கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து !


(இயைபுத் துளிப்பாக்கள்)

நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
*****
நூலாசிரியர் அவர்களின் இயற்பெயர் இராம. வேதநாயகம்.  புனைபெயர் மறைமுதல்வன்.  இந்த நூல் படித்து விட்டு, ‘மரபு முதல்வன் என்றே பட்டம் கொடுக்கலாம்.  அந்த அளவிற்கு இயைபுத் துளிப்பாவை குற்றால அருவி போல கொட்டி உள்ளார்.  கல்வி, மது, வெண்சுருட்டு என்று, பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு அனைத்து பொருளிலும் பாடி உள்ளார். 
மரபு அறிந்த மரபுக்கவிஞரின் புதுக்கவிதை இது.  பல்வேறு பட்டங்கள் பெற்று, தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்னரும், இலக்கியத்திலிருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி.  படிப்பாளி.  அறிவாளி இவர்.  ஜப்பானில் புகழ்பெற்ற வடிவங்களான ஹைக்கூ, லிமரைக்கூ இவை பற்றிய புரிதல் வந்துவிட்டால் அற்புதமாக அழகு தமிழில் வடிக்கலாம்.  லிமரைக்கூ என்பதை தமிழில் ‘இயைபுத் துளிப்பா’ என்றும் அழைக்கலாம்.  மரபு அறிந்தவரின் புதுப்பா மணக்கும்.  இப்பா இனிக்கும். 
ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தரக்கூடாது என்பார்கள்.  இவர் தலைப்பை எழுதி விட்டு அது தொடர்பாகவே சிந்தித்து வடித்துள்ளார்.  100 தலைப்புகளில், தலைப்புக்கு 5 பாடல்கள் வீதம் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.  நூலாசிரியரின் தமிழ்ப்புலமை தான் இந்த நூலின் வெற்றிக்கு காரணம்.  சொல் விளையாட்டு விளையாடி உள்ளார்.  இறைவன் என்ற தலைப்பில் தொடங்கி கைப்பேசி என்ற தலைப்பு வரை அற்புதமாக வடித்துள்ளார்.  மரபுக்கவிதை தான் இதுவும்.  மரபின் வாசனம் மதுரை மல்லிகைப்பூ போல வீசுகின்றது.  உதிர்த்த முத்துக்கள் அனைத்தும் தமிழின் சொத்துக்கள். உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சொல்வளம் நம் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு.
உலகின் முதல்மொழியான தமிழ் பற்றி பாடிய லிமரைக்கூ மிக நன்று.
தமிழ்
மொழிகளுக்கெல்லாம் ஆதி
       எல்லா மொழியும் தமிழின் பின்தான்
       எல்லாம் அறிவோம் சேதி!
மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் அவர்கள் ஆராய்ந்து அறிவித்த கருத்தை வழிமொழிந்து லிமரைக்கூ வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
மனதில் கவலை இருந்தால், வானத்தை அன்னார்ந்து பார்த்தால் கவலை காணாமல் போகும்.  நூலாசிரியர் கவிஞர் அவர்களும் வானத்தை, இயற்கையை ரசிக்கும் குணம் உடையவர்.  அதனால் தான் அவரால் இயற்கை பற்றி லிமரைக்கூ வடிக்க முடிகின்றது.
வானம்!
எல்லை இல்லா வானம்
       எழிலை எல்லாம் உள்ளில் கொண்டே
       அடக்கம் தன்னைப் பூணும்!
நிலவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.  பார்க்க, சலிக்காத வனப்பு மிக்க நிலவு பற்றி கவிதை பாடுவது என்பது கவிஞர்களுக்கு கற்கண்டு போன்றது.  இவரும் நிலவு பற்றி லிமரைக்கூ வடித்துள்ளார்.
நிலவு!
அம்புலி யாக வலம் வரும்
       கவிஞர் நெஞ்சில் கவிதை யாகி
       இலக்கியந் தன்னில் நலம் பெறும்!
இப்படி நூல் முழுவதும் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு விதமாக சிந்தித்து தமிழ் விருந்து வைத்துள்ளார்கள். வளரும் கவிஞர்கள் அனைவரும், படிக்க வேண்டிய நூல்.  புதிய சொற்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள சொற்களஞ்சியமாக நூல் உள்ளது.  பாராட்டுக்கள்.  நூலாசிரியருக்கு இது ஏழாவது நூல். ஏழாவது அறிவை பயன்படுத்தி வடித்துள்ளார்கள்.
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் அறம் பற்றியும், லிமரைக்கூ வடித்துள்ளார்.  அறவழி நடந்தால் நாட்டில் அமைதி நிலவும், அன்பு மலரும்.  அறம் தவறினால் துன்பம் சூளும் என்பது உணமை.
அறம்
அறத்தால் பெறுவதோ இன்பம்
       பொருந்தாச் செயல்கள் புரிந்து மேலும்
       அறநெறி தவறின் துன்பம்!
சிலர் பணத்தாசை காரணமாக, அறநெறி தவறி, தவறான செயல்களில் ஈடுபட்டு பணம் சேர்த்தால், பின்னால் தண்டனை என்ற துன்பம் வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
மரணம் பற்றிய அச்சம் அனைவருக்கும் உண்டு.  இறப்பினை மிக இயல்பாக அறிவியல் உண்மையோடு லிமரைக்கூவாக வடித்துள்ளார்.  மரண பயம் நீக்கி உள்ளார்.
இறப்பு !
செல்களின் இயக்கம் இன்மை
       உழைத்த செல்களின் தேய்மா னத்தால்
       உயிர்கள் அழியும் உண்மை!
இசையால் பயிர்கள் வளர்கின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன.  பயிர்களே வளரும் போது இசையால் மனிதர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமோ?  இசை பற்றிய லிமரைக்கூ மிக நன்று.
இசை!
இன்பம் நல்கும் அருங்கலை
       இசையால் மயங்கா உயிர்கள் இல்லை
       அதனால் இசையோ பெருங்கலை!
கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பார்!  முடிந்த வரை பிறருக்கு வழங்க, வாழ வேண்டும்.  பிறர் வழங்குவதை தடுக்காமல் வாழ வேண்டும் என்கிறார்.
ஈகை!
ஈவதை என்றும் விலக்காதே,
       மற்றவர் அன்பாய் பிறருக் களிப்பதை
       எந்த நாளும் தடுக்காதே!
தந்தை பெரியார் சொல்வார்.  பக்தி என்பது தனி சொத்து.  ஒழுக்கம் என்பது பொது சொத்து.  ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்தியவர் திருவள்ளுவர்.  அந்த வழியில் வடித்த லிமரைக்கூ.
ஒழுக்கம்
தனிமனித ஒழுக்கம் அவசியம்,
       அடையாளம் காட்டும் கருவியாய் இருப்பதால்
       ஒழுக்கம் தேவை அவசரம்!
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக வந்த கைப்பேசி பற்றியும் லிமரைக்கூ வடித்துள்ளார்.
நாமெலாம் இருப்பதோ தென்துருவம்
உலகில் எவ்விடம் யாராய் இருப்பினும்
எப்போதும் பேசலாம் வடதுருவம்!
பதச்சோறாக சில மட்டும் எழுது உள்ளேன்.  இது தோரண வாயில் தான்.  நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள்.  தமிழ் விருந்து காத்திருக்கின்றது. 
நூலாசிரியர் புலவர் வெண்பா வேந்தர் இராம. வேத நாயகம் அவர்கள் லிமரைக்கூ வேந்தராகவும் முத்திரை பதித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  தன் சிந்தையில் உதிர்த்த முத்துக்களை கோர்த்து முத்துமாலை வழங்கி உள்ளார்.

கருத்துகள்