தினமணி இணையம் தந்த தலைப்பு ! கவிதையின் டைரி! கவிஞர் இரா .இரவி !


தினமணி இணையம் தந்த தலைப்பு !

கவிதையின்  டைரி! கவிஞர் இரா .இரவி !

காதல் அரும்பியதும் கவிதை வந்தது 
கவிதை வந்ததும் காதலியின் பாராட்டு !

பாராட்டைக் கேட்டதும் கவிதைகள் கொட்டியது 
பாடல்கள் முழுவதும் காதலால் நிரம்பியது ! 

கவிதையில் காதல் இருக்கலாம் தவறில்லை 
கவிதை முழுவதும் காதலென்பது தவறென்றனர் !

சமுதாயத்தின் பக்கம் பார்வை திரும்பியது 
சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் பிறந்தது ! 

புதுக்கவிதையிலிருந்து ஹைக்கூவிற்குப்  பயணம் 
புதுப்பாதை என்பதால் வரவேற்பு அதிகம் !

சொந்தமாக கவிதை நூல்கள் வெளியீடு 
சொற்பமாக ஆயிரம் பேர் மட்டும் படிப்பதால் !

சிலலட்சம் பேர் படிக்க  வைக்க வழி சிந்திப்பு 
சில நாட்களில் கவிமலர் இணையம் உதயம் !

உலக அளவில்  கவிதைகள் சென்று அடைந்தன
உலகம் முழுவதும் நல்ல  நட்புகள் கிடைத்தன !

ஆயிரம் ஹைக்கூ  நூல் அழகாய் மலர்ந்தது 
அடுத்தபதிப்பும் வானதியில் விரைவாய் வந்தது !

கவிதை மட்டும்தான் வருமா ? கேள்வி வந்தது 
கவனம் மதிப்புரை எழுதுவதில் விழுந்தது !

புத்தகம் போற்றுதும்  மதிப்புரை பூத்தது   
புத்தகம் பார்த்ததும் மனம் பூரித்தது !

தினமணியின் கவிதைமணி கவனம் ஈர்த்தது 
தித்திக்கும் தலைப்பு வாராவாரம் தந்தது !

குடத்து விளக்காக இருந்த கவிஞர்களை 
குன்றாது விளக்காக ஒளிர்ந்திட வைத்தது !

கவிதைபாட மேடையின்றி வருந்துவோருக்கு   
கவிதையை இணையத்தின் மூலம் பரப்பியது !

வாராவாரம் கவிதைப் பசிப் போக்கியது !
வண்டமிழ் வளர்க்கும் தினமணிக்கு பாராட்டு !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்