எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !


நூல் ஆசிரியர் :  கவிஞர் அ. அழகையா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை,
தியாகராயர் நகர் , சென்னை-600 017. 
 பக்கம் 80, விலை : ரூ. 50  
*****
       ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ நூலின் தலைப்பே மிக மகிழ்வாக உள்ளது.  இந்த முழக்கத்தை முதலில் முழங்கியவர் தற்போது நூற்றாண்டு விழா காணும் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள்.  நூல் ஆசிரியர் கவிஞர் அழகையா அவர்கள் கவிதைகள் ‘அனைத்தும் அழகையா’ என்று சொல்லும் அளவிற்கு கவிதைகள் உள்ளன.

       மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடி வருபவர்.  கவியரங்கில் பாடிய கவிதைகளும் நூலில் உள்ளன.  கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது.

       முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

       எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
       காணுமிடமெலாம் தமிழே என்ற நிலை வாராதோ
       கண்ணான தமிழைக் காக்கத்தான் முடியாதோ
       புண்கண் உள்ளோர் புனிதமொழி இதுவல்ல என்பார்
       புவனம் தோன்றின நாளில் தோன்றியது இதுவன்றோ!

உலகம் தோன்றிய போது தோன்றிய மொழி நம் தமிழ்மொழி என்பதை நூலில் பல கவிதைகளில் தமிழின் பெருமையை, அருமையை நன்கு பறைசாற்றி உள்ளார்.  எது கவிதை? என்பதை கவிதையாலே நன்கு உணர்த்தி உள்ளார்.

       கவிதை !

       தலைஉச்சியில் ஊற்றெடுக்கும்
       தலைமுறை காக்க வழிசொல்லும்
       உலகு அளக்கும் உறவு வளர்க்க்கும்
       பலகால் சொல்லும் பவித்ரமானது
       பகை திருத்தும் சிகை நிமிர்த்தும்
       தகை சிறக்க நல்லதிறம் செய்யும் !

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்.  நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்கள் ஒருபடி மேலே சென்று குடும்பம் ஒரு கோவில் என்கிறார்.

       குடும்பம் !

       குடும்பம் ஒரு கோவிலப்பா
       அதைச் சொன்னவன் ஒரு ஞானியப்பா

       அங்கு அமுதமும் உண்டு ஆலகால விடமுமுண்டு
       ஆனமட்டும் அமுதம் பருகு ! விடமகற்று.

       காதலைப் பாடாத கவிஞர் உண்டோ?  நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களும் காதலைப் பாடி உள்ளார். பாருங்கள்.

       என்னவளே!

       என் கண்ணைக் கொத்திச் சென்றாய்
       உன் பெண்மை பொத்திச் சென்றாய்
       சென்றது வென்று விட்டாய் என்னை
       பெண் எனும் புனிதம் சொன்னாய்.

       ‘தலைவணங்கு’ என்ற தலைப்பிலான கவிதையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொல்லும் விதமாக அறவழி கற்பிக்கும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.

       தலைவணங்கு !

       நீதிக்குத் தலைவணங்கு
       நியாயத்திற்குத் தலைவணங்கு
       அன்பு தந்த அன்னைக்குத் தலைவணங்கு
       பண்பூட்டிய தந்தைக்குத் தலைவணங்கு
       குருவிற்கு தலைவணங்கு
       கூர்ந்த மதியாளருக்கு தலைவணங்கு !

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழியை நினைவூட்டும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.

       ஆடம்பரம் நன்றன்று ; எளிமையே சிறப்பு.  சிக்கனமே சிறப்பானது என்று சிக்கனம் என்ற தலைப்பில் வடித்த கவிதை நன்று.

       சிக்கனம்!

       சிக்கனம் பேணு வாழ்விலே !
       அதனால் உமக்கு தாழ்விலை
       எத்தனை துன்பம் வந்தாலென்ன
       உற்றதுணை உருளும் பணம் தானே
       உழைத்து அதைத்தேடு நாளும்
       உண்மை அதில் இருக்கோணும் பாரு.

சபலத்தின் காரணமாக சஞ்சலம் அடைந்தோர் பலர்.  மனம் ஒரு குரங்கு, அதனை கட்டுப்படுத்தி வெல்வது மனிதனின் கடமை என்பதை வலியுறுத்தும் விதமாக சபலம் பற்றிய கவிதை நன்று.

       சபலம்!

       சபலமது வேண்டாம் அதனால் வரும்
       சங்கடமும் வேண்டாம்
       ஆசை அகலமானால் அவதி
       அது தான் புத்தன் சொன்ன நியதி !

       இவரு போல ஒரு தலைவர் யாரு? என்று சொல்லுமளவிற்கு தமிழக முதல்வராக இருந்த போதும் பெற்ற அன்னைக்குக் கூட கூடுதலாக எந்த உதவியும் செய்திடாத நேர்மையாளர் நல்லவர், மாமனிதர், கர்மவீரர் காமராசர் பற்றிய கவிதை மிக நன்று.

       கர்மவீரர் !

       கல்விமான்கள் இவர் திறன் கண்டு
       செம்மாந்தது உண்டு
       பொய்மான்கள் புறத்தே ஓடினர் அன்று
       எந்நாளும் மறையாது அவர் புகழ்
       உன்னாலும் சிறந்திடுமே அது.

       கவிஞர்களுக்கு இயற்கை மீது, விலங்குகள் மீது, பறவைகள் மீது நேசம் உண்டு. நூல் ஆசிரியர் கவிஞர் அழகையா அவர்களுக்கு பறவை மீது நேசம் உள்ளது.  பாருங்கள்.

       பறவை!

       பறவைகள் பாடும் ஓசை கேட்கிறதா அது
       சிறகை விரிக்கையில் இருமோசை கேட்கிறதா
       சீராகப் பறக்குமே சிந்தையை அது எழுப்புமே.

       மகாகவி பாரதியார் உடலால் மறைந்துவிட்ட போதிலும் பாடலால் மக்கள் மனங்களில் என்றும்  வாழ்கிறார் என்பது உண்மை.  பாரதியார் பற்றிய கவிதை  நன்று.

       பாரதி !

       பாரதி தமிழுக்கான கவி
       ஆங்கிலேயனுக்கு அவன் எதிராளி
       ஆயுட்காலமெலாம் அவன் போராளி
       சொல்வளம் கண்டான் தமிழில்
       பொருள்வளம் கண்டானில்லை வீட்டில்!

உண்மை தான். மகாகவி பாரதியார் மன்னரை சந்தித்து விட்டு வந்த போது, செல்லம்மாள் ஆவலோடு சென்று பார்த்தால், பொன்னோ, பொருளோ, பட்டோ கொண்டு வருவார் என்று   படிப்பதற்க்கு தமிழ் இலக்கிய நூல்களே கொண்டு வந்தார்.  வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி.  பாரதியின் எழுத்துக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாத காரணத்தால் தான் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்.  நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

       உலக அளவில் தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் ஒப்பற்ற திருவள்ளுவர்.  காந்தியடிகளுக்கு திருவள்ளுவரை அறிமுகம் செய்தவர் டால்ஸ்டாய்.  காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்தவர் நமது திருவள்ளுவர்.  காந்தியடிகளை மகாத்மா ஆக்கியவர் வள்ளுவர்.  வள்ளுவர் பற்றிய கவிதை மிக நன்று.

       வள்ளுவன்!

       உலக மக்களெல்லாம் உன்னதம் பெற ஒரே
       வழி வள்ளுவம் அறிவதே, டால்சுடாயும் காந்தியும்
       வீரமாமு
னிவனும் வள்ளுவமறிந்து வாழ்விலே
       அடைந்தனர் புகழ், எல்லையுண்டோ அதற்கு
       உணர்வு சிதறார், உண்மையையே நவில்வார்.

       மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் கவியரங்கிற்கு தலைப்புகள் தருவதில் வல்லவர்.  அவர் தந்த தலைப்பில் நானும் பல கவிதைகள் வடித்து கவியரங்கில் அவர் தலைமையில் பாடி உள்ளேன். நூல் ஆசிரியர் :  கவிஞர் அ. அழகையா கவியரங்கில் பாடிய கவிதைகள் நூலில் உள்ளன  பாராட்டுக்கள். தமிழ் உணர்வு உயர்வாக உள்ளது.

       தமிழை நினைக்காதவன் தமிழனா?

தாய் தந்தது தமிழ்ப்பால்
தந்தை தந்தது அறிவுப்பால்
தாயையும் தந்தையையும் மறந்ததுண்டோ?
சேயையும் அவர்கள் தான் மறந்ததுண்டோ?
எனில் தமிழை மறத்தல் என்ன நியாயம்?
தேனில் குழைத்ததடா தமிழ் !

       நூலின் இறுதியில் சில துளிப்பாக்கள் சிந்திக்கும் விதமாக வடித்துள்ளார். இந்நூலில் மரபு, புதிது, ஹைக்கூ என மூன்று வடிவ பாக்களும் இருப்பது சிறப்பு.

       சாதி !

       அடுப்பில் தீ அணைந்து விட்டது
       அணையவில்லை நீரூற்றியும் சாதித் தீ
--------------------------
       கனவு
       நினைவுகளை கனவுகள்
       மனங்களே அதன் ஊற்றுக்கண் !

       நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களின் நூலின் தலைப்பைப் போலவே "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற நிலை தமிழகத்தில் வர வேண்டும்.

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்