வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



வழி காட்டும் வள்ளுவம் !

நூல் ஆசிரியர்கள் :  தமிழ்த்தேனீ இரா. மோகன் !
                        தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 27, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் 266.  விலை : ரூ. 170. 
*****
      " வழிகாட்டும் வள்ளுவம் " நூலின் பெயரே முதல் எழுத்து ஒன்றி வரும் மோனையோடு அமைந்தது சிறப்பு.  இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், இருவரும் இணைந்து எழுதிய நூல்.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.  அதனால் தான் இலக்கிய இணையர் என்று அழைக்கப்படுகின்றனர்.  இலக்கிய இணையரின் இலக்கியத் தரமான உயர்ந்த படைப்பு இந்நூல்.

       திருக்குறள் என்ற தங்கத்தை உருக்கி வைரக்கற்கள் பதித்து அழகூட்டி தமிழ்த்தாய்க்கு அணிகலன் அணிவித்து உள்ளனர்.  உலகப்புகழ்ப் பெற்ற திருக்குறளுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் வடித்திட்ட ஆராய்ச்சி நூல், ஆய்வு நூல், வழிகாட்டி நூல், திருக்குறளுக்குப் பெருமை கூட்டும் நூல். கூட்டு முயற்சியில் விளைந்த நல் முத்து நூல்.

       முனைவர் எஸ். ஸ்ரீதரன்  சென்னை மாநிலக் கல்லூரியின் இந்தித்துறைத்தலைவர் (ஓய்வு) அவர்ககளின்  அணிந்துரை தோரண வாயிலாக வரவேற்கின்றது.  அணிந்துரை எழுதும் பேறு கிடைத்தது என்று பெருமை கொள்கிறார்.

       இந்நூலில் திருக்குறளில் முப்பால் இருப்பது போலவே ஒப்பியல், உரையியல், நோக்கியல் என மூன்று பகுதிகளாக கட்டுரைகளை வரிசைப்படுத்தி உள்ளனர்.  திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன.  இந்த மூன்று கோணத்தில் இதுவரை ஒரு நூல் வரவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.  ஆகச்சிறந்த நூலாக வந்துள்ளது.

       இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் குறிப்பிட்டது போல இந்நூலிற்கு பரிசு விருது உறுதியாகக் கிடைக்கும்.

       நாம் சுற்றுலா செல்லும் போது, உடன் ஒரு வழிகாட்டி வருவார்.  அவர்  அந்த இடம் வரலாறு அனைத்து நன்கு அறிந்து இருப்பார் நமக்கு எடுத்து இயம்புவார்.  அதுபோல திருக்குறள் என்பது நமக்கு வழிகாட்டி.  அது காட்டும் வழியில் பயணித்தால் நாம் வாழ்வு சிறக்கும்.  வழிகாட்டும் வள்ளுவம் என்பது முற்றிலும் உண்மை. 

கடலில் தத்தளிப்பவனுக்கு திசை காட்டும் கலங்கரை விளக்கம் போல துன்பத்தில், இருளில் தத்தளிப்பவனுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் திருக்குறள்.  பெயர் பொருத்தமாக சூட்டியது மட்டுமன்றி கட்டுரைகளின் மூலம் வள்ளுவம் எப்படி எல்லாம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது என்பதை நன்கு விளக்கி உள்ளனர்.

       தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக இருந்தவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.  தற்போது காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்கள்.  இருவருக்கும் தமிழின்பாலும் ஒப்பிலக்கியத்தின் பாலும் திருக்குறளின் பாலும் தோய்ந்த அறிவு உள்ள காரணத்தால் மற்றவர்களோடு திருக்குறளை ஒப்பிட்டு ஒப்பிலக்கியம் படைத்துள்ளனர்.நூல் ஆசிரியர்கள் இருவருமே பேச்சு எழுத்து என்ற இரண்டு துறையிலும் இலக்கிய இணையராக  தனி முத்திரைப் பதித்து வருபவர்கள் .இருவரும் காதலித்துக்   கரம் பிடித்து மணி விழாக் கண்ட இலக்கிய இணையர்கள் 

       முதல் கட்டுரையிலேயே, “திருவள்ளுவர் – ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக” என்று தான் தலைப்பு வைத்துள்ளனர்.  உண்மை திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் எதிர்மறையான கருத்தையே பார்க்க முடியாது.  இன்றைய தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஆசான்.  நமது திருவள்ளுவர்.

 இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் குறிப்பிட்டது நினைவிற்கு வந்தது.  மகாகவி பாரதி கூட கோபத்துடன் விரக்தியுடன் எதிர்மறை கருத்துக்கள் பாடி உள்ளனர். ஆனால் திருவள்ளுவர் எந்த ஒரு இடத்திலும் எதிர்மறை கருத்தை எழுதவில்லை என்றார்கள்.

       நேர்மையாளர்கள், நேர்மறை சிந்தனையாளர்கள், அறவோர், நல்லோர் அனைவரும் விரும்புவது திருக்குறள்.  காரணம், திருக்குறாள் படித்த்தோடு நின்று விடாமல் அதன்வழி வாழ்ந்த காரணத்தால் வாழ்வாங்கு வாழ்கின்றனர்.  மாமனிதர் அப்துல் கலாம் திருக்குறள் காட்டிய வழி நடந்தார்.  உலகம் போற்றியது.  இந்த நூல் படிப்பதுடன் நின்று விடாமல் வாழ்வில் கடைபிடித்து நடந்தோமானால் நம் வாழ்வு சிறக்கும்.  மார்க்கஸ் அரேலியகம், கன்பூசியஸ், கபீர் மட்னு, சர்வக்ஞர் ஆகியோருடன் திருவள்ளுவரை ஒப்பிட்டு வடித்த முதல் பகுதி கட்டுரைகள் அருமை.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஒரே கல்லில் ஆறு  மாங்காய்கள். ஒரே நூலில் 6 அறிஞர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள உதவும் நூல்.

       இருவரின் கடின உழைப்பை உணர முடிகின்றது.  ஒப்பீடு என்பது மேம்பாடுக்காக இல்லாமல் ஆழமாக சிந்தித்து படித்து ஆய்வுரை நல்கி உள்ளனர்.  திருக்குறளுக்கு பலர் உரை எழுதி விட்டனர்.  அவற்றில் தேர்ந்தெடுத்து கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர், பாவேந்தர், தேவநேயப் பாவாணர், வா.சுப. மாணிக்கம், தமிழண்ணல், சிற்பி, முத்தாய்ப்பான முத்திரை உரைகளை தேர்ந்தெடுத்து கட்டுரை வடித்தது சிறப்பு. 

 மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் வ.உ.சி. தொடங்கி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சாகித்ய அகதெமி விருதாளர் கவிஞர் சிற்பி வரை தேர்ந்தெடுத்த உத்தி மிக நன்று.  ஆய்வு மாணவர்களுக்கு இந்நூல் ஒரு கலைக்களஞ்சியம். 100 நூலகளுக்கு சம்மான நூல். திருக்குறள்  தொடர்பான அய்யங்களை தெளிவிக்கும் நூல். முதுகலை மாணவர்களுக்கு பாடநூலாக தகுதி பெற்ற நூல். 

 இந்நூல் விமர்சனம் எழுதிய அன்று, நாளிதழில் நீதியரசர் மகாதேவன் அவர்கள், “திருக்குறளை இன்பத்துப்பால் தவிர்த்து மற்ற இருபாலையும் மாணவர்களுக்கு முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று” வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு படித்து மகிழ்ந்தேன். எனது பாராட்டையும் முக நூலில் பதிவு செய்தேன் . 

       நாடறிந்த நல்ல சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், நேர்மையான முதன்மைச் செயலர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், திருக்குறளில் மனிதவள மேம்பாடு, திருவள்ளுவரும், ஷேக்ஸ்பியரும் என்று இரண்டு முனைவர் பட்ட ஆய்வு முடித்து, மூன்றாவதாக கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி என்ற மூன்றாவது முனைவர் பட்டம் முடித்துள்ளார்.அறவழி நடக்கும் சான்றோர்கள் அனைவரும் விரும்பும் நூல் திருக்குறள் .திருக்குறள் விரும்பி விட்டால் அதன் வழியே நடப்பார்கள் .அறம்  தவற மாட்டார்கள் .சுமுதயம் அறவழி வாழ வழிகாட்டுவது திருக்குறள் .திருக்குறளின் சிறப்பியல்பு அனைத்தையும் எடுத்து இயம்பிடும் நூல் இது

       வல்லவர்கள், நல்லவர்கள் எல்லோரும் போற்றிடும் திருக்குறள்.  இந்த நூல் படித்தால் இன்னும் போற்றுவார்கள்.  திருக்குறள் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது இந்நூல்.

       நூலின் மூன்றாம் பகுதியான நோக்கியல் கட்டுரைகளும் முத்தாய்ப்பானது. மனித சமுதாயம் சண்டை சச்சரவுகளின்றி அமைதியாக, மகிழ்வாக, நிம்மதியாக வாழ வழி சொன்ன வள்ளுவத்தின் நோக்கம் போற்றுதற்குரியது.  நூலில் இருந்து பதச்சோறாக சில வரிகள்.

       மனிதனுக்கு இயல்பாக அமைந்த முயற்சியைப் படிப்படியாகப் பயற்சியால் பயன்படுத்தினால், உழை சகித்துக் கொள்ளுதல், அமைதியாக நுகர்தல் ஆகியவற்றின் வாயிலாக அதனைப் புறங்கண்டு உயர்வு அடையலாம். வள்ளுவர் நோக்கில் ஊழையும்  .உப்பக்கம் காணும் வழிமுறை இதுவே ஆகும். 

       விதி என்று ஒன்று இல்லை, ஒருவேளை அப்படி ஒன்று இருந்தாலும், உன் உழைப்பால், முயற்சியால், மதியால் மாற்றி எழுதலாம் என்கிறார் வள்ளுவர்.  இந்நூலின் இறுதியில் நூலாசிரியர்கள் இருவரைப் பற்றிய குறிப்பும், எழுதிய நூல்கள் பட்டியலும், முக்கியமான விமர்சங்களும், நான் எழுதிய இணைய விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்