அன்புள்ள அமெரிக்கா ! பயணக் கட்டுரைகள் ! நூல் ஆசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அன்புள்ள அமெரிக்கா !


பயணக் கட்டுரைகள் !
நூல் ஆசிரியர் : முனைவர் அ.  கோவிந்தராஜு !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017.  போன் : 044 24342810.  பக்கங்கள் : 152, விலை : ரூ. 100.
*****
       நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜீ அவர்கள், மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் கரங்களால் நல்லாசிரியர் விருது பெற்றவர். 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் மிக்கவர்.  தினமணி நாளிதழில் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி வருபவர்.  சமீபத்தில் விபத்து பற்றி விழிப்புணர்வு ஆத்திசூடி அழகாக எழுதி இருந்தார்.  அவரின் அமெரிக்கப் பயணத்தை அழகிய நூலாக்கி உள்ளார்.

       நூலாசிரியரின் ஆசிரியரான தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் விரிவான அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக அமைந்துள்ளது.  பலரும் பல நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் எல்லோரும் பயணக்கட்டுரை எழுதுவதில்லை.  எழுதவும் முடியாது.  நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜு அவர்களுக்கு இலக்கிய ஈடுபாடு இருந்ததன் காரணமாகவே பயணக்கட்டுரை நூலாக சாத்தியமானது.

       நூலாசிரியர் அன்னமாக இருந்துள்ளார்.  அமெரிக்கர்களின் நல்லவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மிக கவனமாக நூலாக்கி உள்ளார்.  அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டது போல, “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்பதைப் போல அயலவர்களிடம் உள்ள நல்ல குணங்களை நாமும் கடைபிடித்தால் வாழ்வில் சிறக்கலாம்.

       இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு நூலாசிரியரின் சம்மந்தி இருவரும் இணையராக வந்து கலந்து கொண்டு பணம் தந்து 15 நூல்களும் வாங்கிச் சென்றார்கள்.  வியப்பாக இருந்தது.  காரணம் நூலாசிரியரின் அன்பு.

       நூலில் 34 கட்டுரைகள் உள்ளன. படிப்பதற்கு சுவையான, எளிமையான, இனிமையான, இயல்பான, இலக்கியத்தரமான கட்டுரைகள்.  பறப்பது சுகமே என்று தலைப்பிட்டு விமானத்தில் பயணித்தது தொடங்கி ‘மறப்பது இலமே’ என்று முடித்து உள்ளார்.  65 நாட்கள் அமெரிக்க மண்ணில் வாழ்ந்த அனுபவத்தை நூலாக்கி உள்ளார்.

       அமெரிக்காவில் என்னை மிகவும் கவர்ந்தவை சோலைகள்.  கண்ணைக் கவரும் மலர்ச் சோலைகள், கவினுற வளர்ந்த மரங்கள், புல்வெளிகள் என்கிறார்.  பலரும் அமெரிக்காவின் வானுயர்ந்த கட்டிடங்களைத் தான் புகழ்வார்கள்.  ஆனால் நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்த ராஜு அவர்கள் இயற்கை நேசர் என்பதால் அங்கு சென்றும் இயற்கை எழிலையே விரும்பி ரசித்துள்ளார்.  அதனை அழகுற பயணக்கட்டுரையாக வடித்துள்ளார்.  ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதைப் போல அமெரிக்காவில் அவர் கண்டுணர்ந்த இன்பங்களை வாசகர்களுக்கு பகிர்ந்து இன்புற்றுள்ளார்.

       தெளிந்த நீரோடை போன்ற மிக நல்ல நடை. சுவையாக எழுதி உள்ளார்.

       நூலின் தொடக்கத்தில் அன்புறை வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார்.

       அயல்நாடு சென்றும்
       அன்னைத் தமிழ் வளர்க்கும்
       அயலகத் தமிழர்களுக்கு,

       புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும், ஈழத் தமிழர்கள் தமிழை வளர்த்து வருகின்றனர்.      இணையத்திலும் பதித்து வருகின்றனர்.  கனடாவில் வாழும் இனிய நண்பர் அகிலலும் பதித்து வருகின்றனர்.  கனடாவில் வாழும் இனிய நண்பர் அகில் www.tamilauthors.com இணையம் தொடங்கி உலக எழுத்தாளர்களை ஆவணப்படுத்தி வருகிறார்.  நூலாசிரியரின் தினமணி கட்டுரை அனுப்பி இருந்தேன்.  படித்து விட்டு அவரது அலைபேசி எண், என்னிடம் வாங்கி அவரைப் பாராட்டினார்.  இந்த நூலை உலகம் முழுவதும் பரந்து விரிந்து தமிழை வளர்த்து வருபவர்களுக்கு காணிக்கையாக்கியது சிறப்பு.

       ஒவ்வோரு கட்டுரையும் தொடுப்பு, எடுப்பு, முடிப்பு என முத்தாய்ப்பாக எழுதி உள்ளார்.  புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன.  அமெரிக்கா செல்லாதவர்களுக்கு அமெரிக்கா பற்றிய புரிதலையும், அமெரிக்கா சென்றவர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாகவும் நூல் உள்ளது.

       முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் நூல் ஆசிரியர்
அ. கோவிந்தராஜு அவர்கள், “மழைக்கு ஒதுங்கினேன், மகளின் பல்கலைக்கழகத்தில்” என்று எள்ளல் சுவையுடன் தலைப்பிட்டுள்ளார்.

       ஆங்கில பழமொழிகள், பொன்மொழிகள் அனைத்திற்கும் மூலம் நம் தமிழ்மொழி தான்.  ஆங்கிலத்தில் பல சொற்கள் தமிழில் உள்ளன.  அதனை உணர்த்தும் விதமாக, நூலில் இருந்து

       It’s sure that you will get proportionately to your sweat”
       நம் பூட்டாதி பூட்டன் திருவள்ளுவர் சொன்ன ‘மெய்வருத்தக் கூலி தரும்’ என்பதன் மொழிபெயர்ப்பு தான் அது.

       பெரோட் அருங்காட்சியம் பதிவு மிக நன்று.  அமெரிக்கர்களிடம் அறிவியல் ஆர்வத்தை இந்த அருங்காட்சியம் விதைத்து வருகிறது என்பதை ஆளுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

       அமெரிக்காவில் இந்து மதக் கோயில்கள் பல உள்ளன.  இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் இருந்து அறிய முடிகின்றது.  மான் கண்டு ரசித்ததை, தோட்டம் கண்டதை, அறிவுக்கோவிலான நூலகம் சென்றதை, திரையரங்கு அனுபவம், உழைப்பை மதிக்கும் பாங்கு, ஏழை, எளியவருக்கு உதவிடும் மனிதநேயம், வனப்பு மிக்க கடற்கரைகள், பிரம்மாண்டமான சுதந்திரதேவி சிலை, விண்ணைத்தொடும் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகள், நாசாவும் பீசாவுன் என்று எதையும் விட்டு வைக்காமல் கட்டுரையாக்கி தகவல் விருந்து வைத்துள்ளார்.  கல்பனா சாவ்லா பற்றி கவிதையும் எழுதி உள்ளார்.

       கல்பனா சாவ்லா கண்மணியே
       ககனத்தில் நீ சென்ற தடமெங்கே?
       வல்விதி உன்னை வழிமறித்து
       வானத்தில் மறைத்துள்ள் இடமெங்கே?

       எரிந்தும் எரியாத துருவ நட்சத்திரமான கல்பனா சாவ்லா கவிதை மிக நன்று.

       ‘சாலை ஒழுக்கம்’
       நம் நாட்டில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது இடதுபுறம் செல்க (Keep Left) என்பது விதி.  ஆனால் இங்கே Keep Right என்பது தான் அடிப்படையான சாலை விதி.  இந்த ஆங்கிலத்தொடருக்கும் சரியாகச் செய் என்றும் பொருள் உண்டு.  ஆம் எனக்கு தெரிந்தவரையில் அமெரிக்காவில் எல்லோரும் சாலை விதிகளை மிகச் சரியாகக் கடைபிடிக்கிறார்கள்”.

  நூலாசிரியர் எழுதியுள்ள இந்த வரிகளை நாம் கடைபிடித்தால் போதும், விபத்து இன்றி நிம்மதியாக வாழலாம்.

நூல் ஆசிரியர் : முனைவர் அ.  கோவிந்தராஜு அவர்கள் முதலில் கவிதை நூல் எழுதினார்கள் .இந்த நூல் கட்டுரை வகை .தொடர்ந்து எழுதி முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் .மிகச் சிறப்பாக பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும் .இந்நூல் வெளி வர துணை நின்ற தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .


--

கருத்துகள்