ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பி. வேல்முருகன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

ஹைக்கூ கவிதைகள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் பி. வேல்முருகன் !

அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

*****
       நூல் ஆசிரியர் கவிஞர் பி. வேல்முருகன் அவர்கள், மாமதுரைக் கவிஞர் பேரவை கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசும் பாராட்டும் பெற்றவர்.  துடிப்புள்ள இளைஞர்.  வாழ்வது கிராமம் என்றாலும் வளமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்.  

வெட்டு ஒன்று ; துண்டு இரண்டு ; வரிகள் மூன்று – இதுதான் ஹைக்கூ இலக்கணம்.  இந்த இலக்கணப்படி இந்நூலில் நிறைய ஹைக்கூக்கள் உள்ளன.  படிக்கும் வாசகர் சிந்தையில் சிறு பொறி தட்டுமானால் அது தான் ஹைக்கூ கவிதை வெற்றி.  ஒரு கவிஞன் தான் உணர்ந்த உணர்வை தன் வாசகனுக்கு உணர்த்திடும் யுக்தி தான் ஹைக்கூ. படைப்பாளி படைத்த நோக்கம் மட்டுமல்ல, மற்றுமொரு பொருளிலும் வாசகர் புரிந்து கொள்வது ஹைக்கூவின் தனிச்சிறப்பு.

       விளைநிலங்கள் எல்லாம் வீட்டடிமனைகளாக மிக வேகமாக மாறி வருகின்றன.  இன்னும் 50 வருடங்கள் கழித்து உண்ண உணவே இல்லாத நிலை கூட வரலாம்.  கிராமத்து விவசாயம் அறிந்தவர் நூல் ஆசிரியர்.

       நிலமெல்லாம்
       நடுகல்
       விவசாயம் புதைக்கப்பட்டதால் !

       இறந்தவர்களுக்கு நடுகல் நடும் பழக்கம் அன்று தமிழர்களிடையே இருந்தது. இன்று வீட்டடிமனைக்க்கு நட்ட கல்லையும் விவசாயம் மறைவிற்கான நடுகல்லாகப் பார்த்து எச்சரிக்கை விடுப்பது சிறப்பு.

       சாலை விபத்து
       மனிதம் இறந்து கிடந்தது
       மனிதர்கள் கடந்து சென்றார்கள் !

       இன்றைக்கும் சாலையில் விபத்தைப் பார்த்தால் நமக்கு எதற்கு வம்பு.  காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலைய வேண்டும் என்று பார்த்தும், பார்க்காது போல் செல்லும் சராசரி மனிதர்கள் பெருகி விட்ட காலம்.  மனிதராக இருந்தால் சக மனிதனுக்கு துன்பம் என்றால் உதவ வேண்டியது மனிதன் கடமை. அதுதான் மனிதாபிமானம் என்று உணர்த்தும் ஹைக்கூ நன்று.

       பல வீடுகளில் இன்றைக்கு நடக்கும் அவலம், மகனோ, மகளோ வெளியூர்களில், வெளிநாடுகளில் இருப்பார்கள்.  வயதானவர்கள் இங்கு துன்பத்தில் இருப்பார்கள்.  உதவிக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.  ஏன் இன்னும் சொல்லப் போனால் இறுதிச் சடங்கிற்கு கூட பலர் வருவதில்லை. இளைய தலைமுறையினரின் பணத்தாசை காரணமாக மற்றும் சூழ்நிலை காரணமாக மனிதம் தொலைக்கும் அவலம் சுட்டும் ஹைக்கூ. 

       சொந்த வீட்டில்
       அனாதை
       பட்டணத்தில் பெற்ற பிள்ளைகள் !

       மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாக எழுதி சிந்திக்க வைத்துள்ளார்.படித்ததும் நெகிழ்ந்து விட்டேன் .பாராட்டுகள்.

       மனமது செம்மையானால் மந்திரங்கள் சொல்ல வேண்டாம் என்பார்கள்.  உள்ளமே கோயில் என்பார்கள்.  ஆனால் இன்றைக்கு பெரும்பாலான அரசியல்வாதிகளின் மனம் அழுக்காகவே உள்ளது.  அவர்கள் திருந்தவில்லை ; மாறவில்லை. தண்டனைகள் பெற்றபின்னும் சிலர் திருந்துவதே இல்லை.அவர்களது மனங்களை தூய்மையாக்க வழியே இல்லை என்ற உண்மையை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

       விஞ்ஞானத்தில் வழியில்லை
       மனமாகிய கழிப்பறை
       சுத்தம் செய்ய !

சுத்தம் செய்ய வழி உண்டு .மனசாட்சி செய்யாதே எனச் சொல்லும், அதனைச் செய்யாது இருந்தால், வாழ்வு செம்மையாகும்.என்ன நினைத்தீர்கள்.என்று கேட்டால் உள்ளதை நினைத்ததை சொல்லும் அளவிற்கு எப்போதும் நினைவு நல்லது இருந்தால் , மனம் சுத்தமாகும் .

       கேள்விகள் கேட்டு சிந்திக்க வைப்பது ஹைக்கூ கவிதையில் ஒரு வடிவம்.

       புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் எழுதிய புகழ்பெற்ற ஹைக்கூ ஒன்று இவ்வகை தான்.

       கொடி தந்தீர்
       குண்டடி தந்தீர்
       சட்டை?

       நூலாசிரியர் கவிஞர் பி. வேல்முருகன் ஹைக்கூ இதோ!

       காட்டிற்குள் மனிதன்    
       வீட்டிற்குள் மிருகம்
       மாற்றியது யார்?

       உண்மை தான். விலங்கிலிருந்து மனிதனாக மாறியவன் இன்று விலங்காகவே மாறி வருகிறான்.  மனிதம் மறந்து விடுகிறான்.

       காட்சிப்படுத்துதல் ஹைக்கூவில் ஒரு வகை.  அந்த வகையில் ஒரு ஹைக்கூ எழுதி படிக்கும் வாசகர்களின் ஏழ்மை குறித்து சிந்திக்க வைத்து பகுத்தறிவை விதைத்துள்ளார், பாராட்டுகள்.

       ஏழைச்சிறுமி
       எச்சில் விழுங்குகிறாள்
       தேனும் பாலும் சிலையின் மேல் !

       தடுக்கி விழுந்தால் மதுக்கடை.  மதுக்கடை மூடினால் நாட்டில் அமைதி நிலவும், வன்முறை விலகும்.  ஒரேயடியாக மூடுவது தான் சிறந்த வழி.  படிப்படியாக என்பது பயன் தராது.  குடியின் கொடுமை உணர்த்தும் ஹைக்கூ நன்று.

       முள்ளுக்குள்
       வாழ்க்கை
       குடிகாரக் கணவன் !

       நாம் பார்த்து இன்புறுகிறோம்.  ஆனால் தொட்டியில் உள்ள அந்த மீன்களுக்கு துன்பம் தான் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

       முட்டி மோதி
       முயற்கிக்கிறது
       தொட்டி மீன்கள் !

       உடைத்து வெளியே செல்ல முடியாது என்ற நிலையிலும் மீன்கள் முயற்சியைக் கைவிடுவதில்லை என்பதும் உண்மை.

       மனிதர்களின்
       மரணத்தை விடக் கொடியது
       மரங்களின் மரணம்!

       நூலாசிரியரின் இயற்கை நேசம் பறைசாற்றும் ஹைக்கூ நன்று.  நூற்றாண்டு கடந்து பலன் தரும் மரங்கள் இன்றும் உண்டு.  அவைகள் வெட்டப்படும் போது அது மனிதனின் மரணத்தை விட கொடியது என்பது முற்றிலும் உண்மை.  இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன.  படித்துப் பாருங்கள். ஹைக்கூ நூற்றாண்டு விழா கொண்டாடும்   நேரத்தில்  வந்துள்ள நல்ல ஹைக்கூ நூல் . நூலாசிரியருக்கு பாராட்டுகள்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்