படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி .தகவல் மருத்துவரசோமசுந்தரம் இளங்கோவன் ! அமெரிக்காவில் ஓர் அற்புதம் !
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி .தகவல் மருத்துவரசோமசுந்தரம் இளங்கோவன் !
அமெரிக்காவில் ஓர் அற்புதம் !
அமெரிக்காவில் நன்றித் திருநாள் என்பது மிகவும் அருமையாகக் கொண்டாடப் படும் நாள். வெளிநாட்டவர் வந்தபோது ஆதி அமெரிக்கர்கள் ( செவ்விந்தியர் என்பதை அவர்கள் விரும்புவது இல்லை) வான்கோழி, யாம் எனும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சோளம் இவற்றையெல்லாம் கொடுத்து வரவேற்றுள்ளனர். அதுவே நன்றித் திருநாளாக நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை குடும்பத்தவர் அனைவரும் இணைந்து பெரிய வான்கோழியை 6 மணி நேரத்திற்கு சூடேற்றி வேக வைத்து அழகாக அதை வெட்டி மற்ற சிறப்பான உணவுகளுடன் உண்பர். நமது பொங்கல் போல நன்றித் திருநாள்.
இந்த ஆண்டு ரோட் அய்லண்ட் மாநிலத்தில் பிராவிடன்சு நகரத்திலே ஓர் அற்புத நன்றித் திருவிழா நடந்தது. குடந்தையைச் சேர்ந்த மருத்துவர் திருஞான சம்பந்தம் அங்கு பல ஆண்டுகளாகப் புற்று நோய் மருத்துவராகப் பணி புரிகின்றார். 18 ஆண்டுகட்கும் மேல் தொடர்ந்து அந்த மாநிலத்தின் சிறந்த புற்றுநோய் மருத்துவர் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் வாக்கெடுத்துப் போற்றியுள்ளனர். அவர் யானைகள் அவரது அலுவலகத்தில் வைத்திருப்பார். அவருக்கு யானை பிடிக்கும் என்று பல நோயாளிகள் அவருக்கு உலகின் பல இடங்களிலிருந்தும் யானைகள் வாங்கிக் கொடுத்து அதை அழகாக வைத்துள்ளார். அவரது ஒரு நோயாளியின் மகள் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தார். மருத்துவர் சம்பந்தம் அவர்கள் அவரது நோயாளிகள், குடும்பத்தினர், மருத்துவ மாணவர்கள் அனைவரிடமும் அந்தந்த நிகழ்வுக்கு ஏற்ப திருக்குறளைச் சொல்லி அதை விளக்கி திருக்குறள் வாழ்வு நூல் என்பதனை பல ஆண்டுகளாக விளக்கி மருத்துவம் செய்பவர். அதிலே அவரது தமிழ்ப் பற்றையும் அவரது ஃகார்வேர்டு பல்கலைக் கழகத் தமிழ்த்துறை ஏற்பாட்டையும் அறிந்து ஒரு நன்றி விழா நவம்பர் 27 ல் நடத்தினார்.
ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு மற்ற நோயாளிகள், மருத்துவர்கள் என்று சேர்த்து " மருத்துவர் சம்பந்தம் நண்பர்கள் குழு " என்று ஏற்படுத்தி அனைவரையும் அழைத்து ஒரு விழா எடுத்து விட்டார். அங்கே ஒரு அமெரிக்கர் திருக்குறள் வாழ்த்து அட்டை அழகாகத் தயாரித்து அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுப்புமாதிரி வாழ்த்திதழ் விற்றார். பலர் நல்ல பொருட்களைக் கொண்டு வந்து அதற்கு குலுக்கல் அட்டைகள் விற்றுப் பரிசுகள் கொடுத்தனர். பலர் நன்கொடைகளைக் கொடுத்தனர். தமிழக நண்பர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். ஒரு தெலுங்குப் பெண் கோலம் நாட்டிய பள்ளியில் பயின்றவர் ஆசிரியை சுஜாதா ஏற்பாட்டில் " அம்மா,ஒரு கவித்துவம்" என்ற புதிய கவிதைக்குப் பரத நாட்டியம் ஆடிப் புதுமை படைத்தார்! நண்பர் சரவணன் தமிழின் பெருமை பற்றிப் பேசினார். ஃகார்வேர்டில் தமிழ் ஆசிரியாராக இருக்கும் ஜோனதான் ரயிலி மதுரையில் தமிழ் பயின்ற அமெரிக்கர் .தமிழ், தமிழ்ப் பண்பாடு எவ்வளவு சிறந்தது என்று அருமையாகப் பேசினார். மற்றவர்களைப் போல் "பை" போகிறேன் என்று சொல்வதில்லை. போயிட்டு வர்ரேன், வரட்டுமா என்று தான் சொல்வார்கள் என்றார். தமிழுக்கு உள்ள சிறப்பைத் திட்டமிட்டே இந்தியாவிலும், பல்கலைக்கழகங்களிலும் மறைத்து வைத்துள்ளனர். அதற்கு விடியல் தான் ஃகார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை என்று அழுத்தமாகப் பேசினார். அவர் பிராவிடன்சு நகரைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் அங்கு வந்திருப்பதைப் பெருமையாக அறிமுகப் படுத்தினார்.
மருத்துவர் சமபந்தம் அவரது நண்பர் சானகிராமன், மற்றும் தனது துணைவியார் விசயலட்சுமி தான் இதற்கு முழுக்காரணம் என்றும், அவரது தமிழ்க் கல்வியும், திருக்குறளுமே தனக்கு உலகச் சிந்தனை, அன்பு,அறம்,ஈகை இவற்றைப் புரிய வைத்தன் வென்றும் அவரை வர வேற்று மதித்து உண்மையான அன்பைப் பொழியும் பிராவிடன்சு மக்களுக்கு நன்றி கூறினார். அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்கள்.
தோசையும், இட்லி,வடை மற்றும் நல் விருந்து அனைவர்க்கும் வழங்கப்பட்டதும், அமெரிக்கர்கள் விரும்பி உண்டு மகிழ்ந்து சென்றதும், இந்த விழாவே ஒரு அற்புத நன்றி விழாவாக அமைந்ததும் தமிழுக்கும், ஒரு தமிழருக்கும் அமெரிக்கர்கள் நன்றி தெரிவித்த முறையும் சிறப்பாக அமைந்தது !
கருத்துகள்
கருத்துரையிடுக