தேர்தல் நாள் ! கவிஞர் இரா .இரவி !

தேர்தல் நாள் !  கவிஞர் இரா .இரவி !

குடவோலை  முறையில் தேர்தல் கண்ட தமிழன் 
குவலயம் சிரிக்கும்   தேர்தல் காண்கிறான் இன்று !

எவ்வளவு  தருவீர்கள் ? எப்போது தருவீர்கள் ?
என்று வாக்காளர்களே  கேட்கும் அவலம் இன்று !!

வந்ததும் தருவோம் ! தந்ததும் வாக்களியுங்கள் !    
வாக்குறுதி  தருகின்றனர் கட்சிக்காரர்கள் இன்று !!

இத்தனை கோடிகள் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை 
எம் தமிழகத்தில்தான் அதிகபட்ச வரவு சோதனையில் !

ஆணையத்தின் கண்களில் மண் தூவிவிட்டு  
அனைவருக்கும் வழங்கி விடுவார்கள் பணத்தை !

பணம் மட்டுமல்ல வேறு மளிகைப் பொருளாகவோ 
பெட்ரோலாகவோ  அலைபேசிடக் கட்டணமோ !

எப்படியும் கையூட்டு வந்து விடும் 
என்ற காத்திருப்பில் வாக்காளர்கள் ! 

பணம் வாங்கி விட்டோம் வாக்களிப்போம் என்று பலர் 
பணம் வாங்கினாலும் வாக்களிக்காதோர் என்று சிலர் !

உலகமே வியந்துப்  பாராட்டிய மக்களாட்சி 
உலகம் சிரிக்கும் வண்ணம் சீரழிந்தது !

சொந்த சொத்துக்களைத் தந்து வந்தனர் அன்று 
சொந்தமாகச் சொத்துச் சேர்க்க வருகின்றனர் இன்று !

தொண்டு செய்திட நல்லோர் வந்தனர் அன்று
தொண்டு என்றால் என்னவென்று அறியதோர் இன்று !

பொதுநலம் காத்திட அறவோர் வந்தனர் அன்று
தன்ன்லம் பேணிட தன்னலவாதிகள்  இன்று !

மனசாட்சியோடு அரசியல் செய்தனர் அன்று 
மனசாட்சியற்ற மனிதர்கள் மலிந்தனர் இன்று !

தந்தை பெரியார் வெறுத்தார் தேர்தல் முறையை 
தனக்காக அவர் என்றும் கேட்டதில்லை வாக்கு !

மாண்புகள் மிக்க உண்மையான மக்களாட்சி மலரட்டும் 
மாசற்றவர்களை கையூட்டு இன்றி தேர்ந்தேடுப்போம் !     

கருத்துகள்