இலக்கிய இணையரின் இல்ல நூலகம் ! முனைவர் அ.கோவிந்தராஜூ

.http://iniangovindaraju.blogspot.in/2015/11/blog-post_30.html

இலக்கிய இணையரின் இல்ல நூலகம்! 

முனைவர் அ.கோவிந்தராஜூ


இலக்கிய இணையரின் இல்ல நூலகம்

    இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில் மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள் அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.

   தொடர்ந்து அமெரிக்கப் பயண அனுபவங்களை அன்புள்ள அமெரிக்கா என்னும் தலைப்பில் நூலாக்கும் பணியில் ஈடுபட்டேன். இதன் காரணமாக ஒவ்வொரு ஞாயிறன்றும் மடிக்கணினியும் கையுமாகக் கிடப்பேன். ஒருவழியாக தட்டச்சு செய்து முடித்து, நூல் வடிவம் கொடுக்கும் கணினி வல்லுநர் மதுரை இராம்குமாருக்கு அனுப்பியபின் தான் பெருமூச்சு விட்டேன்.

    அவ்வப்போது எனது தமிழாசான் மதுரை வாழ் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் தொலைபேசி மூலம் நெம்புகோல் போட்டதால் இந்த நூல்பணி உரிய காலத்தில் நிறைவடைந்தது. தானும் உரிய நேரத்தில் பணிமுடிப்பதோடு, தன்னைச் சார்ந்தவர்களும் அவ்வாறே செய்து முடிக்க வேண்டும் என்னும் கண்டிப்புடையவர் அப் பேராசிரியர்.

  இராம்குமாரும் சிறந்தமுறையில் நூல்வடிவம் கொடுத்து, அச்சுக்கு அனுப்புமுன் நேரில் வந்து பார்த்து ஒப்புதல் தருமாறு என்னை மதுரைக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார். நேற்று முன் தினம் மதுரை சென்று பேராசிரியரின் பேருதவியுடன் அப் பெரும்பணியை முடித்துவிட்டு அவரருடைய இல்லம் நோக்கிச் சென்றோம். இந்த நூலை சென்னை வானதி பதிப்பகம் அடுத்த மாதம் வெளியிடுகிறது.

    செல்லும் வழியில் திரு இராம பெரியகருப்பன் இல்லத்திற்குச் சென்றோம். இவர் யார் என வினவுகிறீர்களா?? வாழும் மு.வ எனச் சொல்லத்தக்க பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள்தான். தன் எண்பத்து எட்டாவது அகவையில் அடி எடுத்து வைக்கும் அகவை முதிர்ந்த தமிழறிஞர். முதுகலையில் நான் தமிழ்ப் பயின்ற போது எனக்கு ஒப்பிலக்கியம் நடத்திய ஒப்பற்றப் பேராசிரியர் இவர். அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினேன்; வாயார  வாழ்த்தினார். திருவருளைவிட குருவருள் சிறப்புடையதாகும்.

     இரு பெரும் பேராசிரியர்களும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இணைந்து பணியாற்றி இனிதே பணிநிறைவு பெற்றவர்கள். இவர்களுடைய மாணவன் நான் என்பதில் ஒருவிதமான செருக்கு என்னிடத்தில் எப்போதும் உண்டு.

   அறிவகம் எனப் பெயரமைந்த பேராசிரியர் மோகன் அவர்களுடைய இல்லம் அடைந்ததும் பேராசிரியை நிர்மலா மோகன் அவர்கள் உற்சாகத்துடன் என்னை வரவேற்று அளவளாவினார். அவர் தந்த சுவைமிகு தேநீரை அருந்தியபின் இலக்கிய இணையரின் இல்ல நூலகத்தைச் சுற்றிப் பார்த்தேன்.

  “நூல்களெல்லாம் ஒழுங்கின்றிக் கிடக்கும்” என்றார் பேராசிரியரின் துணைவியார். ஒளவையாரின் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. “தொண்டைமானே! உன் படைக் கருவிகள் நெய்தடவி அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானின் படைக்கருவிகள் கூர் உடைந்து கிடக்கின்றன” என்று அதியன் போர்மேல் செல்வதில் பெருவிருப்பு உடையவன் என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் அவனை இகழ்வதுபோல புகழ்ந்து பேசுவார். சிலர் நூல்களைச் சேகரித்து அடுக்கில் அழகுற அடுக்கி வைத்திருப்பர். அவற்றை வாசித்திருக்கமாட்டார்கள். இத் தகைய தொண்டைமான் நூலகத்தால் ஒரு பயனும் இல்லை.

    பேராசிரியர் மோகனின் இல்ல நூலகம் அதியன் நூலகமாகும். அடிக்கடி எடுத்துப் படிப்பதால் நூல்கள் மேசை மீது கலைந்து கிடக்கின்றன. பரண்மீது காணப்படும் நூல்கள் சாய்ந்து கிடக்கின்றன.




    மூன்று அறைகளில் பன்னிரண்டாயிரம் நூல்களைத் தொகுத்து வைத்துள்ளார்கள். நூறாண்டு பழமையுடைய நூல்களோடு, அண்மையில் வெளியான கனவெல்லாம் கலாம் போன்ற பல நூல்களும் ஒருங்கே காணப்படுகின்றன. இலக்கிய இணையர் இடைவிடாது படிப்பவர்கள். அதனால்தான் ஆண்டுக்குப் பத்து நூல்கள் என எழுதிக் குவிக்கிறார்கள்.

   விடை பெற்றபோது, பேராசிரியர் அவர்கள்  தன்னுடைய கனவெல்லாம் கலாம் என்னும் நூலின் முகப்புப் பக்கத்தில் வாழ்த்துக் கையொப்பம் இட்டு எனக்களித்தார்.

   இந்த நாள் இனிய நாள் என்னும் உணர்வோடு எனது மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்து கரூரை நோக்கிச் செலுத்தினேன்.

கருத்துகள்

  1. மகிழ்ச்சி. மூவறை நுாலகத்தைப் பார்க்க ஆசை
    முனைவர் க.தமிழமல்லன்

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி. மூவறை நுாலகத்தைப் பார்க்க ஆசை
    முனைவர் க.தமிழமல்லன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக