ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !

 
வானதி பதிப்பகம்,23. தீனதயாளு தெரு தி.நகர், சென்னை. விலை  ரூ 100.
மின்-அஞ்சல் :vanathipathippakam@gmail.com
தொடர்பு எண் :914424342810
                                                                     
                           ஹைகுவில் பல பரிமாணங்கள்
 
 ஹைகு கவிதைகள் நீர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள். வற்றியும்  வற்றாதும் தென்படும் நீர்நிலை போல்தான், நல்ல ஹைகுகள்அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படுகின்றன. பல பொருண்மைகளைப் பல கோணங்களில் வெளிப்படுத்த ஏதுவாக இப்போது ஹைகுவடிவம். இன்று அதன்  வடிவமும், பொருளும் காலமாற்றத்திற்குத் தகுந்தவாறு, மாறிக் கொண்டு வருவதனை இலக்கிய உலகில் கண்டுவருகிறோம்.
 
  குஇயற்கையின் அனுபவம் போய்ச் சமுதாயத்தின் வெளிப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தமிழில் அவ்வடிவத்தைப் பதிவு செய்வதுபெருகிவிட்டது. இதனால்  ஜப்பானிய மூலவேரிலிருந்து அந்நியப்பட்டு இருப்பதால் ஹைகுவைப் பற்றிய இரசனை அருகி வருவதுபோலத்தோற்றம் தருகிறது. அங்கும் கூட இப்போது எல்லாவற்றிற்குமான பாடுபொருளைச் சொல்வதற்குரிய வடிவமாக ஹைகு மாறிவிட்டிருக்கிறது.
 
 ஹைகுவை உலக அளவில் எழுதிப் பார்த்த மேனாட்டுக்கவிஞர்கள் குறிப்பாக எஸ்ரா பவுண்ட் போன்றவர்களால் பிடிபடாத அவ்வடிவம்சிலருக்கே வாய்த்தது. அதில் சிலரே செவ்வி தலைப்பட்டனர். நம் பாரதி கூட ஹைகுவை முதன் முதலாகத் தமிழுக்குஅறிமுகப்படுத்தியதோடு நின்றுவிடாமல், கவிதை என்பது ஒரே அடியாகக் குறுகிப் போய்விடக்கூடாது என்ற சிந்தனையை முன்வைத்தவர் ஆவார்.
 
 இன்றைய நிலையில் எல்லாமே சுருங்கிப் போய்விட்டது. முன்னணி இதழ்களே கூட ஒரு பக்கச் சிறுகதையை விரும்பி ஏற்கின்றன.மேனாடுகளில் கூடச் சிறுகதைகள் short –shorts  என்று அழைக்கப்பட்டு வருவதையும், எழுதப்பட்டுவருவதையும் பார்க்கிறோம். பேண்ட்போடுவது ஒருவகை என்றால், வசதிக்காக அந்த வடிவத்திலும் குறுகி, 'ஷார்ட்'  அணிவதைப் போலக் குறுகிவிட்டது.  
 
 தமிழில் இன்று ஹைகு வடிவம் பெருகிநிற்க இளைஞர்கள் பலர் காரணமாகின்றனர். அதீதமான ஈடுபாடுகொண்டு எழுதிவருகின்றனர்.கவிஞர் இரா. இரவி, நாம் அன்றாடம் காணும் வாழ்வியலை ஹைகு வடிவில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது அண்மைக் காலத்தியஇன்னொரு தொகுப்பு 'ஹைக்கு முதற்றே உலகு' என்னும் நூல். இருபத்தாறு  தலைப்புகளில் இன்றைய பல்வேறு பாடுபொருள்களை இதில் பதிவு செய்துள்ளார். மற்றும் அதன் கிளைவடிவமாகத் தோன்றிய லிமரைக்கூ, பழமொன்றியூ, லிமர்பூன், துளிப்பா ஆகிய வடிவங்களிலும்எழுதியுள்ளார். கலாம் பற்றிய சில தகவல்களை ஹைகுவில் பதிவு செய்திருக்கும் கவிஞர், எளிய நடையில் அவரது பண்புகளை நாற்பதுஹைகுகளில் சொல்லியுள்ளார்.  இறுதி மூச்சு உள்ள வரை இயங்கிக்கொண்டே  இருந்தவர் என்றும், எல்லோரையும் மதித்தவர், எல்லோரும்மதித்தவர் என்றும் சுட்டியிருப்பது உண்மையான பார்வை.
 
 தன்னம்பிக்கை, இயற்கை, கலைகள், தமிழ், நண்பன், கலங்கரை விளக்கம், கண்ணீர், நீதி, அரசியல், புத்தகம், உணவு முதலானதலைப்புகளை  ஹைகுவில் பதிவு செய்கிறார். கலையைப்  பற்றிய பார்வையில் குழந்தையை இணைத்து,' எந்த ஓவியராலும் \வரையமுடியாது  குழந்தை \ வரையும் ஓவியம்   என்று எழுதுகிறார். இயற்கைக்கு அணியமாக உள்ள ஹைகுவில் 'குளத்தில் தன் அழகைரசித்தது மரக்கிளை' என்று கூறியுள்ளது ஹைகு வடிவத்தோடு பொருந்தவருவதோடு அசல் ஹைகுவாகவும் இருக்கிறது. இயற்கையைக்கடந்து வாழ்க்கை பற்றிய பார்வைக்கு நம்மை ஆட்படுத்தும்  ஹைகுவாக. 

மலர்கள் மாலையான 
 பின்னும் தொடரும்  
வண்டுகள்  !

என்றகவிதையும்,  

புகைவரும் 
நெருப்பின்றியும்  
 பனிமூட்டம் !

 என்ற கவிதையும் பொருள் ஆழத்தை வாழ்க்கையோட்டத்தோடு விரித்துக்காட்டமுடியும். அழகு என்பது அவரவர் பார்வைக்குத் தகுந்தவாறு தெரியும் என்பதை ரோசாவோடும், செவ்வந்தியோடும்இணைத்துக்காட்டுகிறார். அறவியல் பேசும் ஹைகுகள் சில கண்ணீர்என்றதலைப்பில்சொல்லப்பட்டுள்ளன. 

பிரார்த்தனையிலும் சிறந்தது 
பிறர் கண்ணீர் 
துடைப்பது  !

என்ற கவிதை இதற்கு உதாரணம்.

 
மழை பற்றிய திருக்குறள் சிந்தனையைக் கவிஞர் உள்வாங்கிக்கொண்டு    

 பொய்த்தும் வாட்டியது; 
 பெய்தும்வாட்டியது  
 மழை என்கிறார்.
 
ஹைகு. பழமொன்றியுவில் வாழ்க்கையின் பல பரிமாணங்களைப் பதிவு செய்கிறார்   கவிஞர். இன்றைய வாழ்க்கையில் நாட்டு நடப்புஎவ்வாறு உள்ளது என்கிற பல கோணப் பார்வைகளை அதில் காட்டியிருப்பது கவிஞரிடம் சமூகச் சிந்தனைக்கான களம் பரந்துபட்டிருப்பதுதெரியவரும். கவிஞாயிறு தாரா பாரதியின் பிரபலமான வரிகளான 'வெறுங்கை என்பது மூடத்தனம்; உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்றதாக்கத்தை இக்கவிஞரிடம்,

 முடியுமா என்பது மூடத்தனம்
 முடியாது என்பது மடத்தனம்
முடியும் என்பதுமூலதனம்!

  என்று காணலாம்.
 
இதில் அடங்கியுள்ள கவிதைகள் எளிமையோடு கூடிய மிகச்சாதாரணமானவையாக ஆங்காங்கே  தென்படுவது ஏனோ? அவற்றை  ஹைகுஎன்ற வடிவத்தில் அடக்கிவிடக் கூடுமா?இருப்பினும் பல்வேறான பாடுபொருள்களைத் துளிப்பாவிலும் காட்டமுடியும் என்றுமெய்ப்பித்திருப்பது ஹைகுவில் இவருக்கு மிகு ஆர்வம் இருப்பது தெரியவரும்.. மேலும் மேலும் எழுதினால் ஹைகுவில் சிறக்கலாம்என்பதைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது இந்த நூல். எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லவேண்டும் என்பதைஹைகுவிற்கும் பொருத்திப்பார்க்கலாம். 
-- 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்