வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்! கவிஞர் இரா. இரவி

வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!
கவிஞர் இரா. இரவி

*****
       இன்றைக்கு பல குடும்பங்களில் பிரச்சனைகள் வருவதற்கும், நிம்மதி இழப்பதற்கும் காரணம் புரிந்து கொள்ளாமையே!  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.
       சங்க இலக்கியத்தில் வரும் ஒரு காட்சி.  சுனை நீரி சிறிதளவே உள்ளது. ஒரு மான் குடிப்பதற்கு மட்டுமே உள்ளது.  ஆண் மான் குடிக்காமல் பெண்மானைக் குடிக்கச் சொன்னால் குடிக்காது.  எனவே ஆண் மான் நீரைக் குடிப்பது போல பாவனை செய்ய பெண் மான் குடித்தது.
       இக்காட்சி கணவன் மனைவிக்காக விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை நன்கு உணர்த்துகின்றது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.
       மணமான புதிதில் கணவன்-மனைவி நடந்து செல்லும் போது, மனைவியின் காலில் கல் தட்டியது.  உடன், சனியன் பிடித்த கல் என்று கல்லைத் திட்டி விட்டு, கல்லை எடுத்து தூக்கி எறிந்தான் கணவன்.  சில ஆண்டுகள் சென்றது, அதே கணவன்-மனைவி, மறுபடியும் கல் தட்டியது.  உடன் கணவன், சனியனே, கல் இருக்குது பார்த்து வரக்கூடாதா? என்று திட்டினான்.  ஏன் இந்த மாற்றம்.  எப்போதும் மனைவியை நேசிக்கும் உள்ளம் கணவனுக்கு இருக்க வேண்டும்.
       மனைவி உணவு பரிமாறினாள்.  உணவில் உப்பு குறைவாக இருந்தது.  உடன் கணவன் தட்டை விட்டெறிந்து கோபத்தில் கத்தினான்.  சரியான உப்புப் போட்டு சுவையாக இருந்த போது என்றுமே பாராட்டாத கணவன் உப்பு குறைவு என்ற குறை கண்டதும் கோப்படுவது ஏன்?  சமைப்பது மனைவி என்றாலும், சாப்பிட்டு விட்டு சுவையாக இருந்தால் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.  சிலர் தவிர, பலருக்கு இந்த பாராட்டும் எண்ணம் இருப்பது இல்லை. பாராட்டிப் பாருங்கள், மகிழ்ச்சியில் மனைவி இன்னும் சுவையாக சமைப்பாள், கணவனும் மனைவிக்கு சமையலில் உதவி செய்திடும் உள்ளம் வர வேண்டும்.
       இரத்தத்தில் ஊறி விட்ட ஆணாதிக்க சிந்தனையை கணவன் அறவே அகற்றி விட்டால் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்!
       குடும்ப மகிழ்ச்சி என்பது புரிந்து கொள்வதில் தான் உள்ளது.  பணத்தில் இல்லை மகிழ்ச்சி.  ஏழை கணவன் மனைவி இருவர், மிதிவண்டியில் இடுப்பில் கை வந்து மகிழ்வாக பயணம் செய்வதை பார்த்து இருக்கிறோம்.  ஆனால், பணக்கார கணவன் மனைவி விலை உயர்ந்த மகிழுந்தில் மகிழ்ச்சி இல்லாமல் இருவரும் இரண்டு ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்வதையும் பார்த்து இருக்கிறோம்.
       மனைவிக்கும் மனசு உண்டு;  கருத்து உண்டு; காது கொடுத்து கேட்க வேண்டும்; மதிக்க வேண்டும்; கலந்து பேசி முடிவெடுத்தால் முடிவில் நன்மை இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் புரிதல் என்பது மிக மிக அவசியம்.
       முன்பு இலஞ்சம் வாங்காதவரை நேர்மையானவர், நல்லவர் என்றனர்.  இப்போது ரொம்ப நல்லவர், வாங்கினால்  முடித்துக் கொடுத்து விடுவார் என்கின்றனர்.  இந்த மனநிலை மக்களிடம் மாற வேண்டும்.  இலஞ்சம் ஒழிக்க முன்வர வேண்டும்.
       மனைவியும், கணவனும் வருமானம் அறிந்து அதற்கு மீறிய எதையும் கேட்கக் கூடாது.  மனைவி கேட்பதால் இலஞ்சம் வாங்கினேன் என்று சொல்லும் கணவனும் உண்டு, இந்த நிலை மாற வேண்டும்.  அறவழியில் வரும் வருமானமே இன்பம் தரும்.  அறம் தவறி வரும் வருமானம் தற்காலிக இன்பம் தந்தாலும், இறுதியில் பெருந்துன்பம் தரும் என்பதை உணர வேண்டும்.
       கணவன் வட்டிக்கு கடன் வாங்கி பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலை வாங்கித் தருவதை விட கடன் வாங்காமல் சொந்த பணத்தில் நூறு ரூபாய்க்கு கைத்தறிச் சேலை வாங்கித் தந்தாலும் மகிழ்வோடு ஏற்கும் மனம் மனைவிக்கு வேண்டும்.  இது தான் புரிதல்.  கணவனும் நேர்மையான வழியில் உழைத்துப் பணம் ஈட்ட வேண்டும்.  உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதும் குற்றம்.  தந்தை பெரியார் சொல்வார் “ஓய்வும், சோர்வும் தற்கொலைக்கு சமம் என்று.  குடும்பத்திற்காக உழைத்து பணம் ஈட்ட வேண்டியது குடும்பத்தலைவனின் தலையாய கடமை ஆகும்.
       ராக்பெல்லர் என்ற பெரிய பணக்காரர், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த இளைஞன் கேட்டான், “உங்களிடம் நிறைய பணம் உள்ளது, வயதாகி விட்டது, பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே, இந்த வயதிலும் ஏன் பயணம் செய்து சம்பாதித்து சிரமப்படுகிறீர்கள் என்றான்.  ராக்பெல்லர் சொன்னார் விமானம் உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. எஞ்சினை இயங்குவதை நிறுத்தி விடலாமா? என்றார்.  அதற்கு இளைஞன், விமானம் விபத்துக்குள்ளாகி விடுமே! என்றான். ராக்பெல்லர் சொன்னார், “மனிதனும் அப்படித்தான், மூச்சு இருக்கும் வரை, முயற்சி இருக்க வேண்டும்  உழைப்பும் இருக்க வேண்டும் என்றார்.
       வேட்டைக்கு செல்லும் போது மன்னர் மீது கல் வந்து விழுந்தது. கல் எறிந்தவனை பிடித்துக் கொண்டு வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.  ஏன்? கல் எறிந்தாய் என்று கேட்ட போது, பசியோடு இருந்தேன், மரத்தில் கல் எறிந்தேன், பழம் விழும், உணவாகுமே என்று.  கல் தவறி உங்கள் மீது பட்டுவிட்டது என்றான்.  மன்னர் சொன்னார், இவனுக்கு 100 பொற்காசுகள் கொடுங்கள் என்றார்.  மந்திரி வியப்பாகக் கேட்டார்.  தண்டனை தராமல் பரிசு தருகிறீர்களே, மன்னர் சொன்னார், கல் எறிந்தால் மரம் கூட பழம் தரும் போது, மன்னன் மீது கல் எறிந்தால் நான் தண்டனை தரலாமா? மரத்தை விட மன்னன் மோசம் என்றாகி விடும்.  அதனால் தான் பரிசு தரச் சொன்னேன் என்றார். இது போன்று புரிந்து கொள்ளும் மனநிலை வேண்டும்.
       நிம்மதி என்பது வெளியில் இல்லை, நம் மனதில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.
       எழுத்தாளர் மெர்வின் அவர்கள், சந்தனக்கட்டை வீரப்பன் போல, பெரிய மீசை வைத்து இருப்பார்.  அதற்கு அவரே மதுரையில் நடந்த விழாவில் சொன்ன காரணம்.  எனக்கு தலை வழுக்கையாக உள்ளது, எல்லோரும் என்னை அடையாளப்படுத்தும் போது சொட்டைத் தலை, வழுக்கைத் தலை என்றனர்.  மீசையை பெரிதாக வளர்த்தேன்.  மீசைக்காரர் என்றனர்.  இதில் வாழ்வியல் தத்துவமும் உள்ளது.  “இழந்த ஒன்றுக்காக வருந்துவதை விட, இருப்பதை செம்மைப்படுத்துவது மேல், என்றார்.  நம்மில் பலர் இழந்ததற்காக வருந்தி, கவலையில் காலம் தாழ்த்தி வருகிறோம்.  அதனை விடுத்து, இருப்பதற்குள் மகிழ்ச்சி அடையும் உள்ளம் வேண்டும்.
       ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர்.  பேராசை பெருநஷ்டம் என்று பொன்மொழியும் உண்டு.  ஆசையின் காரணமாக பலர் நிம்மதி இழந்து, தவித்து வருகின்றனர்.  ஆசையையும், தேவைகளையும் குறைத்து புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும், வாழ்க்கையை இஷ்டப்பட்டு வாழ வேண்டும், கஷ்டப்பட்டு வாழக்கூடாது.
       காலணி இல்லை என்று வருந்துபவர், கால்களே இல்லாதவரைப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டும்.  காலணி பெற உழைக்க வேண்டும், ஊதியம் ஈட்ட வேண்டும், உழைப்பு என்பது மிக உன்னதமானது.  அதனால் தான் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்றனர்.  இன்று கடின உழைப்பை விட விவேகமான, வித்தியாசமான உழைப்பு வேண்டும்.
       வட்டிக்கு கடன் வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்வது இன்பம் என்று சிலர் தவறாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர்.  “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பார்கள்.  கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கூட மாற்றி எழுதி விடலாம்.  கடன் கொடுத்தவர்களும், வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருப்பவர்களும் உண்டு.  கடன் வாங்குவது அவமானம் என்று, அன்று கருதினார்கள் பெரியவர்கள்.  ஆனால் இன்று ‘கடன் மேளா’, கடன் திருவிழா என்று அறிவிப்பு செய்து கடன் வழங்கி வருகின்றனர்.  மக்களும் நுகர்பொருள் மோகத்தின் காரணமாக கடனை பெருமளவில் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.  முடிந்தவரை கடன் வாங்காமல் உழைத்து ஈட்டிய பணத்தில் வாழும் வாழ்க்கையே சிறப்பு என்பதை உணர வேண்டும்.
       இந்தியாவே உலக வங்கியில் கடன் வாங்கும் போது, நான் கடன் வாங்கக் கூடாதா? மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்றார் நண்பர்.  கடன் வாங்கி விட்டு கவலையில் வாடுவதை விட கடன் வாங்காமல் நிம்மதியாக வாழலாம் என்றேன்.
       கோபம் அதிகம் கொள்ளும் மகனிடம் 50 ஆணிகள் தந்து கோபம் வரும் போதெல்லாம், வீட்டின் சுற்றுச்சுவற்றில் அடி என்றார்.  அவன் ஒவ்வொன்றாக அடித்து 50 ஆணிகளும் தீர்ந்து விட்டது.  பின் கோபம் வரும் போது ஒவ்வொரு ஆணியை பிடுங்கு (எடு) என்றார்.  50 ஆணிகளையும் பிடுங்கி விட்டான்.  இப்போது அந்தச் சுவற்றைப் பார் என்றார்.  பார்த்தான், ஆணி அடித்த இடங்கள் சிதைந்து வடுக்களாக இருந்தன.  நீ கோபத்தில் சொல்லும் சொற்கள் அடுத்தவர் மனத்தை இப்படித் தான் காயப்படுத்தி வடுக்களாக்கும்.  எனவே இனிமேல் கோபம் கொள்ளாதே என்று மகனுக்கு அறிவுரை வழங்கினார்.  அவனும் புரிந்து கொண்டு கோபத்தைக் கைவிட்டான்.
       கணவன் மனைவி இருவரும் இக்கதையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  கோபத்தில் சொல்லும் சொற்கள் மற்றவரைக் காயப்படுத்தும் என்பதை உணர்ந்து, வன்சொல் பயன்படுத்தாமல் புரிந்து கொண்டு இன்சொல் பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். சண்டை சச்சரவு வராது.
       உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் அன்றே பாடினார்.
       இனிய உளவாக இன்னாத கூறல்
       கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.       
              குறள் எண் 100
       இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவர் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனிகள் இருக்கும் போது காய்களைத் தின்பதைப் போன்றது.  காயை விட கனி தானே சிறப்பு.  ஒப்பற்ற இந்தத் திருக்குறளை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.  இந்தத் திருக்குறள் எண் 100.  சண்டை வந்தால் காவல் துறையை அழைக்க உதவும் தொலைபேசி எண் 100.  அது போல நமக்கு கோபம் வந்தால் நினைத்துப் பார்க்க வேண்டிய திருக்குறள் எண் 100.  இந்தத் திருக்குறளை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து விட்டு, இப்படி நல்ல திருக்குறள் உள்ள நூலை அதன் மூல மொழியிலேயே படிக்க வேண்டும் என்பதற்காக, நான் படிக்க வந்தேன் என்றார் செக்கோசுலேவியாவில் இருந்து வந்த ஓர் அறிஞர்.  திருக்குறள் அருமை, பெருமை அயலவர் அறிந்து உள்ளனர்.  நம்மவர் தான் அறியவும், கடைபிடிக்கவும் மறந்து வருகிறோம்.
       தினமும் ஒரு பொன்முட்டையிட்ட வாத்தை அறுத்தால் நிறைய முட்டை கிடைக்கும் என்று   பேராசைப்பட்டு அறுத்து, ஏமாந்த கதை எல்லோரும் படித்த கதை.  பேராசை பெருநஷ்டம் என்ற பொன்மொழி உணர்த்தும் கதை.  இக்கதை சொல்லும் நெறியைப் புரிந்து வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் வாழ்க்கை இனிக்கும்.
       விட்டுக்கொடுத்து வாழ்தல், புரிந்து கொண்டு வாழ்தல் என்பதற்கு தமிழக முதல்வர் சொன்ன கதை என் நினைவிற்கு வந்தது.
       கணவன், வேலைக்கு வெளியில் சென்றுள்ளான்.  மனைவி, இருந்த மாவில் 12 இட்லிகள் வேக வைத்து, வைத்திருந்தாள்.  கணவன், நண்பனுடன் இல்லம் வந்து சாப்பிட வை என்றான்.  இருவருக்கும் தலா 4 இட்லிகள் வைத்து விட்டாள்.  மீதமுள்ள 4 இட்லி நமக்கு இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  மனைவியின் முகம் பார்த்து புரிந்து கொண்டான் கணவன்.  இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுங்கள் என்று வைக்க வந்தாள்.  கணவன் சொன்னான், 4-க்கு மேல் யார் சாப்பிடுவார்? எனக்கு போதும் என்றான்.  அண்ணன் நீங்க சாப்பிடுங்க என்று கணவனின் நண்பனுக்கு வைக்கப் போனாள். நான் எப்போதும் 3 இட்லி தான் சாப்பிடுவேன்.  சுவையாக இருந்ததால் 4 இட்லி சாப்பிட்டு விடுவேன்.  இது போதும் எனக்கு என்றான், நண்பன்.
       இந்த இட்லி கதை எனக்கு சங்க இலக்கிய மான் காட்சியை  நினைவூட்டியது.  கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.  நானே பெரியவன் என்ற அகந்தை விடுத்து அன்பு செலுத்தி வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !












கருத்துகள்