நன்றி . தினமணி கவிதைமணி

முகப்பு > கவிதைமணி
வாழ்க்கையின் தூரங்கள்: கவிஞர் இரா .இரவி !
By dn
First Published : 18 July 2016 04:37 PM IST
2
எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகும் !
'எப்படியும் வாழலாம் 'என்று இன்று வாழ்வோர் பலர்
'இப்படித்தான் வாழ்வோம் 'என்று இன்றும் வாழ்வோர் சிலர் !
பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி மட்டுமல்ல
சிறப்பாக வாழ்ந்தால் இறந்தபின்னும் உண்டு வாழ்க்கை !
விரும்பி வந்ததல்ல இந்த வாழ்க்கைப் பயணம்
விரும்பி வாழ்ந்தால் இனிக்கும் சிறக்கும் வாழ்க்கை !
பிறந்ததால் ஏதோ வாழ்கிறேன் என்பதல்ல வாழ்க்கை
பிறந்ததால் பிறர் பயனுற வாழ்வேன் என்பதே வாழ்க்கை !
கடந்து வந்த பாதையில் கசப்புகள் இருக்கலாம்
கவலை வேண்டாம் மறந்து விடுங்கள் நன்று !
மலரும் நினைவுகளை மலர்விக்கும் தருணங்களை
மறுபடியும் மறுபடியும் நினைத்து மகிழுங்கள் !
மூச்சு விடுவது மட்டுமல்ல மனித வாழ்க்கை
முயற்சி செய்வதும் அடங்கி உள்ளது வாழ்வில் !
'வெந்த சோறை தின்று விதி வந்தால் சாவேன் என்பது
வெட்டிப்பேச்சு வீணர்களின் சோம்பேறி உளறல் !
அர்த்தமுள்ள வாழ்க்கை அனைவரும் வாழ்ந்திடுவோம்
அர்த்தமற்ற வாழ்வுக்கு வைப்போம் முற்றுப்புள்ளி !
பிறந்தோம் இறந்தோம் என்பது சராசரி வாழ்க்கை
பிறந்தோம் சாதித்தோம் என்பதே சாதனை வாழ்க்கை !
காந்தியடிகள் பணத்தின் மீது என்று ஆசைப்பட்டதில்லை
காந்தியடிகள் படம் பணம் அனைத்திலும் உள்ளது !
மகாகவி பாரதி வாழும் காலத்தில் மதிக்கப்படவில்லை
மறைந்தபின்னே கவிஉலகம் பாராட்டி மகிழ்கின்றது !
மாமனிதர் அப்துல் கலாம் இறந்தார் உலகமே அழுதது
மகத்தான வாழ்வு வாழ்ந்ததால் மறைந்தும் வாழ்கிறார் !
தன்னலத்தார் வாழ்க்கை இறப்போடு முடிந்துவிடும்
பொதுநலத்தார் வாழ்க்கை இறந்தபின்னும் தொடரும் !
ஏதோ வாழ்வோம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்
எதையாவது சாதிப்போம் என்ற எண்ணம் வளர்ப்போம் !
அடையவேண்டிய தூரம் பற்றிய கவலை இல்லை
அடைந்தே தீருவோம் என்ற எண்ணம் வேண்டும்.
நன்றி . தினமணி கவிதைமணி..http://www.dinamani.com/kavithaimani/2016/07/18/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E/article3535459.ece

கருத்துகள்