மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


 மண்ணும் மக்களும் அழிவை நோக்கி !

நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை.

thirugeetha@gmail.com

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

புதிய வாழ்வியல் பதிப்பகம், 17, 1-வது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன், சென்னை-600 086. பேச : 044 42072076, மின்னஞ்சல் : puthiyavazhviyal@gmail.com பக்கங்கள் : 80, விலை : ரூ. 70.
*****


நூல்ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் மகாகவி பாரதியார் போலவே நூலாசிரியர் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத நல்ல மனிதர்.  இன்றைய  நவீன காலத்தில் பலரும் பணத்தாசை பிடித்து அலைகின்றனர்.  ஆனால் நூலாசிரியர் சட்டம் பயின்றவர். அவர் நினைத்திருந்தால் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராகி பணம் ஈட்டி இருக்கலாம்.  பிரபல இதழ்களில் நல்ல சம்பளம் பெற்று நடிகைகளைப் பேட்டி எடுத்து இருக்கலாம்.  ஆனால் அவற்றை எல்லாம் விட்டு விட்டு பணம் முக்கியமல்ல; சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஏக்கத்தில் எழுதி வருபவரின் உண்மை ஆதங்கப் பதிவு நூல்.

       இயற்கை சினம் கொள்கின்றது.  பூகம்பம், நில நடுக்கம், புயல், எரிமலை என பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.  இவற்றை உணர்ந்து மனிதர்கள் இயற்கையை அளவின்றி சிதைப்பதை நிறுத்திட முன்வர வேண்டும்.  சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல நூல்.  நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள், கல்கி வார இதழில் எழுதி வந்த விழிப்புணர்வு கட்டுரையைத்  தொகுத்து நூலாக்கி உள்ளார்.  பத்து முத்தான கட்டுரைகள் உள்ளன.  திரு. ஜெ.ஜெயகிருஷ்ணன், திரு. ஆர். வெங்கடேஷ் ஆகியோரின் அணிந்துரை நன்று.

       காணாமல் போன கண்மாய்கள் பற்றி புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தந்தது.  “தமிழ்நாட்டில் இருந்த 39202 கண்மாய்களில் 10 சதவீதம் அழிந்து போய் விட்டன.  சர்வதேச நீர் மேலாண்மை அழிந்து விட்டன.  சுமார் 4000 கண்மாய்கள் அழிந்து விட்டன எனக் கணக்கு கொள்ளலாம்.  ஆனால் பத்து சதவீதமல்ல, முப்பது சதவீதக் கண்மாய்கள் அழிந்திருக்கும்.  முதலில் வரத்துக் கால்வாய்களும் அதன் தொடர்ச்சியான கண்மாய்களும் காணாமல் போய் விட்டன என்கிறார் நீரியல் வல்லுநர் கனகவேல்.

       உண்மை தான், மதுரைக்கு உயர்நீதிமன்றம் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம், நிறைவேற்றினார்கள், வந்தது எங்கு தெரியுமா? உலகனேரி என்ற ஏரியின் மீது கட்டி உள்ளனர். மதுரையில் நம் கண்முன் நடந்த அரசு ஆக்கிரமிப்பு.  இதுபோன்று  அரசு  மற்றும் தனியார் பல ஆக்கிரமிப்புகள் நாடு முழுவதும் நடந்து உள்ளது.  சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எழுதியதோடு நின்று விடாமல் அதற்கான தீர்வுகளையும் எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.

       இந்நூலினை படிக்கும் வாசகர்களுக்கு இயற்கை வளம் காக்கப்பட வேண்டிய அவசர, அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ள நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

             மதுரையின் பெருமைகள் பல.  அவற்றில் ஒன்று பெரிய தெப்பக்குளம்.  பல தெப்பக்குளங்கள் உள்ளன.  ஆனால் அவை சரியான பராமரிப்பின்றி உள்ளன.  இந்த நூலில் தெப்பக்குளங்களின் புகைப்படங்களுடன் தூர வார வேண்டிய அவசியத்தை நன்கு விளக்கி உள்ளார்.

       மக்களின் அடிப்படைத் தேவை குடிநீர்.  அதையும் விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு உலகமயம் தள்ளிவிட்டது. விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நீரும் உடல் நலத்திற்குக் கேடு என்கின்றனர் .

“குடிநீர் நம் உயிர்நீர், தடையின்றி கிடைத்திடச் செய்வது நம் கையில் தான். செய்வோமா? செய்வோமா? என்று கேள்வி கேட்டு முடித்துள்ளார் கட்டுரையை.  முத்தாய்ப்பு.

       எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலான ‘மணல் கொள்ளை பற்றி துணிவாக கட்டுரை வடித்துள்ளார்.  கொள்ளையர்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

       காடுகளை அழித்து நாடுகள் ஆக்கும் பணி வெகுவேகமாக நடைபெற்று வருகின்றது.  காடுகளின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றது.  இதனால் 130 வகையான உயிரினங்களை பூமி இழந்து கொண்டிருக்கிறது. 

நூலாசிரியர் எந்த ஒரு கட்டுரையையும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து மேம்போக்காக எழுதுபவர் அல்ல.  ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, பார்த்து, கேட்டு, அறிந்து, அறிந்து பல புள்ளி விபரங்களுடன் எழுதும் பழக்கம் உள்ளவர்.  அதனால் பல தகவல்களின் சுரங்கமாக நூல் மாணவ, மாணவியருக்கு பொது அறிவு தொடர்பான வினாக்களுக்கு விடைகள் தரும் விதமாக நூல் உள்ளது.  பாராட்டுகள்.

  “காடுகளை காப்பாற்ற வேண்டியது நமது கடமை; இல்லையேல் மழையைத் தொலைத்து விடுவோம். மழை தொலைத்தால் உயிர் தொலையும்.

       ஒவ்வொரு கட்டுரையும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என முத்தாய்ப்பாக வடித்து உள்ளார்.  ஒரு கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது.

       மகாகவி பாரதியார், செல்லம்மாள் கடனாக வாங்கி வந்த அரிசியையும், சிட்டுக்குருவிக்குத் தந்து பசியாற்றி மகிழ்ந்த பறவை நேசன்.  அதனை வழிமொழிவது போல, ‘பறவைகளும் நமது உறவுகளே கட்டுரையை வடித்து உள்ளார்.

  “பறவைகளைக் காத்தால் தான் சுற்றுச்சூழலைக் காக்க முடியும், பறவைகள் நமது உறவுகள் என்பதை எண்ணி செயலில் இற்ங்குவோம். 


இக்கட்டுரை படித்த போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வாழும் ஆயிரக்கணக்கான புறாக்கள், இனிய நண்பர் பாபு, தினமும் தானியங்கள் போடுவதால் தான் உயிர் வாழ்கின்றன.  முகநூலிலும் பதிவு செய்துள்ளேன்.

       விவசாயி, “மனம் இஷ்டப்பட்டு விரும்பி விவசாயம் செய்யும் நிலை வர வேண்டும், விவசாயத்தில் நேரும் துன்பம் காரணமாக மனம் வெறுத்து நடக்கும் தற்கொலைகள் நிற்க வேண்டும்.  விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக்கும் மடமை ஒழிய வேண்டும். 

காங்கிரீட் காடுகளாகும் வயல்வெளி கட்டுரை விழிப்புணர்வு விதைத்து உள்ளதுவெப்பமாகும் பூமி கட்டுரை நன்று.  நிலத்தை மலடாக்கும் சீமைக்கருவேலம் கட்டுரை, ‘மரத்தை வெட்டுங்க மனிதத்தேனீ எழுதிய நூலையும், கட்டுரையையும் நினைவூட்டியது. வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் நிலைக்க ஆலோசனை வழங்கி உள்ள நல்ல நூல்.  பாராட்டுக்கள்.  

நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் மனித சமுதாயத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக விழிப்புணர்வை விதைக்கும் நூல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் .பாராட்டுக்கள் .


 அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .புதிய வாழ்வியல் பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .உரத்த சிந்தனையுடன் எழுதி வரும் இனிய நண்பர் ப .திருமலை அவர்களின் நூலை தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன் .



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்