எதிர்கால கனவு ! கவிஞர் இரா .இரவி !
இமயம் முதல் குமரி வரை ஆறுகளால்
இந்தியா ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் !
சாதி மதம் மறந்து மனிதர்கள் யாவரும்
சகோதரர்களாகச் சங்கமிக்க வேண்டும் !
உயர்ந்தவன் தாழ்ந்தவன் மனிதரில் இல்லை
ஒவ்வொருவரும் இதனை உணர்ந்திட வேண்டும் !
உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் சமம்
உலகம் அறிந்து உணர்ந்து மாறிட வேண்டும் !
அண்டை மாநிலங்கள் அனைத்தும் மனம் மாறி
அன்பு காட்டி மகிழ்ந்திட வேண்டும் !
தானம் தந்த கச்சத்தீவைத் திரும்பப் பெற்று
தமிழக மீனவர்களை சுதந்திரமாக செல்ல வேண்டும் !
ஏழை எவருமில்லை நாட்டில் என்றாகி
எல்லோருக்கும் சமவாழ்வு சாத்தியமாக வேண்டும் !
ஆணவக் கொலைகள் அடியோடு ஒழிந்து
அன்புக்காதலை அங்கீகரிக்க வேண்டும் !
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்
மதச்சண்டைகள் உலகில் ஒழிய வேண்டும் !
பெண்களுக்கு சமஉரிமை வழங்கிட வேண்டும்
பெண்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் !
பதுக்கிய கோடிகள் அரசுடைமையாக்கிட வேண்டும்
பதுக்கியவர்களை சிறையில் அடைத்திட வேண்டும் !
எதிலும் பாரபட்சம் இல்லாது ஒழிய வேண்டும் !
உண்மை நேர்மை அரசியலில் மலர வேண்டும்
ஊழல் கையூட்டு அடியோடு அழிய வேண்டும் !
கள்ளம் கபடமற்ற நல்ல உள்ளம் வேண்டும்
கள்ளமில்லாக் குழந்தை உள்ளம் பெறவேண்டும் !
மதுக்கடைகள் எங்கும் இல்லாத நிலை வேண்டும்
மதுக்கொலைகள் இல்லாது மறைய வேண்டும் !
தனியார் கல்வி அரசுடைமையாக வேண்டும்
தரமான அரசுக்கல்வி அனைவருக்கும் வேண்டும் !
தனியார் மருத்துமனைகள் அரசுடைமையாக வேண்டும்
தனியாரின் கொள்ளை முடிவுக்கு வர வேண்டும் !
மூட நம்பிக்கைகள் முற்றாக அழிய வேண்டும்
முழுவதுமாக பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் !
சாமியார்கள் நாட்டில் இல்லது ஒழிய வேண்டும்
சாமியின் பெயரில் நடக்கும் மோசடி அழிய வேண்டும் !
ஆபத்தான அணு உலைகள் இனி வேண்டாம்
அணு ஆயுதங்களும் வேண்டவே வேண்டாம் !
சூரிய ஒளியில் மின்சாரம் எடுக்கும் கருவிகள்
சகல இடங்களிலும் நிறுவிட வேண்டும் !
அடுத்த நாடுகளிடம் நாட்டின் பாதுகாப்பை
அடகு வைத்திட ஒப்பந்தங்கள் வேண்டாம் !
துப்பாக்கிச் சண்டை குண்டு வெடிப்பு வன்முறைகள்
தரணியில் இலல்லாது ஒழிய வேண்டும் !
உலகில் எந்த மூலையிலும் போர் இல்லாது
ஒற்றுமையாக அன்பாக வாழ வேண்டும் !
எதிர்கால கனவு எனக்கு ஏராளம் உண்டு
எல்லாம் நிறைவேறினால் நாடு நலம் பெறும் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக