பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் பிரபல இதய நோய் மருத்துவர் சொக்கலிங்கம் உரை ! தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !
பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் பிரபல இதய நோய் மருத்துவர் சொக்கலிங்கம் உரை !
தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !
சீனாவில் பேசப் போய் இருந்தேன் ."100 ஆண்டுகள் வாழ வழி" தலைப்பு .நகைச்சுவையாக இங்கு உஙகள் உரை தேவை இல்லை என்றனர் .என்ன காரணம் என்று கேட்டபோது 110 வயது உள்ள பலர் இங்கு வந்துள்ளனர் என்றனர் .18,000 பேர் இருந்தார்கள் பேசிவிட்டு வந்தேன்.
இங்கு கூட்டம் குறைவு என்ற கவலை இல்லை .இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்கு சமமானவர்கள். திருவிழா திருப்பி எழுதினால் விழா திரு .தமிழ் திருப்பி எழுதினாழும் தமிழ் .தமிழை யாராலும் கவிழ்க்கவோ அழிக்கவோ முடியாது .
உலகம் பிரிந்து இருந்தாலும் எல்லோரும் மனதளவில் ஒன்றி வாழ வேண்டும் .
இரசியா சென்று இருந்தேன். அங்குள்ள கண்காட்சியில் உலகின் மூத்த மனிதர்கள் மூவரை வரிசைப் படுத்தி இருந்தனர் .அதில் முதல் மனிதன் 'தமிழன் ' என்று அறிந்த போது ,தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமை அடைந்தேன். தமிழராகப் பிறந்ததற்கு உலகத்தமிழர் யாவரும் பெருமை கொள்ள வேண்டும் .
சதுரத்திற்கு நான்கு முடிவு உண்டு .முடிவு இல்லாது செய்வது சமுதாய உழைப்பு.சமுதாயத்திற்காக உழைப்பவர்களுக்கு முடிவே இல்லை .
ஒரு பெரிய வெள்ளை காகிதத்தில் ஒரு சிறு கரும் புள்ளி இருந்தால் அதுவே அனைவரின் கண்ணிற்கும் முதலில் படும். 99% வெள்ளை 1% கரும்புள்ளி .இதுதான் வாழ்க்கை. கிடைத்ததற்கு மகிழ வேண்டும் .கிடைக்காததற்கு வருந்துவதால்தான் மனம் என்ற வெள்ளைத்தாளில் கரும்புள்ளி விழுகின்றது .மனதில் கவலை என்னும் கரும்புள்ளி விழாமல் பார்த்துக் கொண்டால் நோய் வரவே வராது .
'கிட்டாதாயின் வெட்டென மற' அவ்வை சொன்னாள். கிடைக்காதற்காக என்றும் வருந்தாதீர்கள் .வருத்தம் கவலை இவைதான் நோய்களின் காரணி .
உங்கள் நண்பர்களை உறவினர்களாக நினையுங்கள். உங்கள் உறவினர்களை நண்பர்களாக நினையுங்கள். வாழ்க்கை சிறக்கும் .
என்னுடைய புதுமொழி ஒன்று 'ஆவதும் மனதால். அழிவதும் மனதால் ' ஆம் இந்த உலகில் அதிக சக்தி வாய்ந்தது மனம்தான் .
மனதைப் பார்க்க முடியாது .தொட முடியாது ஆனால் உணர முடியும் .என்றும் எப்போதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தால் நோயே வராது .
எப்போதும் உடன்பாட்டு சிந்தனையே இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள்தான் நோய்களை உருவாக்குகின்றன .
பெரியார் ,காமராசர் ,எம் .ஜி .ஆர் , வேதாந்திர மகரிசி இவர்களுக்கு நான் மருத்துவம் பார்த்து இருக்கிறேன். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் .
உயிரே தெய்வம்.உடலே ஆலயம் .ஆலயத்தை சீராகப் பார்த்துக் கொள்ள வேண்டும் .
எனக்கு எல்லா மதமும் பிடிக்கும் .ஆனால் 'தாமதம் 'மட்டும் பிடிக்காது .
மேலே செல்ல கீழ்ப்படிகள் வேண்டும் .மேலே சென்றதும் கீழ்ப்படியவும் வேண்டும் .
எனக்கு வயது 72 .என் வாழ்நாளில் இதுவரை நான் ஒரு மாத்திரை கூட சாப்பிட்டது இல்லை .
எல்லோருக்கும் மரியாதை தருவேன் .ஆனால் நான் யாரையும் என்னைவிட உயர்ந்தவராக இதுவரை எண்ணியதில்லை.அதுபோல யாரையும் என்னைவிட தாழ்ந்தவராகவும் எண்ணியதில்லை.
மாமனிதர் கலாம் 'உலக மனிதர் யாவரும் ஒன்று' என்றார்.
முயல் ஆமை கதை கேட்டு இருக்கிறோம் .முயலுக்கும் முயலுக்கும்தான் போட்டி வைக்க வேண்டும். ஆமைக்கும் ஆமைக்கும்தான் போட்டி வைக்க வேண்டும்.முயலும் ஆமையும் தோற்காது .முயலமைதான் தோற்கும் .
வெற்றியை அடைவது அல்ல மகிழ்ச்சி .மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றி .
இரத்தம் பல வகை உண்டு .எல்லோரும்( BE POSITIVE ) வாக இருக்க வேண்டும் .காவலரிடம் ,வழக்கறிஞரிடம், மருத்துவரிடம் மாட்டாதீர்கள் .உங்கள் சொத்தை அழித்து விடுவார்கள் .இவர்களிடம் நண்பர்களாக இருங்கள். வாடிக்கையாளர் ஆகாத வாழ்க்கை வாழ வேண்டும் .
மூன்று 'உ ' மிக முக்கியம் .
உணர்வு ,உணவு ,உடற்பயிற்சி .
எண்ணும் எண்ணம் ,உண்ணும் உணவு ,உடற்பயிற்சி சீராக இருந்தால் வாழ்க்கை சிறக்கும் .
மனம் நன்றாக வைத்துக் கொண்டால் ,உடல் நன்றாக இருக்கும் .உடல் நன்றாக இருந்தால் உயிர் நன்றாக இருக்கும் .
உங்களை போலவே மற்றவரும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள் .எதிர்பார்த்து ஏமாற்றம் வந்தால் கோபம் வரும் .
அமைதி ,மகிழ்ச்சி ,சமநிலைப் போக்கு,நேர்மையான சிந்தனை நோய்களை விரட்டி நலம் தரும் .மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் .
உலகத்திலேயே அதிக மாரடைப்பு இந்தியாவில் தான் வருகின்றது .பூமியின் தூரம் 40,000 கிலோ மீட்டர் .ஒரு மனிதனின் உள்டளில் உள்ள நரம்புகளின் தூரம் 60,000 கிலோ மீட்டர் ஆகும் .
இதயத்திற்கு எப்போது ஒய்வு என்று கேட்டேன் .ஒருவர் சொன்னார் தூங்கும் போது என்று .அது தவறு .
இதயத்தின் எடை 300 கிராம்தான்.அதற்கு ஒய்வு கிடையாது. தூங்கும் போதும் ஒய்வு கிடையாது .
வருத்தப்படும் போதும் கோபப்படும் போதும் கொழுப்பு இந்தக் குழாயில் படியும் .மாரடைப்புக்கு காரணம் ரத்தக்குழாய் சுருங்குவது அடைபடுவது.
மனமது செம்மையானால் மரபு வழி வந்த நோயையும் மாற்ற முடியும் .தீர்க்க முடியும் .
மாரடைப்பு இல்லாமல் வாழ வழிகள் .
அதிகம் சாப்பிடக் கூடாது .
புகை பிடித்தல் கூடாது .
மது அருந்தக் கூடாது .
கவலைப்படக் கூடாது .
கோபப்படக் கூடாது .
மன அழுத்தம் கூடாது .
மன அழுத்தம் தென்றலாக சிறிய அளவில் இருக்கலாம் .
மன அழுத்தம் புயலாக பெரிய அளவில் இருந்தால் தவறு .
வாழ்வை சுகமாக எண்ணி வாழுங்கள் .வாழ்வை சுமையாக எண்ணி வருந்தாதீர்கள் .
மனநிலை சீராக வைத்து, காய்கறிகள் உண்டு, உடற்பயிற்சிகள் செய்து வாழ்ந்தால் நோய் வராது .
ஒன்று என்ற நீ உயிரோடு இருந்தால் அதோடு எத்தனை பூஜ்ஜியம் சேர்த்தாலும் மதிப்பு அதிகம் .
தொலைக்காட்சித் தொடர்கள் மனஅழுத்தத்தை உருவாக்கி வருகின்றன .
மாரடைப்பு பெரும்பாலும் திங்கட் கிழமை காலை 5 லிருந்து 8 வரை நிகழ்கின்றன .காரணம் சனி ,ஞாயிறு விடுப்பு முடிந்து திங்கட் கிழமை வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற கவலை .வேலையை மகிழ்வோடு எதிர் கொண்டால் மாரடைப்பு வராது .
மருத்துவத்துறையில் 49 ஆண்டுகள் முடிந்து, இன்று முதல் 50 வது ஆண்டு தொடங்குகின்றது .ஒரு நோயாளிக்கு கூட தூக்க மாத்திரை கொடுத்தது இல்லை .
குறைந்தது ஒரு மனிதன் 7 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் இயல்பாக வருமாறு மனதை வைத்துக் கொள்ள வேண்டும் .
சாப்பிடும் போது 'புரக்கை 'ஏறினால் யாரோ நினைக்கின்றனர் .என்பர் அது தவறு .உண்மை அல்ல. சாப்பிடும் போது அதனை கவனித்து ருசித்து சாப்பிடாமல் எதையோ நினைத்தால்தான் 'புரக்கை' ஏறும் .
1/2 வயிறு உணவு. 1/4 தண்ணீர் இருக்க வேண்டும் .
காலையில் நன்றாக சாப்பிடலாம் .மதியம் குறைவாக சாப்பிட வேண்டும் .இரவு மிகக் குறைவாக சாப்பிட வேண்டும்.தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக இரவு உணவை முடித்து விட வேண்டும் .தூங்கும் முன் பால் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும்
ஆண்கள் தொப்பை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழுந்தால் குறைக்க முயல் வேண்டும் .
என்னுடைய அறை 8 வது மாடியை உள்ளது .ஒரு முறை கூட மின்தூக்கியில் சென்றது இல்லை .என்னுடைய உதவியாளர் சொன்னார் . மின்தூக்கியில் சென்றால் சீக்கிரம் மேலே போய் விடலாம் .என்றார் .நான் சொன்னேன் "ஆம் மின்தூக்கியில் சென்றால் சீக்கிரம் மேலே போய் விடலாம். என்று .முடிந்தவரை படி ஏறி இறங்குங்கள் .உடல் நலனுக்கு நல்லது .
மனைவி என்றால் மனையில் விளக்கு ஏற்றி ஒளி ஏற்றுபவள். வாழ்க்கையை நீட்டுவதும் குறைப்பதும் நம் கையில் .
மூட நம்பிக்கை ஒழித்து, நம்பிக்கை, தன்னம்பிக்கை வளர்த்து, பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நோய் வராது .
.இந்த உலகத்தில் 100 % பொருத்தமான இணை யாரும் இல்லை என்பதே உண்மை .வேறுபாடு இருக்கவே செய்யும் அதோடு வாழ்வதுதான் வாழ்க்கை .
கல்லாமை ,பொறாமை , தீண்டாமை போன்ற ஆமைகளை வீட்டில் அல்ல மனதில் ஒழித்தால் வாழ்வு சிறக்கும் .
நேர்மை . எளிமை .வாய்மை ,இனிமை போன்ற மைகளை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும் .
நேற்று என்பது உடைந்த பானை !
நாளை எனது மதில் மேல் உள்ள பூனை !
இன்று என்பது கையில் உள்ள வீணை !
வாழ்க்கை என்பதே கணக்குதான் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக