கனவெல்லாம் கலாம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கனவெல்லாம் கலாம் !
நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பேச : 044 24342810 ;
மின் அஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 552, விலை : ரூ. 300/-
*****
      அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்து இருந்தார்கள். காந்தி தேசத்தில் இருந்து வருகிறீர்களா? என்பார்கள்.  இன்று இந்தியாவை அறியாதவ்ர்களும் மாமனிதர் அப்துல் கலாமை அறிந்து இருக்கிறார்கள். கலாம் தேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள்.  இந்தியாவின் அடையாளமாக, தமிழரின் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த நூல்.

      நூலாசிரியர் தமிழத்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றி உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்து, வகுத்து, பகுத்து வரலாற்று ஆவணமாக வழங்கி உள்ளார்.  அப்துல் கலாம் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல். “கனவெல்லாம் கலாம் நூல் படித்தால் வாசகர்கள் கனவெல்லாம் கலாம் வருவார்.

      பதிப்புலகில் தனி முத்திரை பதித்து வரும் வானதி பதிப்பகம் நூலினை மிகத்தரமாக அச்சிட்டு உள்ளனர்.  அட்டைப்பட வடிவமைப்பும் உள் அச்சு, காகிதம் அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளது.  பாராட்டுக்கள்.  வானதி பதிப்பகம் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக நூல் ஒளிர்கின்றது.  மாமனிதர் கலாமுக்கு சூட்டிய மகுடமாகவும் விளங்குகின்றது.  கலாம் அவர்களின் புகழ் பரப்பும் நூலாக விளங்குகின்றது.

      மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் வெற்றிக்கு காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை. அவர் உலகப்பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு மறந்து  விடாமல் அதன்படி வாழ்ந்த காரணத்தால் உலகப்புகழ் ஈட்டினார் என்பதே உண்மை.  அதனை இந்நூல் நன்கு உணர்த்தி உள்ளார்.

      1. காணிக்கைக் கட்டுரைகள்     2.  இரங்கல் செய்திகள்   3.  கவிதை மாலை 4.  கலாம் அலைவரிசை 5.  கலாம் கருவூலம் என அயந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்து உள்ளார்.

      பேராசிரியர் தி. இராசகோபாலன் தொடங்கி கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழர் தலைவர் பழ. நெடுமாறன், தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், எழுத்தாளர் சிவசங்கரி, முதுமுனைவர் வெ. இறையன்பு ஆகியோர் வரிசையில் என்னுடைய கட்டுரையும், கவிதையும் இந்த நூலில் இடம்பெற்று இருப்பது மனமகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையாகவும் இருந்தது.

      முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமல்ல சீரிதழ்களான சிற்றிதழ் வரை கலாம் பற்றிய தகவல்களை தேனீ போலவே தேடித் தேடி தொகுத்து உள்ளார்கள்.  தோரண வாயிலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மை.

      “பொதுவாக ஒரு தொகை நூலைப் பொறுத்து வரையில் தேடித் தொகுப்பது கூட அத்துணை அரிய செயல் அன்று; ஆனால், தொகுத்தவற்றை எல்லாம் வகுத்து முறைப்படுத்துவது என்பது அரிதினும் அரிதாகும்.  அதற்குள் சொந்தமாக தனிநூலை நாம் எழுதி விடலாம்.  இம்முயற்சியில் எனக்குத் ‘தோன்றிய துணையாக இருந்து வலதுகரமாகச் செயல்பட்டவர் என் வாழ்க்கைத் துணைவியார் பேராசிரியர் நிர்மலா. அவருக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகின்றேன்.

      தமிழகஅரசு அறிவித்த  இளங்கோஅடிகள் விருதை முதல் முறையாக பெற்றள்ள முனைவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் ,நூல்ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு இல்வாழ்க்கைக்கு மட்டுமல்ல இலக்கிய வாழ்க்கைக்கும் துணையாக இருப்பது நூலாசிரியர் அவர்களுக்கு வாய்த்த பெரும் பேறு. இருவரும் காதலித்து கரம் பிடித்து மணி விழா கண்டு வெற்றிகரமான வாழ்க்கை நடத்தி வரும் காதல் இணையர்கள் .காதல் மணவெற்றிக்கு உதாரணமாகத் திகழும் இலக்கிய இணையருக்கு பாராட்டுக்கள்.

      மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன.  அவரின் பிறந்த நாளில் இந்த நூல் சென்னையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.  எப்போதும்  வெளியீட்டு விழாவிற்கு முன்பாகவே என்னிடம் நூலை வழங்கி விடுவார் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் . மாமனிதர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 15-10.2015 அன்று ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி (3000 பேர்), டோக் பெருமாட்டி கல்லூரி,மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றிலும் சிறப்புரையாற்றினேன். பலரும் பாராட்டினார்கள் .அதற்கு பேருதவியாக இருந்தது இந்த நூல் என்பதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

      இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தியடிகளைச் சொன்னார்கள்.  அம்மொழி மாமனிதர் அப்துல் கலாமிற்கும் பொருந்தும் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது.  கவிஞர் வைரமுத்து அவர்கள் மூன்றாம் உலகப்போர் என்று தலைப்பிட்டு எழுதப் போகிறார் என்று அறிவிட்டு வந்த போது, கவிஞருக்கு எதிர்மறை சிந்தனை வேண்டாம் தலைப்பை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தேன், அவர் ஏற்கவில்லை, ஆனால் டெல்லியில் அப்துல் கலாம் அவர்கள், வைரமுத்து அவர்களை சந்தித்த போது ‘மூன்றாம் உலகப் போர் வராது என்று குறிப்பிட்டுள்ளார்.  அதனை தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

      குழந்தைகளை நேசித்தது மட்டுமல்ல, குழந்தை உள்ளம் படைத்தவர் கலாம்.  மனதில் பட்டதை கள்ளம் கபடமின்றி பேசிடும் உதட்டிற்கு சொந்தக்காரர். கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களின் கவிதையை பலரும் பல மேடைகளில் சொல்லி கைதட்டல் வாங்கிய கவிதை. அதுகுறித்து கலாம் அவர்கள் சொன்ன கருத்து ஏர்வாடியார் மொழியிலேயை காண்போம்.

      “காந்தி மீண்டும் பிறக்க வேண்டும், ஒரு ராட்டையோடு அல்ல, சாட்டையோடு என்ற என் கவிதை வரிகளைப் படித்தவர் “கைகளில் சாட்டையிருந்தால் அவர் எப்படி காந்தியாக முடியும் என்று மென்மையாகக் குறிப்பிட்டதும் அவரிடமிருந்த கவித்துவத்தின் வெளிப்பாடே இந்த மதிப்பீடு என்பதில் வியந்து மகிழ்ந்தேன்.

      மனதில் பட்டதை துணிவுடன் குறிப்பிட்டதையும் அவர் குறிப்பிட்டதில் உள்ள நியாயத்தை அன்போது ஏற்றுக் கொண்டதும் இரு படைப்பாளிகளின் பண்பிற்கு எடுத்துக்காட்டு.
காலம் அவர்களின் வெற்றிக்குக் காராணம் அவர் ஒரு காந்தியவாதியாக வன்முறையில் நம்பிக்கை இல்லாதவராக வாழ்ந்தார் என்பதை   .மேல உள்ள கட்டுரைகள் வழி நூல் உணர்த்தி உள்ளது .

      பதச்சோறாக நூலில் இருந்து சில மட்டும் எழுதி உள்ளேன்.  நூலில் எண்ணிலடங்கா புதிய தகவல்கள் உள்ளன.  அருமையான கவிதைகள் உள்ளன. ‘கலாம் 84 என்ற தலைப்பில் 84 தகவல்கள் உள்ளன.  கலாமை நேசிக்கும் அன்பர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கலாம் தகவல் களஞ்சியம் இந்நூல்.  நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் கடின உழைப்பை வியந்து போனேன்.  பாராட்டுக்கள்.

கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணம் அவர் நேர்முறை சிந்தனையோடு வாழ்ந்தார் .தன்னம்பிக்கையோடு வாழ்ந்தார் .பிறை மனம் புண்பட என்று பேசியதே இல்லை .கோபம் என்றால் என்னவென்று தெரியாது .வள்ளுவரின் வாக்குக்கு இணங்க  வாழ்வாங்கு வாழ்ந்தார் என்பதை நூல் நன்கு உணர்த்து உள்ளது. இன்றைய   இளைய தலைமுறையினர் குறிப்பாக மாணவ சமுதாயம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

மாமனிதர் அப்துல் கலாம் பற்றி எத்தனையோ நூல்கள் வந்து கொண்டு இருக்கின்றன .ஆனால் இந்த நூல் அவரது புகழ் மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக ஒளிர்கின்றது .பாராட்டுக்கள் .  .


.

கருத்துகள்