ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !

ஹைக்கூ முதற்றே உலகு !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

 நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !

21/15. புதி திருச்சிக் கிளை வடக்குத் தெரு,
லைன்மேடு, சேலம் – 636 006. அலைபேசி : 90033 44742
மின்னஞ்சல் :
ponkumarkavithai@gmail.com.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி. நகர்,
சென்னை-600 017. விலை : ரூ. 100.

*****
       கவிதைகளில் மிகச் சிறிய வடிவம் ஹைக்கூவாகும்.  ஒரு வரி ஆத்திச் சூடியும் உண்டு.  இரு வரி குறளும் உண்டு.  மூவடி கவிதையும் உண்டு.  எல்லாவற்றையும் மீறி ஹைக்கூவிற்கு என்று ஒரு சிறப்பு உண்டு.  ஹைக்கூ எனப்து சிறிய வடிவமாயினும், சிந்திக்கச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றதாகும்.  ஹைக்கூ என்னும் வடிவம் மூலம் மக்களுக்கு எளிதில் எதனையும் கொண்டு செல்ல முடியும்.  கவிஞனின் கருத்தை பிரதிபலிக்க  முடியும்.

       ஹைக்கூ என்னும் வடிவம் பாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டு, கவிஞர் சி. மணி, எழுத்தாளர் சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரால் வளர்க்கப்பட்டதாகும்.  கவிஞர் அமுதபாரதி, கவிஞர் அறிவுமதி ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.  கவிஞர் மு. முருகேஷின் வருகைக்குப் பிறகு ஓர் இளைய தலைமுறையின் பட்டாளமே ஹைக்கூவை முன்னெடுத்துச் சென்றது.  அப் பட்டாளத்தில் தனித்த அடையாளத்துடன் ஹைக்கூ உலகில் செயல்பட்டு வருபவர் கவிஞர் இரா. இரவி.

       ‘இம்’ என்றால் சிறைவாசன், ‘ஏன்’ என்றால் வனவாசம் என்பது போல், கவிஞரிடம் எப்போதும் ஒரு ஹைக்கூ வாசம் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு ஏற்ப அவரின் ஹைக்கூக்கள் அமைந்துள்ளன.  ஹைக்கூக்களில் அதிகம் எழுதி அபார சாதனை படைத்தவர்.  அவரின் தொகுப்பு வரிசையில் அண்மையில் வெளியாகியுள்ள தொகுப்பு, “ஹைக்கூ முதற்றே உலகு”.

       ஹைக்கூ என்னும் வடிவத்திற்கு பல குணங்கள் உண்டு.  அதில் ஒன்று ஹைக்கூவிற்கு தலைப்பு கிடையாது.  ஹைக்கூ சுதந்திரமானது.  கவிஞனின் சிந்தனைப் போல், ஹைக்கூவும் சுதந்திரமானது.  கட்டற்றது. தலைப்பற்றது. ஆனால் கவிஞர் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஒரு சில ஹைக்கூக்களை எழுதியுள்ளார்.  ஒவ்வொன்றையும் ஓர் அத்தியாயம் ஆக்கியுள்ளார்.  முதல் அத்தியாயம் ‘கலாம் 40’.  அப்துல் கலாம் குறித்த 40 ஹைக்கூக்கள்.

       மாணவர்களை விரும்பியவர்
       மாணவர்கள் விரும்பியவர்
       கலாம் !

       அப்துல் கலாம் குறித்த 40 பரிமாணங்களை ஹைக்கூக்கள் மூலம் தெரிவித்துள்ளார்.  அப்துல் கலாம் மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப் படுத்தியுள்ளார்.  அப்துல் கலாம் மேல் அளவிற்கதிகமாக பிரியமும் கொண்டவர்.

       ‘தன்னம்பிக்கை முனை’ யிலும் ஏராளமான ஹைக்கூக்கள் கவிஞரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

       படிப்பதை விட
       படைப்பதே சிறப்பு
       வரலாறு !

       மிக சுருக்கமாக நறுக்கென்று எழுதப்பட்டுள்ளது. ஹைக்கூ படைப்பதன் மூலம் கவிஞர் இரா. இரவியும் வரலாறு படைக்க முயன்று வருகிறார்.

       இலக்கியம் ஒரு கலை.  இலக்கியத்தில் ஹைக்கூ படைப்பதும் ஒரு கலையே.  ‘கலைகள்’ தலைப்பில் பத்து ஹைக்கூக்கள்.  பத்தில் ஐந்து இசை குறித்தானது.  இரண்டு ஓவியம் குறித்தானது.  கலை பற்றியது இரண்டு.  மீதம் ஒன்று திருஷ்டி தொடர்பானது. 

       தனித்து இருந்தாலும்
       சேர்ந்து இருந்தாலும் அழகு
       கலைப் பொருட்கள் !

       பொதுவானது எனினும் கலை என்பது பொதுவானது என்கிறார்.  கலையின் மேன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.

       ஹைக்கூவின் தோற்றம் ஜப்பான்.  தொடக்கக் காலங்களில் ஹைக்கூக்களின் பாடு பொருள் இயற்கையை மையப்படுத்தியே இருந்தது.  இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட போது இயற்கையே பாடப்பட்டது.  பின்னர் பாடுபொருள்கள் பல தளங்களில் இயங்கியது.  தற்போது ஜப்பானிலும் ஹைக்கூவின் போக்கு மாறி விட்டது.  கவிஞர் ‘இயற்கை’ தலைப்பிலும் ஹைக்கூ புனைந்துள்ளார். 

       பிடிக்க ஆசை
       பிடிபடுவதில்லை
       வண்ணத்துப் பூச்சி !

       வண்ணத்துப் பூச்சியை மையப்படுத்தி இருந்தாலும், குறியீடாக உள்ளது.  வண்ணத்துப் பூச்சி என்னும் இடத்தில் எதனையும் பொருத்திப் பார்க்கலாம்.  குறிப்பாக, ‘ஹைக்கூ’. ஹைக்கூவும் பெரும்பாலான கவிஞர்களுக்கு பிடிபடுவதில்லை.

       ரசித்துப் பார்த்தால்
       அழகு தான்
       எருக்கம் பூவும் !

       மலர்கள் தலைப்பில் இயற்றப்பட்ட ஹைக்கூக்களில் ஒன்று இந்த ஹைக்கூ.  மனிதர்க்கு ரசனை அவசியம் என்கிறார்.  ரசனை இருந்தால் எல்லாமே அழகாக தெரியும் என்கிறார்.  கவிஞரின் ஹைக்கூ மலர்களும் ரசிக்கும்படி உள்ளன.


       மனிதர்களை உயர்திணைகளாகவும், விலங்குகளை அஃறிணை-களாகவும் அறிஞர்கள் பிரித்து வைத்தனர். காரணம் மனிதர்கள், விலங்குகளை விட, பறவைகளை விட மற்ற உயிரின்ங்களை விட உயர்ந்த பண்பு கொண்டவர்கள் என்பதால் பிரித்து வைத்தனர்.  ஆனால் இன்று மனிதர்களின் நடவடிக்கை மிக மோசமாகி விட்டது.  ஐந்தறிவுகளை விட தாழ்ந்தவர்களாகி விட்டனர்.கவிஞர் ‘உயர்திணை’யில் ஐந்தறிவுகள் எவ்வாறெல்லாம் உயர்ந்துள்ளன என்று விளக்கியுள்ளார்.

       ‘தமிழ்’ மொழியின் சிறப்பையும், ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ளார்.  இதில் கவிஞர்கள் பற்றியும் பேசியுள்ளார்.  ‘நண்பன்’ எப்படிப்பட்டவன் என்றும் ஓர் அத்தியாயம் மூலம் விவரித்துள்ளார்.  நண்பனைப் பெருமைப்படுத்தி உள்ளார்.

       நகைச்சுவை மூலம் அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர்கள் மருத்துவர்கள் தான்.  ஆனால் கவிஞர் இரா. இரவி மருத்துவர்களைப் போற்றியுள்ளார்.  மருத்துவர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார்.  நகைச்சுவை-யாளர்களுக்கு நல்ல ஊசி போட்டுள்ளார்.

       ஏன்? எதற்கு? எப்படி?
       எதனால்? கேள்விகள்
       அறிவின் தொடக்கம். !

       ‘கேள்விகள்’ தலைப்பிலான ஹைக்கூ.  கேள்வியே அறிவை விரிவடையச் செய்யும்.  மனிதரை வளர்ச்சியடையச் செய்யும்.  அறிவின் தொடக்கத்திற்கு கவிஞர் வித்திட்டுள்ளார்.

       ‘அரசியல்’ குறித்து அதிகமாகவே ஹைக்கூவில் எழுத முடியும்.  எழுதிக் கொண்டும் உள்ளனர்.  கவிஞரும் எழுதியுள்ளார்.

       தரமாட்டான் அவ்வைக்கு
       நெல்லிக் கனி
       இன்றைய அதியமான் !

       ஒரு வரலாற்று தொன்மத்தைக் கையாண்டு இன்றைய அரசியல் வாதிகளைச் சாடியுள்ளார்.  கவிஞர்கள் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று விரும்பிய மன்னர் வாழ்ந்த நாடு என்று எண்ணும் போது மனம் மிகவும் மகிழ்கிறது.

       ஹைக்கூ ஒரு வாழ்வு என்பர். வாழ்க்கைப் பற்றி பல ஹைக்கூக்கள். மனிதர்களின் வாழ்க்கை எத்தகையது என்று ஹைக்கூக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

       முற்போக்குவாதி
       இரத்தத்திலும் கலந்துள்ளது
       ஆணாதிக்கம் !

       பெண்ணை அடிமைப்படுத்தும் புத்தி முற்போக்குவாதி என்பவரிடத்தும் இருக்கும் என்கிறார்.  ஆணாதிக்கவாதிகள் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

       வறட்சி, கலங்கரை விளக்கம், கண்ணீர், நீதி, விழிகள், புரட்சி, பூங்கொத்து, மழை, பகுத்தறிவு, திரைப்படம், பண்புடைமை, உணவு, நூலகம், புத்தகம் என பல அத்தியாயங்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.  ஹைக்கூவிற்கு துளிப்பா என்பது புதுவையாளர்களின் பெயர்.  துளிப்பா என்னும் தலைப்பில் மரபு பாக்களை எழுதியுள்ளார்.  தமிழில் புதிய முயற்சியான லிமர்புன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழியில் லிமரைக்கூ மற்றும் பழமொன்ரியு ஆகிய வடிவங்களிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

 கவிஞர் ஹைக்கூ படைப்பதில் மீண்டும் ஒரு கி.மீ. கல்லைக் கடந்துள்ளார்.  ஹைக்கூக்கள் மூலம் தன் சிந்தனைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மக்களுக்குக் கூறியுள்ளார்.  ஹைக்கூவில் அவரின் தொடர் முயற்சி பிரமிக்கச் செய்கிறது.  ஆயினும் சற்று நிதானமும் தேவைப்படுகிறது.  பெரும்பாலான ஹைக்கூக்கள் பழமொழியாகவும், விடுகதையாகவும், விளக்கமளிப்பதாகவும் உள்ளதைக் கவிஞர் கவனிக்க வேண்டும்.  கருத்தாகவும் உள்ளதை மறுக்க முடியாது.  கவிஞர் இரா.
ரவியால் இவைகளைத் தவிர்த்து சிறந்த ஹைக்கூக்களை உருவாக்க முடியும்.  அத்தகைய ஆற்றலும், வல்லமையையும் பெற்றவர்.

வள்ளுவர், பகவன் முதற்றே உலகு என்றார்.  கவிஞர்
இரா. இரவியோ, ஹைக்கூவை முதற்றே உலகு என்கிறார்.  ஹைக்கூவை முதன்மைப்படுத்தி உள்ளார்.  பகவனுக்கு மேல் என்கிறார்.





நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்