காந்தியடிகளும் அகிம்சையும்
கவிஞர் இரா இரவி
******
காந்தியடிகளை, காந்தியடிகள் என்றவர் தமிழறிஞர் திரு.வி.க.. காந்தியடிகளை மகாத்மா என்றவர் நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர். காந்தியடிகளை தேசப்பிதா என்றவர் மாவீரன் நேதாஜி. இந்த நாட்டிற்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டிட வேண்டியவர் தந்தை பெரியார். மிகப்பெரிய ஆளுமைகள் அனைவரும் போற்றிய அகிம்சா மூர்த்தி காந்தியடிகள்.
காந்தியடிகள் என்றால் அகிம்சை. அகிம்சை என்றால் காந்தியடிகள். உலக அமைதிக்கு அகிம்சை என்ற நூலின் ஆசிரியர் மட்டுமல்ல எழுதியது போலவே வாழ்ந்தும் காட்டியவர்.
காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் நாளான உலக அகிம்சை தினமாக, உலக அமைதி தினமாக ஐ.நா. மன்றம் அறிவித்துள்ள அறிவிப்பு. காந்தியடிகளின் அகிம்சைக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.
100க்கும் மேற்பட்ட நாடுகள் 300க்கும் மேற்பட்ட அஞ்சல்தலைகளை காந்தியடிகளுக்கு வெளியிட்டுள்ளது. நாணயங்களும் வெளியிட்டுள்ளன. நமது இந்தியாவின் பணம் அனைத்திலும் காந்தியடிகள் சிரித்த முகத்துடன் அன்பைப் போதித்து வருகின்றார்.
அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவிடம் நீங்கள் சந்திக்க ஆசைப்படும் மனிதர் யார் என்ற கேள்விக்கு காந்தியடிகளுடன் அமர்ந்து உணவு அருந்த வேண்டும் என்றார்.
நோபல் பரிசு காந்தியடிகளுக்கு வழங்கவில்லை. ஆனால் காந்தியடிகளின் காந்தியமான அமைதி, அகிம்சை வழி நடந்த பலர் நோபல் பரிசு பெற்றனர்.
மார்டின் லூதர் கிங், தலாய்லாமா, நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பலர் நோபல் பரிசு பெறுவதற்கு காரணமாக இருந்தது காந்தியடிகளின் அகிம்சை கொள்கை ஆகும்.
காந்தியடிகளின் அகிம்சை கொள்கையை ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
நன்னயம் செய்து விடல்.
தீங்கு செய்த பகைவனுக்கும், அவன் வெட்கப்படும் வண்ணம் நன்மை செய் என்கிறார் திருவள்ளுவர். இந்தத் திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்தது அறிஞர் டால்ஸ்டாய். காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் குரு நமது திருவள்ளுவர். திருக்குறளின் அருமை, பெருமை அறிந்த காந்தியடிகள்," எனக்கு இன்னொரு பிறவி என்ற ஒன்று இருக்குமானால் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன். காரணம் திருக்குறளை எழுதிய மூல மொழியான தமிழிலேயே படித்து இன்புற வேண்டும்". என்றார்.
தென் ஆப்பிரிக்கா நீதிமன்றத்தில் இந்திய குசராத்தியர் வழக்கப்படி தலைப்பாகை அணிந்து சென்றார் காந்தியடிகள். நீதிபதி தலைப்பாகை எடுத்து விட்டு வருக என்றதற்கு, எடுக்க மறுத்து வெளியேறினார். அங்கு உரிமைப் பிரச்சனை. ஆனால் அதே காந்தியடிகள் மதுரை மேலமாசி வீதியில் அரையாடை அணிந்தார். அது கொள்கை முடிவு.
தென் ஆப்பிரிக்காவில் தொடர்வண்டியில் பயணம் செய்த போது முதல் வகுப்பிற்கான சீட்டுடன் இருந்த காந்தியடிகளை கீழே இறங்கிடச் சொன்னார். இறங்க மறுத்த காந்தியடிகளை கீழே தள்ளி விட்டு உடைமைகளை வீசி எறிந்தார்.
காந்தியடிகள் அகிம்சையைக் கடைபிடித்து நீண்ட தந்தி ஒன்றை நிர்வாகத்திற்க்கு அனுப்பினார். நிறவெறியை அங்கு உணர்ந்தார். தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா மக்களுக்காக போராடினார். இன்று அதே இடத்தில் நினைவுச் சின்னம் வைத்துள்ளனர். அதுவும் அகிம்சையின் வெற்றி.
தென்ஆப்பிரிக்கா ஜட்கா வண்டியில் பயணம் செய்யும் போது காந்தியடிகளை வண்டியின் உள்ளே வெள்ளையர் மட்டும் தான். ஓட்டுனர் அருகே அமரவும் என்றார். சரி என்று ஓட்டுனர் அருகே அமர்ந்து வந்தார். ஒரு இடத்தில், நான் புகை பிடிக்க வேண்டும், ஓட்டுனர் அருகே நான் அமர்ந்து கொள்கிறேன், ஜட்கா வண்டியில் மிதித்து ஏறும் படியின் மீது அமர்ந்து வரவும் என்ற போது, காந்தியடிகள் உறுதியாக மறுத்தார். உடன் அந்த வெள்ளையர் பலவந்தமாக பிடித்து இழுத்த போது கைகளை விடாமல் வண்டியைப் பிடித்துக் கொண்டார். வண்டியின் உள்ளே இருந்த வெள்ளையர்கள் காந்தியடிகள் வண்டியின் உள்ளே அமரட்டும் என்று சொல்லி இடம் தந்தனர். இதுவும் அகிம்சையின் வெற்றி.
அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல. அதற்குத்தான் வீரம் வேண்டும். மனோபலமே அகிம்சை என்பார் காந்தியடிகள். உரிமைக்காக அகிம்சை வழியில் போராடலாம் என்று போராடியவர். 17 முறைகள் உண்ணாவிரதம் இருந்தவர். இப்போது போல 10 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு முடிக்கும் உண்ணாவிரதம் அல்ல. 21 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தவர்.
காந்தியடிகள் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திட நினைத்த வெள்ளையர், உண்ணாவிரதத்தின் போது 4 கிலோ எடை கூடி இருந்ததாக்ச் சொன்னார்கள். அந்த எடை பார்க்க்கும் இயந்திரத்தை சோதனையிட்ட போது எல்லோருக்கும் 4 கிலோ எடை கூட்டிக் காட்டியது. வெள்ளையர்கள் முகத்திரை கிழிந்து அசிங்கப்பட்டனர்.
இந்தியாவில் முதன்முதலில் காந்தியடிகளுக்கு கோவில் கட்டியது தமிழகம் தான். ஈரோடு அருகே உள்ளது. வருடாவருடம் காந்தியடிகள் பிறந்த நாள் அன்று அபிசேகம், ஆராதனை நடைபெறுகின்றது. காந்தியடிகளுக்கு மட்டுமல்ல. காந்தியடிகளுக்கே அகிம்சையைக் கற்றுக் கொடுத்து உற்ற துணையாக விளங்கிய கசுதூரிபாயின் சிலையும் கோயிலின் உள்ளே உள்ளது. அந்தக் கோயில் படங்களும், காந்தியடிகளுக்கு அபிசேகம் செய்த படங்களும் இணையத்தில் உள்ளன. அப்பகுதி செல்பவர்கள் சென்று பார்க்கலாம்.
தென் ஆப்பிரிக்காவில் பணம் வருகிறது என்பதற்காக அவர் எல்லா வழக்கையும் ஏற்கவில்லை. ஒரு கொலையாளியிடம் வழக்கை ஏற்க மறுத்தார். குற்றவாளியை விடுதலை செய்ய வாதாடி, சட்டத்தைக் கொலை செய்ய விரும்பவில்லை என்றார். பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றம் கொண்டு செல்லாமலேயே பேச்சுவார்த்தையின் மூலமே முடிவுக்குக் கொண்டு வந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமை பறிக்கும் மசோதா நிறைவேற இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று அகிம்சை வழயில் போராடினார். ஆயினும் மசோதாவை நிறைவேற்றினார்கள். அந்த மசோதாவிற்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல் தர வேண்டும், எனவே இங்கிலாந்து ராணிக்கு மடல் அனுப்பி மசோதாவை தடுத்து நிறுத்தினார். இப்படி பல வெற்றிகள் கண்டார்.
ஒரு கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. முடியும் தருவாயில் கதவருகே ஒருவரை சந்தித்தார். உடன் காந்தியடிகள் அவரிடம் சென்று பேசினார். அவர் கத்திக் கத்திப் பேசினார். பேசி முடிந்து அவரிடமிருந்து ஒன்று வாங்கி வந்தார். என்ன என்று கேட்ட போது," என்னைக் கொலை செய்திட வந்தார். என்னுடைய நியாயத்தை அவரிடம் இயம்பினேன். என்னைக் குத்துவதற்காகக் கொண்டு வந்த கத்தியை என்னிடமே தந்து விட்டுப் போனார்." என்றார் காந்தியடிகள்.
திருட வந்த திருடனை மன்னித்து உணவளித்து ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டு, திருத்தி பணியாற்ற வைத்தவர் காந்தியடிகள். காந்தியடிகளை மதவெறியன் கோட்சே சுடும் முன் காந்தியடிகளுடன் 10 நிமிடம் பேசி இருந்தால், துப்பாக்கியை காந்தியடிகளுடமே தந்து விட்டு போய் இருப்பான் என்பது உண்மை.
இன்றைக்கு உலக அளவில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு பேச்சுவார்த்தையே. அகிம்சை தத்துவத்தை திருக்குறளை உலகறிய வைத்தவர் காந்தியடிகள்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kav ignar-eraravi
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kav
கருத்துகள்
கருத்துரையிடுக