குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் !
நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பாவை பப்ளிகேஷனஸ், 142, ஜானி ஜாங்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014 பேச : 28482441, பக்கம் : 102, விலை : ரூ. 85.
*****
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் முதுநிலைத் தமிழாசிரியர் முனைவர் ஞா. சந்திரன் அவர்கள், தந்தி தொலைக்காட்சியில் உரையாற்றிய நகைச்சுவை துணுக்குகளை கட்டுரையாக்கி நூலாக தொகுத்து வழங்கி உள்ளார். இந்த நூலை தமிழர் தந்தை ஆதித்தனார் மற்றும் செயல் திலகம் சிவந்தி ஆதித்தனார் இருவரின் புகைப்படத்துடன் தந்தித் தொலைக்காட்சிக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு.
புகழ்பெற்ற பாவை பதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு வழங்கி உள்ளனர். பாராட்டுகள். மனக்கவலை, மனச்சோர்வு, விரக்தி, பயம் இருந்தால் இந்த நூல் படித்தால் அவைகள் நீங்கி மனதிற்கு புத்துணர்வு பிறக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். இனிய நண்பர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன், தான் படித்த, கேட்ட, உணர்ந்த தகவல்களை, நகைச்சுவை துணுக்குகளை நூலாக்கி உள்ளார்.
இந்நூலிற்கு திரைப்பட இயக்குநர்கள் சேரன், ஏ.ஆர். முருகதாஸ், கல்வியாளர், ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா, தந்தி தொலைக்காட்சி நிருபர்கள் ஆர். ரங்கராஜ் பாண்டே, மை. ஆண்ட்ரூஸ் ஆகியோரின் அணிந்துரை நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளன.
பழமொழிகள் சொன்ன போது, சொன்ன பொருளை ஆராய்ந்து, உண்மைப் பொருளை உணர்த்திடும் விதமாக எழுதி உள்ளார். பாராட்டுகள். இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் குறிப்பிடுவார்கள் ; பேசிய பேச்சுக்கள் காற்றோடு கரைந்து மறைந்து விடும், எழுதிய எழுத்துக்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று : இனிய நண்பர் ஞா. சந்திரன் அவர்கள் தந்தி தொலைக்-காட்சியில் பேசிய பேச்சு, காற்றில் கரைந்து விட்ட போதும், நூலாக்கி ஆவணப்-படுத்தி உள்ளார்.
33 தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். சிறுசிறு கட்டுரைகளாகவும், சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவைகளாகவும் இருப்பதால் நூலை உடன் படித்து விட முடிகிறது.
“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்ற பழமொழி ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆனதை பதிவு செய்துள்ளார். ஆயிரம் பேரைக் கொன்றால் அரை வைத்தியன் அன்று, கொலைகாரன் என்பதை உணர முடிகின்றது. கட்டுரைகளின் இடையிடையே நகைச்சுவை எனும் முந்திரியை தூவி உள்ளார்.
சினம் காக்க, கோபம் என்பது அழிவுக்கு வழி வகுக்கும் என்று திருவள்ளுவர் வலியுறுத்திய அறக்கருத்துக்களை உணர்த்தும் விதமாக ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ கட்டுரையில் விளக்கி உள்ளார். கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு அமர்வாய் என்ற பொன்மொழியையும் வாசகருக்கு நினைவூட்டி வெற்றி பெறுகிறார் நூல் ஆசிரியர்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது உண்மை. சிரிக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள், நூல் முழுவதும் உள்ளன.
கேள்விப்பட்ட புகழ்பெற்ற பழமொழிகளையே கட்டுரையின் தலைப்பாக்கி அவற்றிற்கு விளக்கம் அளித்து நகைச்சுவை இணைத்து சுவைபட எழுதி உள்ளார். பேசிய உரையை அப்படியே பேச்சு மொழியிலேயே எழுதாமல் கவனமாக மாற்றியமைத்து எழுதியது சிறப்பு.
“காற்று அடிக்கும் போது, பறவையும் பறக்கும், பேப்பரும் பறக்கும் ; காற்று நின்ற பிறகு தான் பறவை எது? பேப்பர் எது? என்று தெரியும் என்பார் வித்தகக் கவிஞர் பா. விஜய்.
இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்களின் சிந்திக்க வைக்கும் வைர வரிகளும் நூலில் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.
நூலில் நகைச்சுவைகள் மட்டுமல்ல, வாழ்வியல் கருத்துக்களும் நிறைய உள்ளன. பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :
“நாம் எப்போதுமே சின்ன சின்ன பிரச்சினைகளை மனசுல போட்டு குழப்பிக்கக் கூடாது. மனசை குவளையாக வைச்சுட்டா நமக்கு வாழ்க்கையே வெறுத்துடும். ஆனால் பரந்து விரிந்த குளம் மாதிரி வைச்சுகிட்ட வாழ்க்கையே சுவையாக இருக்கும்”.
மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பயிற்றுவிக்கிறார்.
தோழமையின் சிறப்பை உலகப்பொதுமறையான திருக்குறளோடு உணர்த்தி உள்ளார். அவசரப்பட்டு வார்த்தைகள் விட்டு விடக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். ஒவ்வொரு சொல்லையும் மிக கவனமாகச் சொல்ல வேண்டும். முயற்சி திருவினையாக்கும் என்பதை எறும்புகள் மூலம் உணர்த்துகின்றார்.
கேள்விப்பட்ட பழமொழி. ஆனால் அதன் சரியான பொருள் விளங்காமல் இருக்கும். இந்நூல் படித்தால் பொருள் விளங்கி விடும். நாமும் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேடைப் பேச்சாளர்களுக்கு பயன் தரும் நூல். பயன்படுத்தியுள்ள பழமொழிகளை குறிப்பிட்டால் உங்களுக்கு விளங்கும்.
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள், ஆமை புகுந்த வீடு உருப்படாது, எத்தனுக்கு எத்தன், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய், பணம் பத்து செய்யும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்பும் அதிர்ஷ்டக் குழி, தனக்கு மிஞ்சியது தானமும் தர்மமும் – இப்படி பல்வேறு பழமொழிகளை கட்டுரையின் தலைப்பாக இட்டு அதன் உண்மையான பொருளை விளக்கி, பொருத்தமான சிறுகதை சொல்லி நகைச்சுவைபட எழுதி நூல் வடித்துள்ளார்.
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்ற நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் உண்டவையை நினைவூட்டி வெற்றி பெறுகின்றது. இன்றைய இளையதலைமுறையினர் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்நூல் படித்தால் தமிழ்ப்பழமொழிகளின் அருமை, பெருமை உணர முடியும்.
வாழ்க்கைக்குப் பயன்படும் வாழ்வியல் கருத்துக்கள் நிறைய உள்ளன. 27-வது கட்டுரையின் முடிப்பில் எழுதிய வரிகளை கடைப்பிடித்தால் நலமாக வாழலாம்.
“நம் உடம்புக்கான மருந்து நாம் சாப்பிடுகிற விருந்துல இருக்கு. அந்த விருந்தை மருந்தா சாப்பிட்டா நாம எப்போதுமே ஆரோக்கியமா வாழலாம்”.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள், “இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும் போதே எழுந்து விட வேண்டும்”. என்று அந்தக் கருத்து என் நினைவிற்கு வந்தது .ஒன்று படிக்குபோது அது தொடர்பான மற்றொன்று வாசகர் நினைவிற்கு வருவது நூல் ஆசிரியர் வெற்றிக்குச் சான்று . இந்த நூல் பயன் தரும் நல்ல நூல். நூலாசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

கருத்துகள்