்கும், மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழல்
மேம்பாட்டுக்கும் நன்மை செய்வதாக அமையும்.
எனவே,
ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மாடு விரட்டுதல், மஞ்சு விரட்டு, ரேக்ளா
பந்தயம் போன்ற பாரம்பரிய இனக் கால்நடைகளுடன் இணைந்த பாரம்பரிய பண்பாட்டு
விழாக்களை எதிர்ப்பதைக் கைவிட்டு - அவற்றை ஆதரித்து ஜல்லிக்கட்டு தடையை
நீக்க அனைவரும் முன்வர வேண்டும்.
மனிதர்களால்
தேர்வு செய்யப்பட்டு காலம் காலமாக வளர்க்கப்பட்டு வரும் 'பழக்கப்பட்ட
விலங்கான ' (domesticated animals) காளைகளை மத்திய அரசு வனவிலங்காக
அறிவித்த செயல் நியாயமற்றது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
அமைச்சகம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து காளைகளை நீக்க
வேண்டும். அதன் மூலம் உயர்நீதிமன்றத்தின் தடையையும் நீக்கி,
ஜல்லிக்கட்டையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும்
நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக