பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ரா.ப. ஆனந்தன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ரா.ப. ஆனந்தன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பேச : 044-24342810, 24310769 200 பக்கங்கள் விலை : ரூ. 150
*****
நூலின் தலைப்பு மிக நன்று. புகழ்பெற்ற பாடல் வரிகளை நினைவூட்டியது. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு பொருத்தமான படங்கள், வளவளப்பான தாள்கள் என யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுகள். வானதி பதிப்பகம் டாக்டர் திரு. இராமனாதன் அவர்களின் பதிப்புரை நன்று. நூல் ஆசிரியர் முனைவர் கவிஞர் ரா.ப. ஆனந்தன் அவர்கள் கடலூர் மாவட்டம், அகர ஆலம்பாடி கிராமத்தில் பிறந்து கும்பகோணத்தில் மேல்நிலைக் கல்வி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருந்தாளுநர் பட்டம் முடித்து கானா நாட்டில் வாழ்ந்து வருபவர்.
புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கை என்பது, எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் பிறந்தமண் போல அமைவதே இல்லை. வலிமிகுந்த வாழ்க்கை தான். மதுரையிலிருந்து பெங்களூர் இடமாற்றம் அடைந்ததால் அந்த வலியை உணர்ந்து வருகிறேன். நூலாசிரியர் புலம்பெயர்ந்த அயல்நாட்டு வலிமிகுந்த வாழ்விலும் தமிழை மறக்காமல் நேரம் ஒதுக்கி கவிதைகள் வடித்து அவற்றை தொகுத்து நூலாக்கி இருப்பதற்கு முதல் பாராட்டு.
நூலாசிரியர் என்னுரையிலிருந்து சிறு துளிகள் :
"சாமானியருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற நல்நோக்கத்தினால் மிகவும் எளிமையான தமிழ் வார்த்தைகளையும், சிறுசிறு வாக்கியங்களையும் உட்கொண்ட வசனக் கவிதைகளாக இயற்றியுள்ளேன். என்னுடைய முந்தைய நூல்களைப் போலவே இந்நூலிலும் கவிதை இலக்கணத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட கருத்துக்களுக்கு முதலிடம் கொடுத்து வடித்திருக்கிறேன்”.
முழு இலக்கணங்களும் பொருந்தி எந்தஒரு கருத்தும் இல்லாத மரபுக் கவிதைகள் படித்து இருக்கிறேன். இலக்கணம் குறைவாக இருந்தாலும் கருத்துக்கள் நிறைவாக உள்ளன. பாராட்டுகள்.
மனம், குணம், பொதுவுடைமை, உறவுகள், காதல் என்று 5 பகுதிகளாகப் பிரித்து 60 தலைப்புகளில் கவிதைகள் எழுதி உள்ளார். சில கவிதைகள் நீண்ட நெடிய கவிதைகளாக உள்ளன.
வாழ்வியல் உண்மைகளை, பண்புகளை, குணங்களை கவிதைகளின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார். பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :
தோல்வியில் பண்படு
வெற்றியிலே அடக்கமும்
தோல்வியிலே பக்குவமும்
பண்பட்ட மனதிற்கு அழகாகும்
காலம் ஒத்த பயணம்
நல்மருந்தாகும்.
வெற்றி கிடைத்து விட்டால் கூத்தாடுவதும் தவறு, தோல்வி வந்தால் துவண்டு விடுவதும் தவறு என்பதை நன்கு உணர்த்தி உள்ளார், பாராட்டுகள்.
குதூகலம்!
சொல்லாலும், செயலாலும்
காட்சியாலும், நினைவூட்டலாலும்
புன்னகைக்கும் உணர்வைத் தூண்டும்
கேளிக்கையே குதுகலமாகும்
மனம் குளிர்ந்த சிலிர்ப்பாகும்
குருதி களித்த உடல் பூரிப்பாகும் !
எது கேளிக்கை? என்ற விளக்கமும், குதூகலத்தின் நன்மையும், கவிதையால் சுட்டியது சிறப்பு. சிரித்து வாழ மகிழ்ந்து வாழ பல வழிகளை கவிதைகளில் எழுதி உள்ளார்.
வருத்தம்!
அமைதியொன்றே குணமாகும்
நம்பிக்கையொன்றே மருந்தாகும்
கிடைத்ததில் இலாப்பூ உத்தமமாகும்
காலமங்கே மற்றதைத்
தீர்மானிக்கும்!
நினைத்தது கிடைக்காவிடில், கிடைத்ததை நினை என்கிறார். அதிகமாக ஆசைப்பட்டு அது கிடைக்காததால் கவலைப்பட்டு வாடாதீர்கள். கிடைத்ததில் மகிழ்வது சிறப்பு என்று மிகப்பெரிய தத்துவத்தை, உண்மைகளை மிக எளிமையாக சொற்கள் மூலம் கவிதை வடித்துள்ளார், பாராட்டுகள்.
அலட்சியம்!
அலட்சியத்தை அலட்சியப்படுத்துதலும்
ஆணவமழிந்த பக்குவம்
இணையான மனமுதிர்ச்சியும்
ஆரோக்கியமான வாழ்வைத் தரும்
என்றென்றும் குறையாத ஆன்ந்தம் தரும் !
எதிலும் கவனமாக இருக்க வேண்டும், கவனக்குறைவு என்பது கவலையில் ஆழ்த்தி விடும் என விழிப்புணர்வை கவிதைகளில் விதைத்து உள்ளார்.
சாதனை!
புதிய சிந்தனையும் அகண்ட பார்வையும்
வித்தியாசம் மிகுந்த உயரமான வெற்றியும்
உன்னைத் தனித்துவப்படுத்தும்!
தொடர்ந்த வெற்றிப்பயணம் மகுடத்திற்கு மகுடம் சூட்டும்!
ஆம் வெற்றியாளர்கள் அனைவரும் வித்தியாசமாக சிந்தித்தவர்கள் தான் புதிய சிந்தனைக்கு எங்கும் வரவேற்பு உண்டு. மகுடம் சூட்டுவதற்கான சூட்சுமங்களை கவிதைகளில் விளக்கி உள்ளார்.
ஒழுக்கம் ஒழியேல்!
ஒழுக்கம் காப்பதும் போற்றுவதும் தனக்கும்
தன்னைச் சார்ந்த சமூகத்திற்கும் சேர்த்து வைக்கும்
அழகான அழியாத அர்த்தமுள்ள சொத்தாகும்
உறுத்தாத சந்தோசத்தையும் நிம்மதியையும்
என்றென்றும் தந்து நிலைத்திருக்கும் நீடித்திருக்கும்.
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாக உரைத்தார். நூல் ஆசிரியரும் ஒழுக்கம் பற்றி நீண்ட கவிதை எழுதி உள்ளார். நாகரிகம் என்ற பெயரில் உலகம் முழுவதும் ஒழுக்கம் சிதைந்து, சீரழிந்து அதன் காரணமாக பல வன்முறைகளும் நடந்து வருகின்றன. புலம் பெயர்ந்த வாழ்க்கையில் ஒழுக்கம் கடைபிடித்து வாழ்வது கடமை. நூலாசிரியர் பாரம்பரிய பெருமையுடன் ஒழுக்கமாக வாழ்ந்து வருவதால் ஒழுக்கத்தின் உயர்வு பற்றி உணர்ந்து எழுதி உள்ளார்.
கவிதையில் காதல் பாடாத கவிஞர் இல்லை. காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை என்பது உண்மை. இந்நூலில் காதல் பற்றிய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!’ என்ற கம்ப இராமாயண வைர வரிகளை நினைவூட்டும் விதமாக கவிதை நன்று.
கண் பேசிடும் வார்த்தைகள்!
இமை திறந்து நோக்கியதையெல்லாம்
விழிதனில் படம்பிடித்துப் பார்த்திடும்
குவித்தும், குழித்தும் கண்டதையெல்லாம்
மிக அதீத வேகத்தில் கொண்டு சேர்க்கும்.
காதலின் என்னுரை கண்களால் தான் வரையப்படும் என்ற உண்மையை உணர்த்தியது நன்று.
காதலுக்கான இலக்கணம் வடித்துள்ளார்.
அழியாத காதல் எது? என்றும் நன்கு விளக்கி உள்ளார்.
சுயம் அறுத்து நல்தடம் பதித்து
அவ்வண்ணம் மதித்து நடந்து
சிரத்தை எடுத்து அகந்தை பார்த்து
ஊறும் காதல் அழியாது வாழ்வது!
“பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்” என்ற தலைப்பே பல சிந்தனைகளை விதைதத்து.
கடலை பார்க்கும் ஒருவன் கால் நனைக்க நினைப்பான், மற்றொருவன் மீன் பிடிக்க நினைப்பான், மற்றொருவன் உப்பு எடுக்க நினைப்பான், வேறொருவன் முத்து எடுக்க நினைப்பான். அது போல ஒரே ஒரு கடல் என்ற காட்சி, பலருக்கு பல எண்ணங்களைத் தருகின்றது. பாராட்டுகள். ஒரு நூல் கவிதைகளில் பல எண்ணங்களை விதைத்து உள்ளார் .பாராட்டுகள். இனிவரும் கவிதைகளில் வடசொல் தவிர்த்து எழுத முயலுங்கள்.
குறிப்பு : 200 பக்க கவிதைகளை முழுமையாக படித்தேன் என்பதற்கு சான்று. 97ஆம் பக்கம் மரியாதை என்ற கவிதையில் 6ஆவது வரியில் அறிய வைக்கும் என்பது அறிய் வைக்கும் என்று அச்சாகி உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள
கருத்துகள்
கருத்துரையிடுக