படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படித்தாலே இனிக்கும் !



நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம் 23, தீதையாளு தெரு, தியாகராயர், சென்னை.17

பக்கம் 80 விலை 80, பேச 044-24342810

*******
       ‘படித்தாலே இனிக்கும்’ நூலின் தலைப்பே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது.  இயக்குனர் இமயம் பாலசந்தர் இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தை நினைவூட்டியது.

       நூல் ஆசிரியர் நிர்மலா மோகன் அவர்கள், தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினைப் பெற்ற முதல் பெண்மணி. பேராசிரியர் இரா. மோகன் அவர்களைக் காதலித்து கரம் பிடித்து மணிவிழா கண்டவர். கணவருக்கு துணை நிற்பது மட்டுமின்றி, தானும் படைத்து, பேசியும் வருகிறார்.  திருவள்ளுவருக்கு ஒரு வாசுகி ;  காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாய் ; பாரதியாருக்கு ஒரு செல்லம்மா ;  முனைவர் இரா. மோகனுக்கு ஒரு நிர்மலாமோகன் என்றால் மிகையன்று.  இலக்கிய இணையர் என்று அழைக்கப்படும் இருவரும் போட்டிப் போட்டு எழுதியும்,  பேசியும் வருகின்றனர்.

       இந்த நூலிற்கு, குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஆசிரியர் முனைவர் அ. கோவிந்தராசு அவர்கள் அணிந்துரை மிக அழகாக எழுதி உள்ளார்.  இந்த நூலில் 11 கட்டுரைகள் உள்ளன.  ஒவ்வொரு கட்டுரையும் 10 நூல்கள் படித்ததற்கு சமம்.  11 கட்டுரைகள் படித்தால் 110 நூல்கள் படித்ததற்கு சமம்.  பல்வேறு நூல்கள் படித்து பழச்சாறாக வழங்கி உள்ளார். 

 ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக சிறந்த சிந்தனையுடன் மிக நுட்பமாக கட்டுரைகளை வடித்து உள்ளார்.  பாராட்டுகள். முதன்மைச் செயலாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள்," நாம் புரட்டுவது புத்தகமல்ல, நம்மை புரட்டும் விதமாக இருப்பதே புத்தகம் ".என்று அது போன்ற நூலே இந்த நூல்.

       தமிழறிஞர் பேராசிரியர் அ.ச.ஞா. சம்பந்தன் அவர்களை நேரில் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு அவரைப்பற்றி எடுத்து இயம்பும் விதமாக முதல் கட்டுரை உள்ளது.  அ.ச.ஞா. அவர்கள் 27 பெரியோர்களின் வாழ்க்கை முறைகளைக் குறட்பாக்களுடன் ஒப்பிட்டு எழுதிய ‘குறள் கண்ட வாழ்வு’ என்ற நூலின் ஆய்வுரையாக உள்ளது.

       ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. எஸ்.எஸ். வாசன், அ.ச.ஞா அவர்களிடம் கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று கேட்க, உங்கள் இதழ் அளவிற்கு எளிமையாக என்னால் எழுத முடியாது என்று மறுத்து விடுகிறார்.  தொடர்ந்து வற்புறுத்தி, பேசுவது போல எளிய நடையில் எழுதி உதவுங்கள் என்று கேட்க அ.சா.ஞா எழுதிட சம்மதம் தெரிவித்து தொடர்ந்து 27 கட்டுரைகள் எழுதி பிரசுரமாக, பின் நூலாகவும் வந்து விட்டது.  

தன்னுடைய எழுத்து நடை எளிமையாக மாறியதற்குக் காரணம் திரு. எஸ்.எஸ். வாசன் என்று நன்றியோடு அ.ச.ஞா. குறிப்பிட்டதையும் கட்டுரையில் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இப்படி அறியாத பல தகவல்களை அறிந்து சொல்லும் விதமாக நூல் உள்ளது.

       அருட்செல்வர் நா. மகாலிங்கனார் எழுதிய ‘சிந்தனைச் சித்திரங்கள்’ என்ற நூலை ஆய்வு செய்து கட்டுரை வடித்து உள்ளார்.  அவர் பல்வேறு இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே சிந்தனைச் சித்திரங்கள் நூல். காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், காமராசர் பற்றி அவர் கட்டுரைகள் எழுதி, இளைய தலைமுறையினரின் நெஞ்சத்தில், தலைவர்களின் நேர்மையை, சிறப்பை விதைத்து உள்ள விதத்தை பாராட்டி கட்டுரை வடித்துள்ளார்.  சிந்தனைச் சித்திரங்கள் நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அந்நூல் பற்றி கட்டுரையில் நன்கு வடித்துள்ளார்.

பாரதி சீர் பரவுவார் கே. ரவி. இவர் சென்னையில் வசிப்பவராக இருந்தாலும் படைப்பாளி என்பதால் தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்கள், மதுரையில் உள்ள திருமலை மன்னர் கல்லூரியில் ஒரு நாள், படைப்பரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்து இருந்தார்.  அதில் வாசித்த கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது.  நானும் அந்த நிகழ்வில், கட்டுரை வாசித்த, மலரும் நினைவை மலர்வித்தது. திரு. சுகி. சிவம் அவர்கள் அவ்விழாவில் நிறைவுரையாற்றினார்.  வழக்கறிஞர் கே. ரவி அவர்கள் தொலைக்காட்சியில் திறம்பட செய்தி வாசித்த சோபனாவின் கணவர். அவருக்கு பாரதியின் மீதுள்ள ஈடுபாட்டை கட்டுரையில் நன்கு விளக்கி உள்ளார்.
       நா. பா. வின் நாவல்களுக்கான ஆற்றுப்படை, காற்றில் செதுக்கிய கல்வெட்டுக்கள், கவிஞர் மு. அண்ணாமலையின் பழங்கனவு, நெஞ்சை அள்ளும் சிந்தனைப் பெட்டகம், ஏர்வாடியார், கவிதை உறவு மாத இதழில் எழுதி வரும் ‘என் பக்கம்’ என்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் பற்றி ஆய்வு என நூலில் எல்லாம் உள்ளது.
பேராசிரியர் க. வெள்ளை வாரணனாரின் இசைத்தமிழ் கட்டுரையில் அவரது வரலாறு உள்ளது.  அவர் எழுதிய ‘இசைத்தமிழ்’ நூல் பற்றிய ஆய்வுரை உள்ளது.  தமிழிசையின் சிறப்பை, முதன்மையை நூலில் அவர் எழுதி உள்ளார்.  இசையில் மட்டுமல்ல.  இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளராக இருந்து, நூல் வடித்த அறிஞர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பான நல்ல கட்டுரை.  பாராட்டுகள்.
       ஏர்வாடியாரின் ‘மனத்தில் பதிந்தவர்கள்’ பற்றிய கட்டுரை மிக நன்று.  கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், கவிதை உறவு இதழில், மாதம் ஒருவரைப் பற்றி, ‘மனத்தில் பதிந்தவர்கள்’ கட்டுரை எழுதி வருகிறார்.  அதனைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  உச்சநீதிமன்ற நீதியரசர் கற்பக விநாயகம், முதுமுனைவர் வெ. இறையன்பு சஇ.ஆ.ப. தொடங்கி, முன்னாள் முதல்வர்கள் மட்டுமல்ல, சாதாரணமான என்னைப் பற்றியும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ பகுதியில் வதிந்துள்ளார்.  அந்த நூல் பற்றிய ஆய்வாக கட்டுரை உள்ளது.

       ஏர்வாடியார், ‘இனிய காண்க’, ‘உடன்பாட்டுச் சிந்தனையாளர்’ என்று அவரது பண்பை எழுத்து நடையாக படம்பிடித்துக் காட்டி உள்ளார்.  சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் கவிஞர் வா.செ. குழந்தைசாமி, மறவன் புலவு 
க. சச்சிதானந்தம், முதல் ஹைக்கூ நூல் எழுதிய கவிஞர் அமுதபாரதி, பேச்சாளர் முனைவர் திருமதி சாரதாநம்பி ஆருரன். பதிப்புசி செம்மல் 
ச. மெய்யப்பனார் - இப்படி பல ஆளுமைகள் பற்றி, ஏர்வாடியார் வடித்த கட்டுரைகளின் சிறப்பை, நுட்பத்தை, திட்டத்தை எடுத்து இயம்பும் விதமாக கட்டுரை உள்ளது.  ‘மனத்தில் பதிந்தவர்கள்’பகுதியில் மாதம் ஒருவரைத்தான் அறிமுகம் செய்கிறார்.  ஆனால் பலரும் நாம் இடம் பெற மாட்டோமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.  இந்த நூல் படித்தால் அவர்கள் ஏக்கம் இன்னும் கூடி விடும் என்பது உண்மை.

       இனிய நண்பர், இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணிபுரியும் கவிஞர் புதுயுகன் எழுதிய ‘மழையின் மனதிலே’ நூல் விமர்சனமும் உள்ளது. இந்நூலிற்கு நானும் விமர்சனம் எழுதி இணையங்களில் பதிவு செந்துள்ளேன். அவரது கவிதை, சில துளிகள்.

நிராகரித்தவனை நேசி 
நிராகரிப்பை நிராகரி !

வாழ்க்கை உன்னை கசக்கிப் போட்டாலும்
மனதை அழகாக மடித்துவை 
நாளைய பட்டுத்துணி நீயாகலாம்!

வாழ்க்கை காடு ; நீ புலியா? மானா?
சூரியோதத்திலேயே தீர்மானித்துவிடு.

இந்த நூலில் சில நாட்களுக்கு முன்பு மறைந்த முதுபெரும் கவிஞர்  வா. செ. குழந்தை சாமி (குலோத்துங்கன் ) தொடங்கி, வளரும் கவிஞர் புதுயுகன் வரை ஆய்வுரை வழங்கி ‘படித்தாலே இனிக்கும்’ என்ற நூலின் தலைப்பை மெய்ப்பித்துள்ளார்.
       
பதிப்பு உலகில் தனி முத்திரைப் பதித்து வரும் வானதி பதிப்பகம் மிகச் சிறப்பாக வடிவமைத்து பதிப்பித்து உள்ளனர் .பாராட்டுகள்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்