மனிதர்கள் மிருகமாகலாமா ? கவிஞர் இரா .இரவி !

மனிதர்கள் மிருகமாகலாமா ?       கவிஞர் இரா .இரவி !

கௌரவக் கொலையில் கௌரவம் இல்லை
கொலைக்குப் பின் காற்றில் பறக்குது கௌரவம் !

உயிரினங்களில் உயர்வானது மனிதஇனம்
உயிர்களைக் கொன்று இழிவானது மனிதஇனம் !

விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாமம்
விலங்காக மனிதன் மாறுவது அவமானம் !

மிருகங்களிடம் மனிதம் உள்ளது  காண்கிறோம்
மனிதர்கள் மிருகமாவது உள்ளபடி வெட்கம் !

நாய் பூனைக்கு பால் தந்ததைப்  பார்த்தோம்
நாயைவிட மோசமாக மனிதன் மோதுகின்றான் இன்று !

தன் குட்டியைக் காக்க பெரிய விலங்கோடு போராடுகிறது
தன் குட்டி என்றும் பாராமல் வெட்டுகின்றான் மனிதன் !

விலங்குகள் கூட தன் இனத்தைக் கொல்வது இல்லை
மனிதன் தன் குடும்பத்தையே கொல்கின்றான் !

ஆதியில் இல்லையடா இந்த கொடிய சாதி
பாதியில் கற்பித்த மடமையடா சாதி !  

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிக் கொலைகள்
குனிவை தலைகுனிவை ஏற்படுத்தும்  கொலைகள் !

உலகில் வேறு எங்கும்  இல்லை கொடிய சாதி
உன்னத தமிழகத்திற்கு தலைகுனிவு சாதி வெறி !

கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும்
கொன்ற உயிரைத் திரும்பத்தர முடியாது !

விலை மதிப்பில்லா மனித உயிர்கள்
விலை போகலாமா ? சாதி வெறிக்கு !

உண்ணும் உணவை விளைவித்தவன் சாதி தெரியுமா ?
உடுக்கும் ஆடைநெய்தவன் சாதி தெரியுமா ?

விபத்தின் போது ஏற்றப்பட்ட இரத்தம் என்ன சாதி தெரியுமா ?  
வீம்புகளை விடுத்து மனிதம்பேணி மனிதனாக வாழுங்கள் !

பலசாதி உழைப்பாளிகளின் பங்களிப்பே உன் வாழ்க்கை
பெரியசாதி  சின்னசாதி என்பதில் உண்மை இல்லை !

விலங்கிற்கும் மனிதனுக்கும் வேறுபாடு பகுத்தறிவு
விலங்குவெறி விடுத்து பயன்படுத்திடு பகுத்தறிவு !

உழைப்பவன் தாழ்ந்தவன் அல்ல உயர்ந்தவன்
உழைக்காதவன் தான் தாழ்ந்தவன் உணருங்கள் !

தீண்டாமை பாவச்செயல் உரைத்தார் காந்தியடிகள்
தமிழகத்தில் தீண்டாமை அழிந்து மனிதம்மலரட்டும்

சாதி வெறியால் சாதித்து என்ன ? சிந்திப்பீர்
சாதிவெறியால் செத்த உயிர்கள் போதும் !   சிந்திப்பீர்

ஆணவக்கொலை இனி வேண்டாம் மனிதனே
ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்