மாமனிதர் அப்துல் கலாம் நினைவு நாள் 27.7.2016 !  கவிஞர் இரா .இரவி !

மாமனிதர் அப்துல் கலாம் நினைவு நாள் 27.7.2016 !
கவிஞர் இரா .இரவி !

மற்ற தலைவர்கள் எல்லாம் நினைவுநாள் 
மட்டுமே நினைக்கப்படுவார்கள் ஆனால் !

மாமனிதர் அப்துல் கலாம் அவர்களோ 
என்றும் எப்பொழுதும் நினைவில்  வாழ்பவர் !

வாழ்வாங்கு வாழ்ந்திட்டவல்லவர்  நல்லவர் 
வையகம் போற்றிட வாழ்ந்து சிறந்தவர் !

மாணவர்களைச்  சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர் 
மாணவ மாணவியர்  மனங்களின் நிறைந்தவர் !

அரசியலை என்றும் விரும்பாத அற்புதர் 
அரசியலுக்கு அப்பாற் பட்ட  அன்பாளர் !

தோன்றின் புகழோடு  தோன்றி  நிலைத்தவர் 
தோன்றாத்  துணையாக வாழ்வில் நின்றவர் !

ஆசையில்லாத போதிப்  புத்தராக வாழ்ந்தவர் 
அன்பு செலுத்தி அகிலத்தில் புனிதராக உயர்ந்தவர் !

திருமணம் புரியாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர் 
திரு மனம் பெற்று வாழ்வில் சிறந்தவர் !

வன்சொல் என்றும் யாரிடமும் பேசாதவர் 
இன்சொல் மட்டுமே என்றும்  எவரிடமும் பேசியவர் !
.
சாதி மதம் இனம் கடந்து அனைவரையும் 
சகோதரர்களாய் நேசித்த இனியவர் !

மத நல்லிணக்கம் வலியுறுத்தியவர் 
மதத்தை விட மனிதம் மேல் என்றவர் !

ஆடம்பரத்தை அறவே வெறுத்தவர் 
அமைதியான வாழ்வு வாழ்ந்தவர் !

எளிமையின் சின்னமாக விளங்கியவர் 
ஏழ்மை நீக்கிட வழிகள் பல சொன்னவர் !

நதிநீர்  சண்டைக்குத் தீர்வு  சொன்னவர் 
நதிகளை இணைப்பதே தீர்வு என்றவர் !

கேள்விகள் கேட்க  வைத்து விடையளித்தவர் 
கவலையில் ஆழ்த்தி நம்மிடமிருந்து விடைப்பெற்றவர் !

முதற்குடிமகன்களில் முதற்குடிமகனானவர் 
மொத்தக் குடிமகன்களின் உள்ளம்  வாழ்பவர் !

உடலால் உலகை விட்டு மறைந்தாலும் 
உன்னத புகழால் என்றும்  வாழ்பவர் 

-- 

கருத்துகள்