பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி

பீப் பாடல்!
கவிஞர் இரா. இரவி
*****
       நடிகர் சிம்பு பீப் பாடல் பாட அனிருத் இசையமைக்க அப்பாடல் யூடியூபில் இணையத்தில் வலம் வர பிரச்சனை வந்தவுடன் இருவருமே உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று சொல்லி இருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சிம்பு வீர வசனம் பேசியது.  எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக இருந்தது.நான்  இசை அமைக்கவில்லை என்று பல்டி அடித்தார் அனிருத்.பிரச்சனை மேலும் பெரிதானது.  கண்டன ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையில் புகார்களும் ஆரம்பமானது.

       நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மிக உருக்கமாக தொலைக்காட்சியில் பேசி இருந்தார்.  டி. ராஜேந்தர் சகலகலா வல்லவர், திறமையானவர், பல ஆண்டுகள் அவர் சம்பாதித்த புகழை, அவரது மகன் சிம்பு சில நொடியில் சிதைத்து விட்டார்.  குடிபோதையில் ரௌடிகள் கத்தும் கெட்ட வார்த்தையை பாடலாகப் பாடலாமா? என்று ஒரு கனம் சிந்தித்து இருக்க வேண்டும். இப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கலாமா? என்று இசையமைத்தவரும் சிந்தித்து இருக்க வேண்டும்.

       இணையத்தில் சிம்பு ஏற்றவில்லை என்கிறார் டி. ராஜேந்தர் சரி.  தவறாக வேண்டுமென்றே யாரோ ஏற்றி விட்டனர்.  ஆனால் பாடியது சிம்பு இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த பாடலுக்கு நடிகை சினேகா சொன்னது போல ஊடகங்களும் அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அந்த ஆபாசப் பாடல் பிரபலமடைந்து இன்று இளைஞர்கள் பலர் அலைபேசியில் வைத்து கேட்டு வருகின்றனர்.  சத்தமாகவும் பாடலை ஒலிக்க விடுகின்றனர்.  நமது சகோதரிகள் அப்பாடல் ஒலிக்கும் நேரம் சென்றால் எவ்வளவு சங்கடப்படுவார்கள்.  இதனை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து இருந்தால் சிம்பு இவ்வளவு கேவலமான கீழ்தரமான பாடலை பாடி இருக்க மாட்டார்.

நடிகர் சிம்பு இசையமைப்பாளர்  அனிருத் இருவருக்கும் நேர்ந்த துன்பத்திற்கு காரணம் கூடா நட்பு .

       புகழ்பெற்ற பெரிய மனிதர்களுக்கு அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் மகன்கள் அமைந்து விடுவது உண்டு.  அதுபோலவே டி. ராஜேந்திரன் பெயரைக் கெடுக்கும் வண்ணம் அவரது மகன் சிம்பு அமைந்து விட்டார்.  இந்தப் பாடல் பிரச்சனை வந்த நிமிடமே மன்னிப்பு கேட்டு இருந்தால் அத்தோடு முடிந்து இருக்கும்.  அதை விட்டு விட்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது போல இந்தப்பாடல் எதிர்ப்பவர்கள் வீட்டில் எல்லாம் கேமிரா வைத்தால் என்னாகும் என்று அகராதியாக பேசி அவரே அவருக்கு மண் போட்டுக் கொண்டார்.

       இனியாவது இவ்வளவு நடந்த பின்பாவது இருவரும் ஊடகத்தின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வரும்.  ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை.  இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

       திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.

       திரைப்படப் பாடல் சிறு குழந்தைகள் வரை மனப்பாடம் செய்து பாடுகின்றனர்.  தொலைக்காட்சிகளிலும் பாடுகின்றனர்.  எனவே திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்தப்பாடலுக்கு கண்டனம் செய்து கட்டுரை எழுதிய சாருநிவேதா  என்ற எழுத்தாளர் பாடலில் பாடிய கெட்ட வார்த்தையை நான் நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு நாவல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் படிப்பது என்று விளக்கம் தந்து இருந்தார் .அவரும் திருந்த வேண்டும் .இனி எந்த நாவலிலும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துக் கூடாது .

       எவ்வளவு பணம் தந்தாலும் சமுதாயத்தை சீரழிக்கும், பாடலையும், மிங்கிலப் பாடலையும் எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்.

       இந்த நிகழ்வை திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் எச்சரிக்கையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் தமிழ்ப்பாடல்களில் ஆங்கிலச்சொல் கலந்து எழுதுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.  இயக்குனர் கேட்கிறார், தயாரிப்பாளர் கேட்கிறார், நடிகர் கேட்கிறார் என்று ஆங்கிலச் சொல் கலந்து எழுதும் அவலத்திற்கு முடிவு எடுங்கள். சிம்புக்கு நேர்ந்த நிலைமை இனி உங்களுக்கு நேரலாம்.  கவனமாக எழுதுங்கள்.  தமிங்கிலம் தவிர்த்திடுங்கள்.  தமிழ்க்கொலையை நிறுத்திடுங்கள்.

கருத்துகள்