ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அறிந்தது உலகம் 
அறியவில்லை தமிழர் 
திருக்குறள் அருமை !

ஒரே வரியில் 
ஒப்பற்ற அறம் 
ஆத்திசூடி !

நான்கே வரிகளில் 
நல்லபல கருத்துக்கள் 
நாலடியார் !

ஒழுக்கம் உணர்த்தும் 
ஒப்பற்ற வரலாறு 
சிலப்பதிகாரம் !

தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி 
பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று 
பிதற்றுகின்றனர் கோமாளிகள் !

தண்டனை என்று 
அறிவிப்போம் 
தமிங்கிலம் பேசினால்  !

நான் இங்கு இருக்கையில் 
யார் நினைப்பது உங்களை 
தலையில் தட்டும் மனைவி !

இந்நாட்டு மன்னர்கள் 
தேர்தல் மறுநாள்  
சாதாரண குடிமக்கள் !

பணம் பத்தும் செய்யும் 
உணர்த்தியது 
தேர்தல் !

தாமதமானாலும் 
இறுதியில் வெல்வது 
அறம் !

மூச்சு இருக்குவரை 
நினைவில் இருக்கும் 
முதல் காதல் !

தோல்வி 
வெற்றிக்கான படிக்கட்டு சரி 
படிக்கட்டு எத்தனை ?

மழை விட்ட பின்னும் 
சாரல் 
மரத்திலிருந்து !

நவீனகாலம்  
மாணவனைக் கண்டு 
அச்சத்தில் ஆசிரியர் !

தூண்டில் புழு மீன் 
மனிதன் புழு
வாழ்க்கை ஒரு வட்டம் !

ஆட்டம் ஆர்ப்பாட்டம் 
அனைத்தும் அடக்கம் 
கல்லறை !

கடன் வாங்கக் 
கற்றுத் தருகிறார் 
கணக்கு ஆசிரியர் !

பூச்சென்டாக ஒன்று
மலர்வளையமாக மற்றொன்று 
ஒரு செடிப் பூக்கள் !

வயப்பட்டவர்கள் மட்டும் 
உணரும் உன்னதசுகம் 
காதல் !

உட்கார்ந்த இடத்தில் 
ஓடாமல் விளையாடியது 
கணினியில் குழந்தை !

குறைத்தது
வாழ்நாள் 
நவீன உணவு !நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்