ஹைக்கூ முதற்றே உலகு நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. ,

 கவிஞர் பேராசிரியர் : மித்ராஅவர்களைப்  பற்றி
ஹைக்கூ முதற்றே உலகு
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
கவிஞர் பேராசிரியர் : மித்ரா,
226, இரண்டாவது கிழக்கு குறுக்குத் தெரு,
அண்ணாமலை நகர் – 608 002,
முத்தையா நகர், சிதம்பரம்-2.
அலைபேசி :98654 16602
*****
       முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களால் “புலிப்பால் இரவி என்றும், முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர் இரா. மோகன் அவர்களால் “ஹைக்கூ திலகம் என்றும் நேயத்தோடு அழைக்கப்பெறும் பெருமைக்குரியர் இரா. இரவி அவர்கள்.  15 நூல்களுக்குச் சொந்தக்காரர்.  16-ம் பெற்றுப் பெருவாழ்வு வாழ இருக்கும் ஆற்றலர்.  அமைதியும், அடக்கமும், பண்பும், மனிதநேயமும் ஒருங்கே கொண்டவர், தொடர்ந்து 24 ஆண்டுகளாக இலக்கியப் பயணத்தை மேற்கொண்ட கவி யாத்திரிகர்.  நூல் குறித்த கட்டுரைகளை இணையத்தில் ஏற்றி அழகு பார்க்கும் இணையிலா பண்பாளர்.
       இரா. இரவியின் “ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலில் கலாம் 40, தன்னம்பிக்கை 43, கலைகள் 10, இயற்கை 40, மலர்கள் 21, உயர்திணை 22, தமிழ் 12, நண்பன் 28, மருத்துவர்கள் 17, வறட்சி 5, கேள்விகள் 13, கலங்கரை விளக்கம் 10, கண்ணீர் 10, நீதி 4, விழிகள் 7, அறமுயல் 21, புரட்சி 12, பூங்கொத்து 10, மழை 20, பகுத்தறிவு 21, திரைப்படம் 10, வாழ்க்கை 121, பண்புடைமை 4, உணவு 13, நூலகம் 13, லிமரைக்கூ 13, புத்தகம் 14, துளிப்பா 7, லிமர்புன் 5, பழமொன்ரியு 74 – ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன.  30 தலைப்புகளில் 639 ஹைக்கூக்கள் நூலில் இடம்பெற்றுள்ளதை அறியலாம்.
       நூலில் வாழ்க்கைப் பற்றி 121 ஹைக்கூக்கள் இடம்பெற்றுள்ளதை அறிகிறோம்.  அடுத்த நிலையில் பழமொன்ரியு 74 இடம்பெற்றுள்ளது.  மனிதர்க்கு தன்னம்பிக்கை மிக மிக அவசியம் என்பதால் 43 ஹைக்கூக்களை நூலில் இடம்பெறச் செய்துள்ளார்.  கலாம் அவர்கட்கு 40 ஹைக்கூக்கள் இயற்றி நூலில் இடம்பெறச் செய்துள்ள நேர்த்தியை நாம் காணலாம்.
       இனி நூலில் இடம்பெற்றுள்ள ஹைக்கூக்களைக் காணலாம்.
கலாம் 40 :
       இந்தியாவின் 12-ஆவது ஜனாதியதியாக 25-07-2002 அன்று பதவி ஏற்றார் அப்துல் கலாம்.  தமிழகத்தைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி, ஜனாதிபதி தேர்தலில் 90 சதவீத ஓட்டுக்களைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.  அப்பதவியை சிறப்பாக வகித்தார்.  குடியரசுத் தலைவர் பணியை விட பேராசிரியர் பணியைப் பெரிதும் விரும்பினார்.  மாணவர்கள் மத்தியில் இருப்பதைப் பெரிதும் விரும்பியவர், அவற்றை,
       “குடியரசுத் தலைவர் பதவியை
       குவலயம் போற்றிட வகித்தவர்
       கலாம்
                    (ப. 22)
       “குடியரசுத் தலைவர் பணியை விட
       பேராசிரியர் பணியை விரும்பியவர்
       கலாம்
                    (ப. 23)
       “மாணவர்களை விரும்பியவர்
       மாணவர்கள் விரும்பியவர்
       கலாம்
                    (ப.23)
என்னும் ஹைக்கூக்கள் கூறுகின்றன.
       சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் வான் பொறியியல் (ஏரோநாடிக்ஸ்) படித்தார்.  1963-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.
       1982-இல் ஐதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார்.  உயர் தொழில்நுட்பங்களைப் புகுத்தினார்.
       பொக்ரான் அணுகுண்டு சோதனையில் அப்துல்கலாம் முக்கிய பங்காற்றியவர்.  அது குறித்த மதிப்பீடுகளைத் தகர்ந்தார்.
       “திருமணம், எனது அறிவியல் லட்சியத்திற்கு இடையூறாக இருக்கும் என்று திருமணம் செய்து கொள்ள மறுத்த மாமனிதர். இச்செய்தியைக் கவிஞர் இரா. இரவி,
       “தவறான மதிப்பீடுகளை
       தவிடு பொடியாக்கினார் பொக்ரானில்
       கலாம்
                    (ப.26)
       “திருமணம் விரும்பாத
       திருமனம் பெற்றவர்
       கலாம்
                    (ப.21)
என ஹைக்கூக்களாக்கி உள்ளார்.
       ஆடம்பரம் தொலைத்த அறிஞன். தன் அண்ணன் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பெரிதும் அன்பு வைத்திருந்தவர்.  தோல்விகளுக்குத் துவளாது வெற்றிக்கனிகளைப் பறித்துத் தந்தவர் என்னும் கருத்துக்களைக் கவிஞர்,
       “அண்ணனை மதிக்கும்
       அன்புக்குச் சொந்தக்காரர்
       கலாம்
.                   (ப.21)
       “தோல்விக்குத் துவளாத
       துணிந்த நெஞ்சம்
       கலாம்
.                   (ப.21)
என்று கவியாத்துள்ள பாங்கினை அறியலாம்.
       பல தேசிய விருதுகளையும், பத்மபூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா என்னும் மத்திய அரசின் விருதுகளைப் பெற்ற கலாம், கடைசி மூச்சு வரை மாணவர்களைச் சந்தித்து, கேள்வி கேட்டு, பதிலைப் பெற்று, மாணவர்கள் மனதில் அறிவை விதைத்த அறிவியல் உழவன் அப்துல் கலாம்.
       அப்துல் கலாமின் தந்தை ஏ.பி. ஜெயனுலாவுதீன் மரைக்காயர், பாய்மரக் கப்பல் வைத்திருந்தார்.  அவர் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாய்மரக் கப்பல் போக்குவரத்து நடத்தியவர்.
       அவர் தமது வாழ்க்கை வரலாற்றை ‘அக்கினி சிறகுகள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார்.  அதனைக் கவிஞர் இரா. இரவி,
       “அக்கினிச் சிறகுகளால்
       அகிலம் பறந்தவர்
       கலாம்
             (ப. 22)        என்றார்.
கலைகள் :
       “தமிழ் மொழியில் மனிதன் உருவாக்கிய அனைத்துக் கலைகளும் வாழ்வியல் மெய்மைகளும் மொழியின் ஒரு பகுதியாக இணைந்தே வளர்ந்துள்ளன.  2500 ஆண்டுகட்கு மேலாக நிலவி வருவது தமிழ் மொழியே எனலாம்.  இம்மொழி பேசும் தமிழ்மக்கள் பண்டு தொட்டே இசைக் கலையைச் சிறப்பாகப் பேணி வளர்த்து வந்திருக்கிறார்கள்.  மூன்று தமிழ் பற்றிய வழக்கின் இசையை நடுவண் அமைத்துச் சென்றிருப்பதை அறிகிறோம்.
       சங்க இலக்கியத்தில் ஒரு செய்தி :  கணவன் மனைவி குறிஞ்சிப் பண் பாடினாள்.  அதைக் கேட்ட யானை தினைக் குதிரை மென்று விழுங்காது, நிலை பெயராது துயில் கொண்டதாம்.
       “கொடிச்சி, பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
       குரலுங் கொள்ளாது, நிலையினும் பெயராது,
       மறம் புகல் மழ்களிறு வழங்கும்
  (அகம் 10 : 5 - 9)
என்னும் செய்யுளடிகள் கூறுகின்றன.
       பெருங்கதையில், உதயணன் வரலாற்றின் அவனது பத்திராபதி என்னும் யானை அவனுடைய கோடபதி என்னும் யாழோசைக்குப் பெரிதும் அடங்கிய செய்தி வந்துள்ளது.  அதனை,
       “காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்
       யாழ்வரைத் தங்கீ யாங்கு
.             ( 2 : 26 – 27 )
என்னும் பாடலடிகள் கூறுகின்றன.
       இவை போன்று எத்தனையோ இசைக்குறிப்புகள் உள்ளன.  இசையின் ஆற்றலுக்கு சான்று கூறும் இலக்கியம் பல உண்டு.  இத்தகைய இசைக்கலையின் மேன்மையை கவிஞர் இரா. இரவியும் கவிதையாக்கி உள்ளார்.  சில மருத்துவமனைகளில் (music therapy)  இசைப்பயிற்சி என்னும் பயிற்சி, நோயாளி நோயை மறக்க இனிய இசையைக் கேட்டு உறங்க, மகிழ  கொடுக்கப்பட்டு வருகிறது.  அதனால் நோயிலிருந்து குணமாவதை அறிகிறோம்.  அதனை,
       கவலையைப் போக்கும்
       நோயை
       நீக்கும் இசை
!     (ப.35)                      என்கின்றார்.
கேள்விகள் :
       தாமஸ் ஆல்வா எடிசன்
       விஞ்ஞானிகளிலேயே மிக அதிகமான நவீனக் கருவிகளைக் கண்டுபிடித்தவர் இவர்.  “அவர் கண்டுபிடித்து பேட்டண்ட் உரிமை பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 1,000க்கு மேல் என்பர்.
       ஒரு காது செவிடான போதும் ஒற்றைக் காதுடன் அறிவியல் ஆராய்ச்சியைச் செய்தார்.
       கிரகாம்பெல் கண்டுபிடித்த டெலிபோனில் உள்ள குறையை நீக்கி துல்லியமாகப் பேச வழி கண்டார்.
       “போனோகிராப் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அதுவே பின்னாளில் “கிராமபோன் என அழைக்கப்பட்டது.
       1878-இல் எடிசன் “மின்சாரப் பல்ப் கண்டிபிடித்தார்.  சினிமாப் படத்தை முதலில் கண்டுபிடித்தவர் எடிசன்.  முதலில் ஊமைப்படங்களைத் தயாரித்துப் பின்னர் பேசும் படத்தைத் தயாரித்தார் அவர்.  இவ்வாறு இரவு பகலாம் உழைத்து அறிவியல் ஆராய்ச்சி செய்து உலகிற்கு உதவிய எடிசனை இரவி,
       எடிசனின் கேள்விகள்
       தந்தன
       எண்ணற்ற கண்டுபிடிப்புகள்!
   (ப. 67)
எனக் கவிதையாக்கி மகிழ்ந்துள்ளார்.
       எடிசனைப் போன்று ரைட் சகோதரர்கள், ஐசக் நியூட்டன், கலிலியோ, மார்க்கோனி, மைக்கேல் பாரடே, ஆர்க்கிமிடிஸ், பெஞ்சமின் பிராங்க்ளின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயி பாஸ்டியர், மேரி கியூரி ஆகியோர்கள் கேட்ட கேள்விகளால் நவீன விமான்ங்கள் தயாரிக்கப்படுகின்றன.  புவியீர்ப்புச் சக்தி உண்டென்று கண்டுபிடிக்கப்பட்டது.  பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என அறிந்தோம்.  ரேடியோவுக்கு அடிப்படையான கம்பி இல்லாத் தந்தியை அறிந்தோம்.  டைனமோவை அறிந்தோம், இவை போல் எண்ணிக்கையில் அடங்காத கண்டுபிடிப்புகளை அவ் விஞ்ஞானிகளால் கண்டறிந்தோம்.  அதனைக் கவிஞர் இரா. இரவி,
       விஞ்ஞானிகள் கேள்விகளால்
       விளைந்தது
       நவீனம்
!                          (ப.68) 
எனக் குறிப்பிட்டுள்ள திறம் கண்டு வியக்கலாம்.
திரைப்படம் :
       “இருபதாம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த உன்னத சாதனங்களில் முக்கியமான ஒன்று, சினிமா. இன்று உலகில் சினிமாக் காட்சிகள் நடைபெறாத நாடுகள் இல்லை.  சினிமா பார்க்காத நபர்கள் அபூர்வம். இந்நிலையில், சினிமா தான் இரண்டாவது பெரிய தொழில் என்பது முற்றிலும் உண்மையே.
       “1889-இல் தாமஸ் ஆல்வா எடிசன் “35 எம்.எம். ஃபிலிமில் படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.  1894-இல் அவர் பல ஆராய்ச்சிகள் செய்து அசையும் சினிமாப் படத்தைக் காட்டும் கருவியைத் தயாரித்தார். அதன் பின்னர் எடிசன் ஒலியைப் பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தார்.  அதன் பின்னர் ஊமைப் படங்கள், பேசும் படங்கள் எடுக்கப்பட்டது. 
       அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாக ஹாலிவுட் உள்ளதை அறிகிறோம்.
       உலகப்புகழ்பெற்ற படங்கள் எடுக்கப்பட்டன. தமிழ்த் திரைப்படங்களை பற்றியச் செய்திகளை கவிஞர் இரா. இரவி ஹைக்கூக்களாக்கி உள்ளார்.  திரைப்படங்களின் பெயர்களின் அவல நிலையை, நடிகைகளில் அரைகுறை ஆடையை, நடிகர்களின் மீது அளவற்ற நேசிப்பை, குறிப்பாக நடிகைக்கு கோயில் கட்டுவது, நடிகர்களின் சிலைகளுக்கு பாலாபிசேகம் செய்வது போன்றவை. கதாநாயகர்களின் அவல நிலை, நடிகர்கள் பல கோடி சம்பளம் பெறுவது, இவற்றையெல்லாம் கவிஞர் காரசாரமாக ஹைக்கூக்களாக்கி உள்ளதை,
       தமிழ்த் திரைப்படத்திற்கு
       தமிழில் பெயர் வைக்க
       தமிழ் நாட்டில் வரிவிலக்கு?
           (ப.98)
       ஆள் பாதி
       ஆடை பாதி
       நடிகை!    (ப.98)

       நடிகரை நேசிப்பது அப்புறம்
       முதலில் நேசி
       உன்னை !       (ப.98)

       வயது அறுபது
       கல்லூரி மாணவர்
       கதா நாயகன் !
                          (ப.98)

       சம்பளம் கோடி
       பாத்திரம் ஏழை
       நடிகர்
!                                  (ப.99)
என்பனவற்றால் அறியலாம்.
       தன்னிலை மறந்து, மனைவி, மக்களை, பெற்றோரை மறந்து நடிகை, நடிகர் மீது நேசம் வைப்பது சரியல்ல.  நடிகை, நடிகர்கள் கோடி, கோடியாய் சம்பளம் வாங்கி மிக உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர்.  ஆனால் இரசிகர்கள் மட்டும் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்கின்றனர்.  நடிகர்களை கடவுளாகவே நினைந்து வெறியாக அலைபவர்கட்கு அன்பாய், பண்பாய், பாசமாய, நேசமாய் அறிவுரை கூறுவதை,
       இருக்கட்டும் பற்று
       வேண்டாம் வெறி
       நடிகர் மீது
!                             (ப.99)
என்னும் ஹைக்கூவால் அறியலாம்.
அரசியல் :
       அரசியல் இன்று எந்நிலையில் உள்ளது என்பதனை இரவி ஹைக்கூக்களில் குறிப்பிட்டுள்ளார்.  அரசியல் இன்று நேர்மை இன்றி உள்ளது.  அரசியலில் இல்லாமல் இருப்பது தூய்மையான வாழ்க்கையாகும்.  இன்றைய அரசியல்வாதிகள் சுயநலம் மிக்கவர்களாக உள்ளனர்.  அரசியல்வாதிகள் சொத்து சேர்ப்பதிலும், பதுக்கி வைப்பதிலும் குறிக்கோளாக உள்ளனர். காந்தி, நேரு போன்ற தியாகமும், மானிட நேயமும் உள்ளவர்களை இன்று காண்பதரிது.  தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட அறிக்கை நிறைவேற்றாமல் இருப்பர் என அரசியல்வாதிகளின் செயல்பாட்டினை உள்ளது உள்ளபடியே கவிஞர் கவிதை ஆக்கியுள்ளதைக் கண்டறியலாம்.  அவற்றுள் சில ஹைக்கூக்கள் வாசித்து மகிழ கீழே தருகிறேன்.
       வெகு நாட்களாகி விட்டன
       நேர்மை விடைபெற்று
       அரசியல்
!                                             (ப.80)

       தூரப்போனது
       தூய்மை
       அரசியல் !                (ப.80)

       சேரச் சேர
       பண ஆசை
       அரசியல்வாதிக்க்கு!
                                  (ப.80)
என்பன அவை.
கலங்கரை விளக்கம் :
       இதனைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் உள்ளன.  இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பெரிதும் ஒளி சிந்தும் விளக்குகள், கடலில் திசை தப்பி ஓடும் மரக்கலங்களை அழைக்கும் என்பதனை,
       “இரவின் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
       உரபு நீர் அழுவந்து ஒருகலம் கரையும்
       துறை
                                  (பெரும்பாணாறு 349-551)
என்னும் இலக்கியம்.
       மேலும் கலங்கரை விளக்க மாடத்தில் உள்ள ஒளிவிளக்கால் மரக்கலத்தைத் திசை அறிந்து செலுத்த உதவுவதை,
       “மாட ஒல்எரி மருங்கு அறிந்து ஒய்ய. (அகம் : 255-6)
       “இலங்கு நீரி வரைப்பின் கலங்கரை விளக்கமும் (சிலம்பு 6 : 41)
என்று குறிப்பிட்டன இலக்கியங்கள்.
       கவிஞர் இரா. இரவி கலங்கரை விளக்கம் மீனவர்கட்கு வழிகாட்டியாகவும், திக்குத் தெரியாதவனின் திசைகாட்டியாகவும் விளங்குகின்றது.  பெற்றோரையும் ஆசிரியரையும் இது நினைவூட்டுகின்றது. சுற்றுலாப் பயணிகளையும் கவரும் தன்மை வாய்ந்த்து.  ஓய்வின்றி உழைக்கும் குழந்தைகட்கு மகிழ்ச்சி நல்கும், கர்வமில்லாதது.  நன்றியை எதிர்ப்பார்க்காதது என்கின்றார்.  உதாரணத்து ஒரு ஹைக்கூ.
       படிக்காத மீனவனின் வழிகாட்டி
       திக்குத் தெரியாதவனின் திசை காட்டி
       கலங்கரை விளக்கம்!
.                               (ப.70)
இது ஒன்றே போதும் கலங்கரை விளக்கத்துக்கு விளக்கம் கூற.
மலர்கள் :
       ஜப்பானியர்கள் மலர்ந்த பூக்கள் முதுமையின் குறியீடாகக் கொள்வர். மொட்டுக்கள் இளமையின் குறியீடாகக் கொண்டு அவற்றையே பெரிதும் விரும்புவர்.  ஆனால் தமிழ் மக்களாகிய மலர்ந்த மலர்களையே பெரிதும் விரும்புகிறோம். வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லாமல் சொல்லித் தரும் நல் சூத்திரங்கள் மலர்கள் என்பதனை,
       சிரித்துக் கொண்டே இரு
       கலங்காதே கற்பிக்கும்
       மலர்கள்
!                         (ப.45)
என்கின்றது கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ.
       கவிஞர் இரவி நல்ல இரசிகர்.  அழகை ஆராதிக்கும் கலைஞர் என்பதனை,
       ஒவ்வொரு மலரும்
       ஒவ்வொரு
       அழகு!              (ப.45)

       “இரசித்துப் பார்த்தால்
       அழகு தான்
       எருக்கம் பூவும்   (ப.46)

       இரசித்துப் பார்த்தால்
       ரோசா மட்டுமல்ல
       செவ்வந்தியும் அழகு!
         (ப.47)

என்னும் ஹைக்கூக்கள் சான்றாகின்றன.
தமிழ் :
       தமிழகத்தில் இருந்த முச்சங்கங்களால் தமிழ் இலக்கியங்கள் செழித்தோங்கியது. தலை, இடை, கடைச் சங்கங்கள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.  தொல்காப்பியம், இல்வாழ்க்கை, அரசியல், மன்னர்கள், அவர்களின் போர்முறை ஆகியவற்றைக் கூறும் 18 நூல்களும், அறநெறி நூல்கள் 18 நூல்களும் சங்க கால நூல்கள்.
       இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ்மொழியை யாராலும், எப்போதும் அழிக்க இயலாது.  ஒவ்வொரு தமிழனின் மூச்சு காற்றிலும் கலந்த மொழி.  உலகில் கடைசி தமிழன் உள்ள வரை தமிழ்மொழி இருக்கும் என்பதற்குச் சான்றாய் இரா. இரவியின் ஹைக்கூ,
       அழிக்க நினைப்பவர்கள்
       அழிந்து விடுவார்கள்
       தமிழ்
!.                            (ப.53)
என்று சொல்லலாம்.
       இந்நூலில் லிமரைக்கூ, பழமொன்ரியூ, லிமர்புன் என்றும் புதிய கவிதை வடிவங்களைக் காண இயலுகிறது.  இயல்பாகவே இரா. இரவி ஹைகூக்களில் பழமொழியைக் கையாள்வதில் சிறந்து விளங்குபவர்.  எனவே இப் பழமொன்ரியு வடிவம் இரவிக்கு வசப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.  பழமொழிகளுக்கு ஒரு திருப்பம், சிறு மாற்றம், பார்வைத் திரிபு கொடுத்துப் பழமொன்ரியு வடிவம் பெறுகிறது. அதனை,
       கற்றது கையளவு
       கல்லாதது உலகளவு – பழமொழி
       தோல்வியுற்ற மாணவன்
       - பார்வை திரிபு           (ப.1400
இக் ஹைக்கூவால் அறிந்தின் புறலாம்.
       74 -  பழமொழியைச் சொல்லி அதற்குத் திருப்பம் கொடுத்து, கொஞ்சம் மாற்றமும் பார்வைத் திரிபும் கொடுத்து ஹைக்கூக்களாக்கியத் திறம் கண்டு வியக்கலாம்.
லிமரைக்கூ :
       13 – லிமரைக்கூ இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  பழமொழிகள் மாற்றில் போடப்பட்டு சென்ரியூவாக மலரச் செய்துள்ளார் இரவி.  எல்லாம் விதிப்படி என்பது பழமொழி.  அதனை லிமரைக்கூ ஆக்கியுள்ளதை,
      பழி போடாதே விதி மீது
       விதியென்று ஒன்று இல்லவே இல்லை
       மதியால் வெற்றிமாலை தோள் மீது
!         (ப.132)

என்னும் கவிதையால் அறிய நேர்கின்றது.
லிமர்புன் :
       அறியாமை நிறைந்த மனதுக்கு அறிவுரைச் சொல்வது. அது கேட்டு திருந்துவது.  அம் மனநிலையை உண்டாக்குவது.  அதனை,
      வேண்டாம் பெண் சிசுகொலை
       வேண்டும் பெண் இனம் என்றும்
       மாற வேண்டும் மக்கள் மனநிலை
!           (ப.138)
என்றும் லிமர்புன் வழி அறியலாம்.
       இவ்வாறு இவ்வுத்தியைப் பயன்படுத்தியும், இன்னும் எத்தனை, எத்தனையோ கருத்துக்களை நூலில் பதிவு செய்துள்ள இரா. இரவியை பெரிதும் பாராட்டுகிறேன்.  எல்லா புகழும் பெற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்.


--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்