அப்பா ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பு ,இயக்கம் சமுத்திரக்கனி !

அப்பா !



அப்பா !

திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !

நடிப்பு ,இயக்கம்  சமுத்திரக்கனி !

சாட்டை படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட, பாராட்டப்பட்ட நடிகர் ,இயக்குனர் சமுத்திரக்கனிக்கு இந்த "அப்பா" படம் இரண்டாவது சாட்டை என்றே சொல்லலாம் .

படத்தில் ஆபாச நடனம் இல்லை .இரட்டை அர்த்த குத்துப் பாடல்கள் இல்லை .ஆங்கிலச் சொற்கள்  கலந்த புரியாத பாடல்கள்  இல்லை. பிரமாண்ட அரங்குகள் இல்லை .வெளிநாட்டில் படப்பிடிப்பு இல்லை. வெட்டுக் குத்து சண்டைக் காட்சிகள் இல்லை .கோடிகளில் ஊதியம் பெரும் கவர்ச்சி நடிகை ஜோடி  இல்லை. மசாலா வாடை இல்லவே இல்லை .இத்தனை இல்லைகள் இருந்தும் படம் வெற்றிப்பெற என்ன காரணம்? என்பதை ,மசாலாப்பட இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

நல்ல படம் ஓடாது ,கவர்ச்சி   வேண்டும் .மக்களுக்கு செய்தி சொல்லக் கூடாது .இப்படி தவறான புரிதல்களுடன் படம் எடுக்கும் அனைவரும் இந்தப்படம் பார்த்து திருந்த வேண்டும் .குறிப்பாக பணம் சேர்ந்தால் போதும் என்று மக்களை முட்டாளாக்கி பேய்ப்படம் எடுப்பவர்கள் திருந்த வேண்டும் .  

படத்தில் நல்ல பல கருத்துக்களை துணிவுடன் பதிவு செய்துள்ளார். மூன்று வகை அப்பா குணங்கள் காட்டி உள்ளார் .

என் மகன் மாநில முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கண்டிப்புக் காட்டி கடைசியில் மகனையே இழக்கும் அப்பா.

இருக்கும்இடம் தெரியாமல் இருக்க வேண்டும் என்று மகனை வலியுறுத்தி வளரவிடாமல் செய்த அப்பா.

மகனை  சுயமாக சிந்திக்க விட்டு  சாதனையாளனாக உருவாக்கிய அப்பா .

படம் பார்க்கும் சிறுவர்கள் அனைவர் மனதிலும் அப்பா படத்தில் வரும் சமுத்திரக்கனி போன்று  தன்அப்பாவும் மாற வேண்டும் என்ற எண்ணம் வருவது படத்தின் வெற்றி .

மகனுக்கு 5 வயது ஆன பின் பள்ளியில் சேர்க்கலாம் என்கிறார்ச முத்திரக்கனி. அவரது மனைவி ஆங்கிலப் பள்ளியில் 3 வயதிலேயே சேர்க்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார் ,கையை அறுத்து மிரட்டி ஆங்கிலப் பள்ளியில்  சேர்க்க வைக்கிறார் .

வீட்டுக்கு வீடு இன்று நடக்கும் நிகழ்வை ஆங்கிலப் பள்ளி மோகத்தை அப்படியே காட்டி உள்ளார் .

ஆங்கிலப்பள்ளியில் தாஜ்மகால் செய்து கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் .மற்ற குழந்தைகள் பாய் கடையில் தாஜ்மகால்  வாங்கிக் கொண்டு போய் கொடுத்து நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால் சமுத்திரக்கனியின் மகன் இரவு முழுவதும் விழித்து அவனாகவே தாஜ்மகால் செய்து கொண்டு செல்கிறான் .வழியில் சில மாணவர்கள் தட்டி விட, சிதைந்து விடுகிறது .ஆசிரியர்  திட்டி  விடுகிறார் .மகனின் கவலையைக் கண்டு அப்பா பள்ளிக்கு சென்று வாதிடுகிறார் .உங்க மகனுக்கு இடமில்லை என்று விரட்டுகின்றனர். அரசுப்பள்ளியில் சேர்கிறார் .அவன் நீச்சலில் உலக சாதனை புரிகின்றான் .

இரு பாலின புரிதலை மகனுக்கு நண்பன் போல உணர்த்துகின்றார் .

மொத்தத்தில் ஒரு அப்பா மகனை எப்படி வளர்க்க வேண்டும் ,எப்படி வளர்க்கக்  கூடாது என்ற பாடமே படம் .

சமுத்திரக்கனியின் மகனின் நண்பன் படிப்பு வரவில்லை என்று ஆசிரியர்கள் திட்டும்போது அவனுக்கு ஊக்கம் தந்து படிக்க வைத்து தேர்வில் வெற்றிபெற வைக்கிறார் .அதுமட்டுமல்ல அவனுக்குள் உள்ள கவிதை எழுதும் திறனை அறிந்து நூலாகத் தொகுத்து என்இனிய நண்பர் வித்தகக்கவிஞர் பா .விஜய் அவர்களிடம் அணிந்துரை பெற்று  வெளியீட்டு  விழாவிற்கு வித்தகக்கவிஞர் பா .விஜய் ,பாடல் ஆசியர் யுகபாரதி ஆகியோரை  வரவழைத்து பேச வைத்து .அந்த மாணவன் பெற்றோர்கள் கண்களில் மட்டுமல்ல, படம் பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வரவழைத்து நெகிழ வைத்து வெற்றி பெறுகின்றார் சமுத்திரக்கனி.

தேசிய விருது பெற்ற தம்பி இராமையா மிகச்சிறப்பாக நடித்துள்ளார் .பாராட்டுள் .சமுத்திரக்கனி நடிக்கவில்லை அப்பாவாகவே வாழ்ந்து காட்டி உள்ளார் .உலகப் பொதுமறையான ஒப்பற்ற திருக்குறளை பல இடங்களில் நினைவூட்டி உள்ளார் .

குழந்தைகளை படி படி என்று துன்புறுத்தும் பெற்றோர்களை  திருந்திடவைக்கும் மிக நல்ல படம் .குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பாருங்கள் .

இது போன்ற சிறந்த படங்கள் வெற்றிபெற்றால்தான் ,பேய்ப்பட மோகம் ,மசாலாப்பட மோகம் ஒழியும்.
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்