வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெற்றிப் பதிவுகள் !


நம்பிக்கை மேல் நம்பிக்கை !


நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


எழில் பதிப்பகம், 29/14, நியூ காலனி 3-வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-15.  136 பக்கங்கள்  விலை : ரூ. 120.
*****
       இந்த நூலில் திரு. சூரியசந்திரன் அவர்களின் பதிப்புரை தொடங்கி தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்கள் திரு. பாலா, திரு. உதய சான்றோன், கடவுச்சீட்டு மண்டல அலுவலர்  கலியமூர்த்தி பாலமுருகன், இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ஆகியோரது அணிந்துரை நூலிற்கு அணி சேர்க்கின்றன. பாராட்டுக்கள்.

       நூல் ஆசிரியர் டாக்டர் தே. அருளான்ந்து அவர்கள் திருச்சி அருகில் உள்ள பூலாங்குளத்துப் பட்டியில் பிறந்து தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வெற்றிக்கொடி நாட்டி தான் வளர்ந்த்தோடு நின்று விடாமல் தனக்கு முன்னேற்றம் தந்த சமுதாயத்திற்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், பிறந்த ஊரில் இலவசப் பள்ளி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு என்று பல்வேறு தொண்டுகள் செய்து வருகிறார்.


       நூலில் இறுதியில் உள்ள வண்ணப் புகைப்படங்கள் நூலாசிரியரின் உழைப்பை பறைசாற்றுகின்றன.  உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் சொல்லியது போல வாழ்வாங்கு வாழ்ந்து வரும் நல்ல மனிதரின், நம்பிக்கை விதைக்கும் நல்ல நூல். இந்த நூல் படித்தால் படிக்கும் வாசகர் மனதில் உத்வேகம் பிறக்கும்.  நாமும் முன்னேறி சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேகமும், விவேகமும் பிறக்கும் என்று உறுதி கூறலாம்.

       எல்லோருக்கும் புரியும்வண்ணம் எளியநடையில், கவிதைநடையும், கட்டுரைநடையும் இன்றி புதிய நடையில் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.

       நூலில் உள்ள கருத்துக்களை ஈடுபாட்டுடன் உள்வாங்கி புரிந்து படித்து அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பது உண்மை.

       நூலில் 20 தலைப்புகள்ல் மிக எளிமையாக நம்மோடு பேசுவது போலவே எழுதி உள்ளார்.

       நம்பிக்கை மேல் நம்பிக்கை வரும் வண்ணம் செயல்கள் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

       ஒரு செயலை செய்யத்
       தொடங்கும் போது வருவது “நம்பிக்கை”.
       பல செயல்களை முடித்துக்காட்டும் போது
       வருவது “சந்தேகமில்லாத நம்பிக்கை”.
 தொடர்ந்து நாம் சொல்வதையெல்லாம்
 செய்து காட்டும் போது வருவது
 நம்பிக்கை மேல் நம்பிக்கை !

நம்முடைய நம்பிக்கையின் மீது பிறருக்கு நம்பிக்கை வரக் காரணமாக
இருப்பது நாம் சொன்னபடி செயல்களை முடிப்பதில் உள்ளது.  வெறும் வாய்ச்சொல் வீரராக இருந்து வீர வசன்ங்கள் பேசி விட்டு எதுவும் செய்யவில்லை என்றால், நம் மீது உள்ள நம் குடும்பத்தாரின் நம்பிக்கை போய்விடும் என்பது உண்மை.  சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவது இன்றியமையாதது என்பதை நன்கு விளக்கு உள்ளார்.  நூலில் பல்வேறு கருத்துக்களை போகிற போக்கில் விதை போல தூவிச் செல்கிறார்.

       அடுத்தவர்களை வெல்ல வேண்டும் என்ற பொறாமையிலேயே நேரத்தையும், உழைப்பையும் விரயம் செய்து வருகின்றனர்.  அவர்களுக்கான வைர வரிகள் இதோ!

      "அடுத்தவர்களை ஜெயிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள்
       உங்களை நீங்களே வெல்லுங்கள்.
       ஆம், உங்கள் ஆசைகள் நிறைவேறும் வகையில்
       உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்

உண்மை தான்.  வெல்ல வேண்டுமென்ற எண்ணம் மட்டும் போதாது. அதோடு அதற்கான செயலும் இணைந்தால் தான் வெற்றி வசமாகும்.

       நூலாசிரியருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.  எனவே அவர், கடவுளிடம் பக்தர்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதை விட்டுவிட்டு எனக்கு இது கிடைத்தது, அதற்கு நன்றி, அது கிடைத்தது அதற்கு நன்றி என்று சொல்லுங்கள் என்கிறார்.  கடவுளுக்கு சொல்லாவிட்டாலும் அப்பா, அம்மாவிற்கு நன்றி சொல்லுங்கள் என்று நல்ல பழக்கத்தை வலியுறுத்தி உள்ளார்.  இதுபற்றி, இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

       தன்னலம் நம்மை உயர்த்தாது, பொதுநலம் தான் நம்மை உயர்த்தும் என்பதை ரத்தினச் சுருக்கமாக, சொற் சிக்கனத்துடன் நன்கு எழுதி உள்ளார்.  பாருங்கள்.

  “சுயநலத்தோடு இருந்தால் பெரும் செல்வம் சேர்த்து விடலாம்” என்று.  ஆனால், உண்மை அதுவன்று, நம்மைச் சார்ந்தவர்கள் வளர் வேண்டும் என்று நினைக்கிற போது தான் நம்முடைய வளர்ச்சி பன்மடங்காக உயர்கிறது.  எனவே எப்போதும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம், நாம் பயன்பட முடியும் என்று பார்க்க வேண்டும்”.

       உளவியல் ரீதியான பல வாழ்வியல்  உண்மைகளை அவர் வாழ்வில் சந்தித்த, பேசிய அனுபவங்களுடன் கலந்து உண்மையை எழுதி இருப்பதால், படிக்கும் வாசகர்கள் மனதில் நன்கு பதிந்து விடுகிறது.

       ஒரு நூல் என்ன செய்யும்? என்று கேட்பவர்கள், இந்த நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள்.  ஒரு நூல் என்ன செய்யும் என்பதை உணர்வீர்கள்.  வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைத்து வெற்றிக்கான வழிவகைகளைச் சொல்லித் தரும் நல்ல நூல்.

       நம்மில் பலர் என் தலைஎழுத்து இப்படி எழுதிவிட்டான் என்று சோர்ந்து, கவலையில் வாடுவோர் பலர் உண்டு.  அவர்களுக்கான பதில் நூலாசிரியர் டாக்டர் தே. அருளான்ந்து அவர்களின் மொழியில் காண்க.

      “தனக்குத்தானே கேள்வி எழுப்பி
       தனக்குத்தானே பதிலளித்து
       பல்வேறு விஷயங்களைக் கற்றறிந்தும்
       கண்டுபிடித்தும் வருகிற மனிதர்களுக்குத்
       “தலைஎழுத்து” என்ற ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை.

       நாம் எப்படி வாழ வேண்டும், செயல்பட வேண்டும் என்பதையும் நன்கு விளக்கி உள்ளார்.

       “நம் செயல்களின் வழியாக
       அடுத்தவர் மனங்களில்
       காட்சிகளாகப் பதிவோம்
       இப்போது நம்மைச் சுற்றியுள்ளோரை
       நேர்மறையாக்ச் சொல்ல வைப்போம்.
       “இவர் சொன்ன மாதிரியே முடிச்சிக் காட்டிடுவாருப்பா
       பார்த்தா தெரியுதில்ல்!”

       நூல் ஆசிரியர் டாக்டர் தே. அருளான்ந்து அவர்களுக்கு பாராட்டுக்கள். இந்த நூல் முதல் நூல் போல இல்லை .பல நூல் எழுதியவரின் அனுபவ முதிர்ச்சி தெரிகின்றது .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள். இந்த நூலை மதிப்புரைக்காக என்னிடம் வழங்கிய தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு நன்றி.



கருத்துகள்