ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

ஹைக்கூ பூக்கள் !

தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நம்மொழி பதிப்பகம், 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011. பேச : 98409 12010 ; மின் அஞ்சல் : kaviooviya@gmail.com
பக்கம் : 128, விலை : ரூ. 120/-
*****
நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர். பல வருடங்களாக வாழ்விடம் சென்னை என்ற போதிலும், பிறந்த ஊரான மயிலாடுதுறையை பெயரோடு இணைத்துக் கொண்டவர், இனிய நண்பர் மயிலாடுதுதுறை இளையபாரதி. இளையபாரதி என்பது பொருத்தமான, புனைப்பெயர். இலக்கிய உல்கில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி, உழைப்பாளி. தமிழகம், புதுவை உள்பட பரந்து விரிந்துள்ள ஹைக்கூ கவிஞர்களிடமிருந்து ஹைக்கூ கவிதைகளைப் பெற்று தொகுத்து அழகிய நூலாக வடித்து உள்ளார்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள், தரமான தாள்கள் என யாவும் மிக நேர்த்தி. நம்மொழி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். நூலாசிரியரின் சொந்தப் பதிப்பு. இந்த நூலை ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியரான பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், பொன்மனச் செம்மல் கார்முகிலோன் அவர்கள் சென்னையிலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களுக்கு புரவலராக இருந்து பரிசுகள் நல்கி வரும் பொன்மனம் படைத்தவர் இருவரின் அணிந்துரை மிக நன்று.
படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கு (வாசகருக்கு) உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ. படைப்பாளி உணர்ந்து படைத்ததைத் தாண்டி கூடுதலாக படிப்பாளி உணர்ந்து கொள்ளும் உணர்வு ஹைக்கூ. படைத்தவருக்கு மேல் சென்று சிந்திக்க வைக்கும். ஒரு பொருள் மட்டுமல்ல, சிந்தித்தால் பல பொருள் புரிய வைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. ஹைக்கூ கவிதை எழுதுவது கம்ப சூத்திரம் அன்று. இந்த நூல் படித்து முடித்தவுடன், படித்த வாசகரும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதியிட்டுக் கூற முடியும். ஹைக்கூ பற்றிய புரிதலை உண்டாக்கும் நூல். மூன்று வரி முத்தாய்ப்பான ஹைக்கூ ரசித்துப் படித்தால் ஹைக்கூ படிப்பாளியாகலாம் என்பது உண்மை.
இந்த நூலில் நான் உள்பட, மொத்தம் 58 கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதும் பதச்சோறாக ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ வீதம் மேற்கோள் காட்டி உள்ளேன்.
கவிஞர்புதுவைத் தமிழ்நெஞ்சன்
வளர்க்கிறோம்
தொட்டிச் செடி
வாடகை வீடு!

கவிச்சுடர் கார்முகிலோன்
அரிதாரம் இல்லை
அனுதினமும் நடிப்பு
அரசியல்வாதி!
கவிஞர் கு.அ. தமிழ்மொழி
அழைப்பிதழில்
அன்பளிப்பு தவிர்க்கவும்
சுமை உந்தில் சீர்வரிசை.

கவிஞர் சாந்தா வரதராசன்
தமிழ்ப்பானையில்
சுவைப் பத்நீர்
திருக்குறள்.
கவிஞர் ஆரிசன்
கரும்பலகை
நெற்றிக்கண் திறக்கிறது
அறிவு!

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
படித்து முடித்த பின்
பயமுறுத்துகிறது
கல்விக்கடன்!
கவிஞர் எஸ். சத்யவீணா
கிள்ளுவதற்காக
அழுவதில்லை
பூக்கள்!

கவிஞர் ரேவதி இளையபாரதி
மனவலிகள்
மாயமாய் போனது
மழலைச் சிரிப்பு
கவிஞர் அய்யாலு ச. புகழேந்தி
அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!

கவிஞர் ஆர். சியாமளா ரகுநாதன்
சிதைந்து போகின்றது
வாழ்க்கை
புரிதலில்லா மனங்கள்!
கவிஞர் புதுவை சுமதி
மனதில் ஓசை
இதழில் மௌனம்
நினைவுகள்!

கவிகர் ப. கண்ணன் சேகர்
விதைக்காமல்
விருட்சமானது
வதந்தி!
கவிஞர் கி. சந்திரசேகரன்
ஏழுசீர் கவிதை
ஆளுது உலகை
திருக்குறள்!

கவிஞர் முனைவர் மரியதெரசா
நீயா... நானா.. அழகு
பூக்களில் அமர்ந்து கேட்கும்
வண்ணத்துப் பூச்சிகள்!
கவிஞர் தி. கவிமனோ
திட்டினால் அபராதம்
அடித்தால் ஆயுள் தண்டனை
பயத்தோடு ஆசிரியர்

கவிஞர் கொள்ளிடம் காமராஜ்
என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!
கவிஞர் வீ. உதயக்குமாரன்
சுதந்திரமாய்
நடத்த முடிவதில்லை
சுதந்திர தின விழா!

கவிஞர் தமிழ்மதி
அலட்சியப் போக்கு
கேட்கிறது உயிர்பலி
ஆழ்துளைக் கிணறு!
கவிஞர் மியூரியல் உஷா
வாடிய பயிரைக் கண்டும்
வாடாத மனங்கள்
நதிநீர் பங்கீடு!

கவிஞர் மன்னை பாசந்தி
புறம் கூறாதே
புண்படுத்தாதே
புற்றுநோயே மேல்!
கவிஞர் திருச்சிற்றம்பலம் சுரேஷ்
தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!

கவிஞர் ஸ்ரீமதி மணவாளன்
முயற்சி செய்
வசப்படும்
வானமும் கூட!
கவிஞர் சொ. சாந்தி
பண்டிகை நாட்களில்
நவீன கொள்ளைக்காரர்கள்
அலைபேசி நிறுவனங்கள்!

கவியருவி கோவை கோகுலன்
அறியாமையின் முதிர்ச்சி
விதவிதமாய்ப் படையல்கள்
சாப்பிடாத சாமிகளுக்கு!
கவிஞர் அருணாச்சல சிவா
மௌன சாளரம்
உள்ளே வந்து உரையாடுகிறது
வண்ணத்துப் பூச்சி!

கவிஞர் மு. ஜெயலெட்சுமி
குளிரூட்டிய அறை
சுடுகிறது
மின் கட்டணம்!
கவிஞர் இரா. இரவி
பெயர் மாற்றி
இடம் மாற்றிப் பயனில்லை
சிந்தை மாற்று சிறப்பாய்!

கவிஞர் க. மாரிமுத்து
அணைக்க முயன்றும்
அடர்ந்து பரவுகிறது
சாதித் தீ!
கவிஞர் ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
உழைத்த உடலில்
பூக்கிறது
வியர்வைப் பூக்கள்!

கவிஞர் சிவாஜிநஞ்சன்
மதிக்கப்பழகு
உழவனை
உலகம் உயரும்!
கவிஞர் த. கருணைச்சாமி பி.இ.
நம்பிக்கை வை
உன் மேல்
ஒழியும் மூட நம்பிக்கை!

கவிஞர் புதுயுகா!
பிள்ளை முதுகில்
புத்தகப் பை
மனம் கனத்தது தாய்க்கு
கவிஞர் சு. பாரதி பாக்கியம்
ஒற்றைப்புள்ளியில்
ஐந்தாண்டு வறுமை
தேர்தல்!

கவிஞர் சி. அருள் ஜோசப்ராஜ்
சேர்த்தன தேனீக்கள்
சுவைத்தான் மனிதன்
உழைப்பு சுரண்டல்?
கவிஞர் சு. கேசவன்
வரும்புயல்
குலை நடுக்கம்
வாழை விவசாயி!

கவிஞர் தகடூர் செவ்வியன்
பேருந்து பயணம்
யாரோ ஒருத்தி கதறுகிறாள்
படிக்கட்டில் மகன்!
கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன்
இரவு நேர பூஜை
சிக்கினார்
சபல சாமியார்!

கவிஞர் பே. ராஜேந்திரன்
அன்பு மனங்கள்
அழகாய் சங்கமம்
காதல்!
கவிஞர் உமையவன்
கனத்த மழை
நிரம்பும் காலிப் பாத்திரம்
சிதறும் இன்னிசை!

கவிஞர் வி. சிவாஜி
பிச்சைப் பாத்திரம்
நிரம்பி வழிகிறது
பெருமூச்சு!
கவிஞர் கா.நா. கல்யாணசுந்தரம்
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்
தேவை – அங்குசக் கவிஞர்கள்

கவிஞர் பொருநை பாலு
எடுக்கும் முயற்சியை
தடுக்கும் ஆயுதம்
சகுனம்!
கவிஞர் சு. நவநீதன்
மனம் பார்த்து அன்று
பணம் பார்த்து இன்று
காதல்.

கவிஞர் இராம கம்பர்
தள்ளாட வைத்தது
தமிழ்நாட்டை
தண்ணி!
கவிஞர் டி.என். இமாஜன்
செத்தும் கொடுக்கின்றனர்
வள்ளல்கள் சிலர்
உறுப்பு தானம்!

கவிஞர் தேவனூர் ஆ.ச. செல்வராஜூ
விண்ணை முட்டுகிறது
ஏழையைத் தவிக்க வைத்து
விலைவாசி!
கவிஞர் இளந்தென்றல்
நல்லது கெட்டது
நாளும் ஒரு காரணம்
மது அருந்த!

கவிஞர் ச. கிறிஸ்து ஞானவள்ளுவன்
அதிகார வர்க்கம்
எடுக்கும் நாகரிகப் பிச்சை
லஞ்சம்!
கவிஞர் நீலமலை ஜே.பி.
தோல்விக்கும்
முத்து
தொடர்முயற்சி!

கவிஞர் வெ. சென்னப்பன்
இரையூட்டும் காகம்
ஏக்கமுடன் பார்க்கிறது
காப்பகக் குழந்தை!
கவிஞர் சுப. சந்திரசேகரன்
முள்வேலிக்குள்
குருதி சிந்துகின்றன
ஈழ ரோஜாக்கள்!

கவிஞர் மு. குமரன்
கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம்
அட்சயப் பாத்திரம்
கவிஞர் ஈழபாரதி
மைல்கல் சாமியானது
மகிழ்ச்சியில்
பூசாரி!

கவிஞர் தாயானி தாயுமானவன்
நினைவுகளை
உடைத்தபடி அம்மா
கல் குவாரி!
கவிஞர் வ. விஜயலெட்சுமி
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி!

கவிஞர் கு. இராம்குமார்
ஆயிரம் காலத்துப் பயிர்
அவசரமாய நடப்பட்டது
குழந்தை திருமணம்
கவிஞர் ம. பாலன்
திறக்கப்பட்டது அன்று
மூடப்படுகிறது இன்று
அரசுப் பள்ளிகள்!

கவிஞர் பூ. இராஜேஸ்குமார்
விலையில்லாப் பொருட்கள்
விலை போயினர்
மக்கள்!
பல்வேறு கோணங்களில் சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டி படிக்கும் வாசகர்கள் மனதில் மின்னலை உருவாக்கிய கவிஞர்கள் அனைவருக்கும் , நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதிக்கும் பாராட்டுக்கள்.


கருத்துகள்