மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !
உலகம் தோன்றியபோதே தோன்றிய
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !
உலகின் முதல் மனிதன் பேசிய
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !
பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !
மண் தோன்றும் முன்பே இந்த
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !
திருக்குறள் என்ற இணையற்ற நூலை
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !
காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !
தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !
ஆய்வாளர்கள் அனைவரும் அறிவித்த மெய்
அனைத்து மொழிகளின் தாய் தமிழ் மொழி !
காந்தியடிகளைக் கவர்ந்த மொழி தமிழ்
கடல் கடந்த புலம் பெயர்ந்தோர் பேசும் மொழி !
தமிழ்மொழி ஒலிக்காத நாடே இல்லை
தமிழ்மொழி ஒலிக்காத நாடு நாடே இல்லை !
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும்
பைந்தமிழ் இளமையாக புதுமையாக உள்ளது !
எந்த மொழியும் நம் தமிழ்மொழிக்கு
ஈடு இணை இல்லை என்பது உண்மை !
உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம்
ஒப்பற்ற தமிழுக்கு மகுடம் சூட்டுவோம் !
சங்கத்தமிழ் இன்றும் என்றும் நன்றே வாழும்
மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கருத்துகள்
கருத்துரையிடுக