நன்றி ! கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி !
அயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி !
பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெறுகிறது
தென்னிந்தியாவின் சமூக புரட்சியின் தந்தையான க. அயோத்தி தாச பண்டிதர் (மே 20, 1845 – மே 5, 1914) நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களுள் ஒருவர். சிறந்த தமிழ் புலவராகவும், சித்த மருத்துவராகவும் விளங்கிய அயோத்தி தாச பண்டிதர் தமிழ் பவுத்ததை மீட்டெடுத்த மீட்பர் ஆவார். சாதி, மத மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்த அயோத்தி தாச பண்டிதர் ,தென்னிந்தியாவில் சமூக விடுதலைக்கான முதல் குரலாக ஒலிக்கிறார்.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை மையமாக கொண்டு இயங்கிய அயோத்தி தாச பண்டிதர் தமிழ் மொழியியல், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, பாலி போன்ற மொழிகளிலும் தேர்ந்து விளங்கினார். தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தின் மூலம் பேரரசர் அசோகருக்குப் பிறகு பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தார். இதன் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூர், குடகு, ஹூப்ளி, பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பெரும் அறிவொளியை உண்டாக்கினார்.
வடமொழி மயக்கத்தில் திளைத்த தமிழ் மொழியை தமது ''திராவிட பாண்டியன், தமிழன்'' ஆகிய இதழ்களின் மூலம் மீட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்கு வித்திட்டார். தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியான அயோத்தி தாச பண்டிதர் பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு சிந்தனையுடன் 1891-ம் ஆண்டு ''திராவிட மகாஜன சபை'' என்ற அமைப்பை தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த அயோத்தி தாச பண்டிதர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோருக்கு முன்னோடியாக விளங்குகிறார்.
தனித் தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் அயோத்தி தாச பண்டிதரே முன்னோடியாக விளங்குகிறார். கர்நாடகாவில் வாழும் இளம் தலைமுறையினருக்கு இத்தகைய பெரும் புரட்சியாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக '' புரட்சியாளர் அயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரும், ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், அயோத்தி தாச பண்டிதர் குறித்து ''அயோத்தி தாசர் வாழும் பவுத்தம்'' உள்ளிட்ட பல்வேறு நூல்களையும், ஆய்வு ஏடுகளையும் எழுதியுள்ளார்.
ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் பங்கேற்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பெங்களூரு, காக்ஸ் டவுனில் உள்ள செயிண்ட் அலோசியஸ் டிகிரி கல்லூரியில் சனிக்கிழமை (24-ம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பல்வேறு முக்கிய எழுத்தாளர்களும், தலித் சிந்தனையாளர்களும், முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் அயோத்தி தாச பண்டிதர் குறித்த சிறு வெளியீடும், புகைப்படமும் வழங்கப்படுகிறது. எனவே இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் அமைப்பினரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக