நல்லவை நாற்பது!நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நல்லவை நாற்பது


நூல் ஆசிரியர்கள் : 
பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் !
    பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !
-------------------------
நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம் 21, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், 
சென்னை 17.
பக்கங்கள் 200 விலை ரூ.200.
******
      நல்லவை நாற்பது நூலின் தலைப்பே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது.  எப்போதும் நல்லவையே சிந்தித்து நல்லவையே எழுதி நல்லவையே பேசும் நேர்மறை சிந்தனை உடன்பாட்டுச் சிந்தனையோடு உடன்பட்டு இருக்கும் இலக்கிய இணையரின் இனிய இலக்கிய படைப்பு இந்நூல்.
      நம்மை ஆண்ட இங்கிலாந்துகாரர்களின் உயர்கல்வி கல்லூரியில் கல்வித்துறைத் தலைவராக விளங்கும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது.
      பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.  ஆற்றல்சால் அருளாளர்கள் தலைப்பில் 10 அருளாளர்கள் பற்றி கட்டுரைகளும், தகைசால் தமிழ்ச் சான்றோர்கள் தலைப்பில் 6 அருமையாளர்கள் பற்றிய கட்டுரைகளும் கவிஞர் பாசறை என்ற தலைப்பில் 7 முத்திரைக் கவிஞர்கள் பற்றிய கட்டுரைகளும் வெள்ளித்திரை வித்தகர்கள் என்ற தலைப்பில் 5 வல்லவர்கள் பற்றி கட்டுரைகளும், தமிழ் உலா என்ற தலைப்பில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என 6 கட்டுரைகளும் விழுமியப் பேழை என்ற தலைப்பில் வாழ்வியல் மகிழ்ச்சி மந்திரக் கட்டுரைகள் 7 கட்டுரைகளும் ஆக மொத்தம் நாற்பது கட்டுரைகள் நூலில் இருப்பதால் நல்லவை நாற்பது என்பது காரணப் பெயராகி விடுகின்றது.
      கணினி யுகத்திலும் நூல் வாசிப்பது என்பது தனி சுகம்.  தொலைக்காட்சி வருகையின் காரணமாக படிக்கும் பழக்கம் குறைந்து, பார்க்கும் பழக்கம் மிகுதியாகி விட்டது.  தினமும் சில மணி நேரங்கள் வாசித்து வந்தால் மனமகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கும்.  இந்த நூல் வாசிக்கும் முன்பு மனச்சோர்வோடு இருந்தேன். படித்து முடித்தவுடன் மன மகிழ்ச்சியாகி புதுத்தெம்பு பிறந்தது.  நூலை வாங்கி வாசித்துப் பாருங்கள். நான்  எழுதியது உண்மை என்பதை உணருங்கள்.
      நூலினை மிகத் தரமாக அச்சிட்டு வெளியிட்ட வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுகள். இலக்கிய இணையர்கள் பல பதிப்புகளுக்கு  நூல் எழுதி இருந்தாலும் வானதி பதிப்பகக் கூட்டணி வெற்றி கூட்டணியாகி விட்டது.  வெற்றிநடையிட்டு தொடர வாழ்த்துகள்.
      ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஒரே நூலில் இரண்டு தமிழ் பேராசிரியர்களின், இலக்கிய இணையரின் இலக்கிய விருந்தாக நூல் உள்ளது.  பொதுவாக ஓர் எழுத்தாளரின் மனைவி எழுத்தாளராக இருப்பதில்லை.  இருவருமே காதலித்து, கரம் பிடித்து மனம் முடித்து மணி விழா கண்ட வெற்றி இணையர்.  இருவருமே எழுத்தாளராக, பேச்சாளராக அமைந்தது என்பது வரம் என்றே சொல்ல வேண்டும்.
      முதல் கட்டுரை வள்ளலார் பற்றியது.  வள்ளலாரின் ஆசிரியர், வேண்டாம் வேண்டாம் என்று எதிர்மறை சிந்தனையுடனான பாடல் பாடிய போது, வேண்டும் வேண்டும் என்று உடன்பாட்டுச் சிந்தனையுடன் பாடிய நிகழ்வு, அவரது வரலாறுக் கட்டுரையின் முடிப்பு முத்தாய்ப்பு.
     " உடம்பு புண்படாது, மனம் புண்படாது, ஒழுக்கம் பொய்படாது  நடந்து காட்டுவதே வள்ளலார் போற்றிய விழுமிய வாழ்க்கை நெறியாகும்."
 இன்றைய தலைமுறைக்கு விவேகானந்தரின் பத்து கட்டளைகளுக்கு விரிவான விளக்கம் தந்த எழுதிய கட்டுரை அருமை.  விவேகானந்தருக்கு பெருமை.  நடையில் புதுமை  உடன்பாட்டுச் சிந்தனையின் மொத்த வடிவம் விவேகானந்தர் என்பதை உணர்த்திடும் நல்ல கட்டுரை.
      கர்மவீரர் காமராசர் பற்றிய கட்டுரை மிக நன்று. வாலியின் வைர வரிகளோடு தொடங்கி காமராசரின் நகைச்சுவை உணர்வு, கண்ணதாசன் பாடிய காமராசர் தாலாட்டு வைர வரிகள் எழுதி
தமிழர்கள் அருமை வரிகளோடு முடித்த முடிப்பு, தித்திப்பு .
" இறந்த பின்னும் நீ வாழ நினைத்தால், வாழும் போது பிறருக்கு நன்மை செய்."
காமராசர் செய்த நன்மையால் தான் பலர் பசியாறி கல்வி பெற்று, உயர்பதவிகளும் பெற்றனர்.  அதனால் தான் காமராசர் இன்றும்
நினைக்கப்படுகிறார். அவர் பற்றி நான் எழுதிய கவிதையும் என் நினைவிற்கு வந்தது.  
காமராசர் காலம் பொற்காலம்!
அவர் காலமானதால் 
காலமானது பொற்காலம்!
 ஒரு கட்டுரை படிக்கும் போது அது தொடர்பான மற்றவைகளும் நம் நினைவிற்கு வந்தால் அது நூலாசிரியரின் வெற்றி.
      மு.வ. வின் செல்லப்பிள்ளை முனைவர் இரா. மோகன், காதலித்த நிர்மலா மோகன் அவர்களை மு.வ. வின் சம்மதத்துடன் கரம் பிடித்தவர்.  மு.வ. பற்றி பலர் எழுதியதைப் படித்து இருக்கிறேன்.  ஆனால் இலக்கிய இணையர் மு.வ. பற்றி எழுதும் கட்டுரைகளில் உயிர்ப்பு இருக்கும், உண்மை இருக்கும், படிக்க சுவையாக இருக்கும். மு.வ.வின் மதிப்பை உயர்த்துவதாக இருக்கும்.  முத்தமிழ் விருந்து என்றே கூறலாம்.  உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரை.
      “திருக்குறளைப் போன்று மனித இனத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும் நீதி இலக்கியம் உலகில் வேறெந்த மொழிகளிலும் தோன்றவில்லை 
என்பது எளிதில் புலனாகும். கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்யிற்கு அலைவது போல ஒப்பற்ற திருக்குறளை வைத்துக் கொண்டு மேல்நாட்டு அறிஞர்களிடம் போய் தேடுவதும் மடமை என்பதையே உணர்த்திடும் நல்ல கட்டுரை.
      பழமொழிகள் அனைத்தும் பொன்மொழிகள். வாழ்வில் கடைபிடித்தால் வாழ்க்கை சிறக்கும்.  பழமொழிகள் விளக்கிய கட்டுரை மிக நன்று.
      இப்படி 40 கட்டுரைகளும் 40 சுவை தருகின்றன. ஒவ்வொன்றையும் எடுத்து இயம்பினால் நூல் விமர்சனமும் ஒரு நூல் ஆகிவிடும்.  பதச்சோறாக சில மட்டும் எழுதியுள்ளேன்.
      நூலாசிரியர்கள் இலக்கிய இணையர்களுக்கு அக்கால இலக்கியமான சங்க இலக்கியமும் இக்கால இலக்கியமான ஹைக்கூ கவிதையும், பழமையும், புதுமையும் எல்லாம் அத்துபடி.  வாசிப்பை நேசிப்பாக கொண்டு இருவரும் வாசித்து வரும் பழக்கம் தான் மிகச் சிறந்த கட்டுரைகள் எழுதுவதற்கு உந்து சத்தியாக விளங்குகின்றன.  
இவர்கள் இல்லம் சென்றவர்கள் நன்கு அறிவார்கள். மாடியில் தனியாக நூலகம் இருந்தாலும் கீழே திரும்பிய பக்கம் எல்லாம்
நூல்கள் தான்.
   படித்து படித்து பண்பட்டு எழுதி எழுதி குவித்து வருகிறார்கள்.  இலக்கிய இணையர்க்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.. 

வானதி பதிப்பகம் இந்த நூலை மிகத்தரமாக வடிவமைத்து அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் .இலக்கிய இணையர் வானதி பதிப்பகம் வெற்றிக்  கூட்டணியாகிவிட்டது .தொடர்ந்து நல்ல நூல்கள் இந்தக் கூட்டணி யில் வந்து கொண்டே இருக்கின்றன .பாராட்டுகள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
 

கருத்துகள்