கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ? கவிஞர் இரா .இரவி !

கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ? கவிஞர் இரா .இரவி !

ஊடங்கங்களில் தொடர்ந்து ஒருதலைக் காதல் கொலைகள் பற்றிய செய்திகள் பார்க்கும்போது ,படிக்கும்போது இது கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ?  என சந்தேகம் வருகின்றது .காட்டுமிராண்டிகள் இன்று இல்லை .அவர்கள் கூட மாறி விட்டனர்.

.
பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட ஒற்றுமையாக வாழ்கின்றன. பகுத்தறிவு உள்ள மனிதன்தான் மோதி வீழ்கிறான் .பகுத்தறிவு என்பது பயன்படுத்திடத்தான் .பயன்படுத்தினால்தான் மனிதன் .

ஒருதலைக் காதல் என்பது காதலே இல்லை .'ஒருதலைக் காமம்' என்று எழுதுங்கள் அல்லது 'ஒருதலை மோகம்' என்று எழுதுங்கள். இனி ஒருதலைக் காதல் என்று எழுதி ,பேசி காதலைக் கொச்சைப் படுத்தாதீர்கள் .

இருதலையாக இருவரும் விரும்பினால்தான் அது காதல்.ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒரு தலையாக விரும்புதல் காதலே அன்று .சுவாதி கொலையில் இரு வேறு கருத்துக்கள் வருகின்றன. அது இருக்கட்டும் .உண்மை ஒரு நாள் வெளியில் வந்தே தீரும் .

தற்போது கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று முன்னாள் மாணவன், சக மாணவியைக் கொன்றுள்ளான் .தேவாலயத்தின் உள்ளே சென்று ஒருவன் கொலை செய்துள்ளான் .இவற்றை ஊடகங்களில் பார்க்கும்போது படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது .

திரைப்படங்களில் ரவுடியை கதாநாயகனாகக் காட்டி திரும்பத் திரும்ப ஒரு பெண்ணை விரட்டி விரட்டி பின் தொடர்ந்து காதலிக்கிறேன் என்று சொன்னால் காதலித்து விடுவாள் என்ற கருத்து பல திரைப்படங்களில் காட்டியதில் விளைவுதான் இந்தப் படுகொலைகள் .  
 
பெற்றோர்களும் ஆண் மகனுக்கு நல்ல அறிவுரையும், ஒழுக்கமும் கற்பித்து வர வேண்டும் .ஆண் பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்ப்பதன் விளைவு ஆணாதிக்க சிந்தனை வளர்ந்து விடுகின்றது .

"விரும்பவில்லை என்றால் விலைமகளைக் கூட தொடக் கூடாது  " என்று ஒரு பழமொழி உண்டு . விரும்பவில்லை என்றால் விலகி விடுவதே பண்பாடு .உன்னை விட்டு ஒரு பெண் ஒரு அடி விலகினால் நீ அவளை விட்டு 10 அடி விலகுவதே பண்பாடு . 

காதல் என்பது இயல்பாக மலர வேண்டும் ; கெஞ்சிக் கூத்தாடி, பிச்சை  எடுத்து,ஆயுதத்தால் மிரட்டி  வருவதல்ல காதல் .ஒரு ஆணின் நடத்தையால், ஒழுக்கத்தால், பண்பாட்டால் ,நாகரிகத்தில்  ,திறமையால் கவர்ந்து ஈர்க்கப்பட்டு இயல்பாக வருவதே காதல் .

இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .ஒரு பெண்ணை விரும்பினால் விண்ணப்பம் வையுங்கள் .அவளும் உன்னை விரும்பினால் காதலியுங்கள் .அவள் விரும்பவில்லை என்று சொல்லி விட்டால் உடன் விலகி விடுங்கள் .அதுதான்  நல்ல ஆண்மைக்கு அழகு .

உன்னை விரும்பியே ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை .மறுக்க அவளுக்கு  உரிமை உண்டு .அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வர வேண்டும் .உன்னுடைய கண்ணியமான செயல் பார்த்து பாராட்ட வேண்டும் .உன் நிலையில் இருந்து மட்டும் பார்க்காமல் அவளின் நிலையில் இருந்தும் சிந்தித்துப் பாருங்கள் .தயவுசெய்து மனிதனுக்கே   உரிய பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்