அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

அவள் ஒரு கேள்விக்குறி?


நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி !
அணிந்துரை
: கவிஞர் இரா. இரவி !
*****
       நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், திண்டுக்கல்லில் பிறந்த கவிதைக்கல்.  மதுரையில் சிறந்து மதுரை குமாரி ஆகி விட்டார்.  வேளாண்துறையில் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர்.  பன்முக ஆற்றலாளர்.  முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திருச்சி சந்தர் அவர்கள நடத்திய கவியரங்கில் கலந்து கொண்டு என்னோடு கவிதை பாடியவர்.  பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு எதிரணியில் வாதிட்டவர். மதுரையில் இலக்கிய விழாக்களில் தனி முத்திரை பதித்து வருபவர். 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள் என்பார்கள்.  ஆனால் நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் முன் நிற்கிறார்.

       மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.

       மனது!
       குருவிக் கூடுகள் கலைந்திருந்த முற்றம்
       சாதம் வைக்கச் சொல்லி ஏக்கத்தில்
       கத்துகின்ற காகத்தின் குரலும்
       தண்ணீர் ஊற்றாது சோர்ந்து போயிருந்த – பூச்செடிகளும்
       தெளிவாய் சொல்லின
       இந்த வீட்டின் மனிதர்கள் மனதை!

       மனிதர்கள் பறவை நேசத்துடனும், இயற்கை மலர்கள் பாசத்துடனும் வாழ வேண்டும் என்பதை நாசூக்காக உணர்த்தி உள்ளார்.  பாராட்டுக்கள்.

       பெண் குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம்.

       பெண்ணடிமை சமூகம் இன்னும் விடுதலை பெறவில்லை என்றே கூற வேண்டும்.  நூலாசிரியர் பெண் குழந்தை பற்றி எழுதிய கவிதை சிந்திக்க வைத்தது.

       பெண் குழந்தை!
       என்னில் பிறந்தது
       என்னது இல்லை
       உரிமை கொண்டாடலாம்!
       முழு உரிமை சாத்தியமோ?

       “குழந்தை உங்களிடமிருந்து வந்து இருக்கலாம், ஆனால் உங்களுடையது அல்ல” என்ற ஆங்கிலப் பொன்மொழியை நினைவூட்டும் விதமாக வடித்த கவிதை நன்று.

       மகாகவி பாரதியார் கண்ட புதுமைப்பெண் போல, நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை என  நாளும் வலம் வரும் நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள் பாரதி போலவே, இயற்கை நேசத்துடன் வாழ்ந்து வருபவர்.  வேளாண் துறையில் அலுவலராகப் பணியாற்றுவதால் இயற்கையின் மீது கூடுதல் பாசம் என்றே கூறலாம்.

       கூடு!
       பச்சையம் பருகிக் கொண்டே
       செடிகளைப் போலவே
       செழித்து இளைத்தது
       மனித வர்க்கம்
       ஒற்றைக்காலில் தவமிருந்த
       கொக்கைப் போல
       சந்தர்ப்பத்தை சாதுர்யமாய்
       கவ்விக் கொண்டது எதார்த்தம்!

       கவிஞர்கள் காதல் கவிதையை சோறு போல பாடுவார்கள்.  ஊறுகாய் போல இயற்கை இருக்கும்.  இந்த நூலில் ஊறுகாய் போல காதல் கவிதை பாடியது சிறப்பு.

       நானும் நீயும் நாமானோம்.
       நீண்ட பின் இரவில்
       நீங்காத உன் நினைவு
       காற்றுப் போர்வை என்
       கதகதப்பை குறைத்து விட
       உன் நினைவே போர்வையாய்
       மீண்டும் நான் சூடானேன்
       கண்களுக்குச் தெரியாத
       அந்த நூலிழை நட்பால்
       கோடி பலம் பெற்றோம்
       நீயும் நானும் நாமானோம்.

       கவிதையின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  பாராட்டுகள்.  கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள்.

       தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவை அறிமுகம் செய்து வைத்தவர் தந்தை பெரியார்.  பெரியார் மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழகத்தின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கும்.  தமிழர்களுக்கு கல்வி, பதவி கிடைத்திடக் காரணமானவர்.  அவர் பற்றிய கவிதை நன்று.

       திராவிடத் தாய்!
       பகுத்தறிவுப் பகலவன்
       திராவிடனாய் தோன்றியதில்
       தமிழகத்தில் நிலவியது
       எழுச்சி அலை – நம்
       தலையெழுத்தை மாற்றியது.

       சொல்லுக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாதவர் பாரதி.  எழுதியபடி வாழ்ந்தவன்.  வாழ்ந்தபடி எழுதியவன்.  கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாக வாழ்பவன் கவிஞன் என்பான்.  அவன் இலக்கணப்படியே வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி.  பாரதி கண்டு புதுமைப் பெண் பாரதி பற்றியும் பாடி உள்ளார்.

       அன்புள்ள பாரதிக்கு!
       எங்கள் முரண்பாடுகளை – எதிர்க்க
       கற்றுத்தந்த பிதாமகனே! – இந்த
       புவியைத் திருத்த பூமிப்பந்திற்கு
       இறைவனிட்ட அக்கினிக்குஞ்சு நீ!
       என் உடலுக்குள்
       ஊடுருவிச் சென்று வரும்
       உன் புரட்சிக்கவி கேட்டு
       அதிகம் சூடாகிப் போன
       உணர்ச்சிக் குவியல் நான்.
       அதனால் தான் என் மனமும்
       தீமை கண்டு பொங்குகிறது.

       நம் கண்முன் நடக்கும் அநீதியைக் கண்டும் அமைதியாக இருப்பது குற்றம்.  ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை கண்டு அமைதியாக இருந்த குற்றவாளிகள் நாம்.  நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், படைப்பாளி ஒவ்வொருவரும் பாரதி போல, தீமை கண்டு பொங்க வேண்டுமென்று வலியுறுத்தியது சிறப்பு.

       காந்தியடிகள் என்ற ஒப்பற்ற மாமனிதனை, நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரன் கூட சுடவில்லை.  ஆனால் இந்தியன் மதவெறியன் கோட்சே சுட்டான்.  காந்தியடிகளை இழந்த பின்பாவது இந்த நாடு திருந்தி இருக்க வேண்டும்.  இன்னும் மத சண்டைகள் ஒழிந்தபாடில்லை.  அதனை உணர்த்திடும் கவிதை நன்று.

       காந்தி
       மதப் போராட்டத்தில்
       நீ மாய்ந்து போன போதாவது
       என் மனிதர்கள்
       மனம் திருந்தியிருக்க வேண்டும் !

       புதுக்கவிதைகள் மட்டுமல்ல, துளிப்பாக்களும் உள்ளன.  பதச்சோறாக ஒன்று.

       காய்கார பாட்டி
       சத்துக்களை சுமந்து வரும்
       சத்தில்லாத அவள் !

       உடல்மெலிந்த காய்கார பாட்டியை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்களுக்க்கு பாராட்டுகள்.  தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்