இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !

இலக்கிய அமுதம் !


நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !

நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !

திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810.  282 பக்கங்கள்,
விலை : ரூ. 180.
*****
       இலக்கிய அமுதம் நூலில் கவிஅமுதம், செவ்வியல் அமுதம், சிந்தனை அமுதம் என்று மூன்று பகுதிகள் உள்ளன.  முதல் பகுதி கவி அமுதம் மட்டும் முந்தைய விமர்சனத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன்.  தற்போது மற்ற இரண்டு பகுதிகள் குறித்த விமர்சனத்தை எழுதுகின்றேன்.

       அமுதம் என்பது சாகாவரம் தரும் மருந்து என்பார்கள்.  கற்பனை தான்.  ஆனால் இந்த நூல் படித்தால் இதயம் இதமாகி வாழ்நாள் நீட்டிக்கும் என்பது உண்மை.  படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

       கவிஞன் என்பவன் கூடை கூடையாக எழுதித் தள்ளுபவன் அல்லன்.  சில கவிதைகள் எழுதினாலும் படித்த வாசகர்கள் மனதில் தங்கும் அல்லது தைக்கும் வைர வரிகளாக எழுதுபவனே கவிஞன். 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்குவது போல, “ஒரு பாட்டாலும் உலகப் புகழ் பெறலாம் என்பதைக் காட்டுவது இவர் பாட்டு புறனானூறு மக்கள் பதிப்பு (ப.25).

       நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மேற்கோள் காட்டும் போது யார் எழுதியது? எந்த நூல்? எந்த பக்கம்? என்ற புள்ளி விவரங்களுடன் எழுதும் அறிவு நாணயம் மிக்கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.  மற்றவராக இருந்தால் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் எழுதிய கருத்தை தன் கருத்து என்பது போல எழுதி விடுவார்கள்.

       “ஆசை உள்ளே புகுந்ததும் அன்பு வெளியே சென்று விடுகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் எழுதி உள்ல சூஃபி கதை மிக நன்று.  (சி.எஸ்.தேவநாதன் வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள் பக். 126-128).

       தேனீ மலர்களில் இருந்து தேன் எடுக்கும் பல மலர்களில் தேன் எடுப்பதால் தேனீக்கு எந்த மலர் என்று தெரியாது.  ஆனால் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், வாசிக்கும் வழக்கத்தை சுவாசமாகக் கொண்டவர் என்பதால், தான் வாசிக்கும் நூலில் உள்ள கருத்துக்களை அன்னப்பறவை நீர் பிரித்து பாலை அருந்துமாம். அது போல நூலில் உள்ள சிறப்பம்சத்தை எடுத்து வாசகர்களுக்கு நல்விருந்து வைப்பதை தொடர் பணியாக செய்து வருகின்றார்கள்.

       சங்க இலக்கியப் பாடல்களை மிக எளிமையாக விளக்கம் கூறி மேற்கோள் காட்டி பல கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். பறவை நேசம் பற்றிய அகநானூறுப் பாடல் நூலில் உள்ளது.  உறையூர் முதுகண்ணன் காத்தனாரின் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் வாழ்க்கை நெறியை எழுதி உள்ளார்கள்.

       “உன் செல்வம் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களையும் செய்வதற்கு பயன்படட்டும், அவ்வாறு நீ உன் செல்வத்தைப் பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவன் ஆவாய்

செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும், வெற்றிக்கு செலவு செய்ய வேண்டும் என்ற இலக்கணத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து இயம்பி உள்ள உண்மையை இந்நூலின் மூலம் அறிய முடிந்தது. நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  நீங்கள் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக.

       நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாது இருப்பின், கடல் சூழ்ந்த பெரிய இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி

       கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.  மோதி வீழ்ந்தால் தீமை என்ற கருத்தை புறநானூற்றுப் பாடல் உணர்த்துவதை வாசிக்கும் வாசகர்களுக்கும் உணர்த்தி உள்ளார் நூலாசிரியர்.

       காதல் பற்றி இன்றும் பலரும் பல கவிதைகள் எழுதி வருகின்றனர்.  ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூலம் எதுவென்று பார்த்தால் அன்றே நமது சங்க இலக்கியத்தில் பாடி உள்ளனர் என்பதை நூலின் மூலம் அறிய முடிகின்றது.  காதலை மிக மிக மேன்மையாக பாடி உள்ளனர்.

       “உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள
       தொடர்பு போன்றது காதல்!.
       உயிர் உடம்பில் வாழ்தல்
       போன்றது காதல். உயிர் உடம்பை
       விட்டுப் பிரியும் சாதல் போன்றது பிரிவு
.

       காதல் பற்றி சரியான புரிதல் இல்லாத சிலர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.

       என்னுடைய கவியமுதம் நூலிற்கு சிறப்பான மதிப்புரை நல்கிய மாண்பமை நீதிபதி எஸ். விமலா அவர்கள் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை மிக நன்று.  சில நீதியரசர்கள் தீர்ப்புரை எழுதும் போது திருக்குறளை சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டுவார்கள்.  ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், சங்க இலக்கியமான பொன்முடியார் பாடிய புகழ் பெற்ற கடமைப் பாட்டு பற்றிய கட்டுரை எழுதும் போது நீதியரசி மாண்பமை எஸ். விமலா அவர்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எழுதிய யுத்தி மிக நன்று.  ஒரு மகனுக்கு தாயை இறுதி வரை.  காக்க வேண்டிய கடமை உள்ளது என்ற வாழ்வியல் நெறியை நன்கு உணர்த்தி உள்ளார்.

       சங்க இலக்கியப் பாடல்கள் பார்க்க பலாப்பழம் போல கடுமையாக இருக்கும்.  ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் போன்றவர்கள் கையில் சான்றோர் மேற்கோள் எண்ணை தடவி ஆய்வுக் கத்தியால் பலாப்பழம் நறுக்கி இலக்கிய விருந்து என்ற பலாச்சுளை தரும் போது படிக்கப் படிக்க இனிக்கும் சங்க இலக்கியம்.

       மனைவியிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கத்துடன் கணவனும் நடந்து கொள்ள என்ற கருத்தை, “அக நானூற்றின் 256ஆம் பாடல் மருதத்திணையில்   இதனைப் பாடியவர், மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார்.  தலைவி, தலைவனின் ஒழுக்கக்கேட்டை இடிந்துரைப்பது போன்ற பாடல் மிக நன்று.  ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக வலியுறுத்திய திருக்குறளை வழிமொழிவது போல இருந்தது.

       முல்லைப்பாட்டு பற்றியும் எளிமையாக எடுத்து இயம்பி உள்ளார்.  பாராட்டுக்கள்.  மாமனிதர் அப்துல் கலாம், வள்ளுவரின் திருக்குறள் போல வாழ்வாங்கு வாழ்ந்தவர்.  அவரின் வைர வரிகளான 10 கட்டளைகள் எழுதி, விளக்கம் எழுதி, அவரது பொன்மொழிகளையும் மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதைத்து உள்ளார்.

       கவிஞர் வைரமுத்து அவர்கள் உடல் எழுத்து என்னும் கவிதை, ஆத்தி சூடி வடிவில் இருப்பதை எடுத்து இயம்பி ஆனந்த விகடன் இதழில் 13-03-1988ல் வெளிவந்த அரசியல் ஆத்திசூடி வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை மிக நன்று.  “கவலையற்று இருத்தலே முக்தி கட்டுரையில் கவலையற்று வாழ்வாங்கு வாழ வழி சொல்லி உள்ளார். 

“உழைக்கும் மக்கள் வரம் கேட்டால் கூட, உழைப்பையே வரமாக கேட்கிறார்கள் என்பதை, “எப்படி வரம் கேட்பது என்ற கதை உணர்த்தியது.  நம்பிக்கை கேட்ட வரம், எல்லாம் கொடுக்கும் காம.தேனு 

“நண்பர்களே நேர்முகமான கண்ணோட்டம் உடன்பாட்டு நோக்கிலான அணுகுமுறை.

  எவ்வளவு மாறுபட்ட விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்று பாருங்கள்! ‘எல்லாமே மனநிலை தான் என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்குகிறதா!  செருப்பு விற்பனை கதையின் மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார்.  ‘அழகான அம்மா கட்டுரையில் வரும் ஆந்தை கதை மிக நன்று.

       நூலின் இறுதியில் நூலாசிரியருக்கு இலக்கிய இமயம்
மு .வ .  அவர்கள் எழுதி வழங்கிய வைர வரிகளுடன் முடித்து உள்ளார்.

       தமிழ் உன்னை வளர்த்தது
       தமிழை நீயும் வளர்க்க வேண்டும்.

       தமிழால் வளர்ந்த உலகத் தமிழர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்