மகாகவி பாரதியார் பிறந்த நாள் கவிதைப் போட்டி – தொகுப்பு நூல். அணிந்துரை : கவிஞர் இரா. இரவி,

மகாகவி பாரதியார்
பிறந்த நாள் கவிதைப் போட்டி – தொகுப்பு நூல்.

அணிந்துரை : கவிஞர் இரா. இரவி,
இணையம் www.kavimalar.com
வலைப்பூ www.eraeravi.blogspot.in
மின் அஞ்சல் eraeravik@gmail.com
அலைபேசி  9842193103

       உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் மட்டும் கலந்து கொண்ட கவிதைப் போட்டி நடந்தது.  மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்பட்டது.  09-09-2015 அன்று மாலை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடக்க இருப்பதாகவும், நடுவராக வர வேண்டும், உடன் ஒரு கவிஞரையும் அழைத்து வருக என்று வேண்டுகோள் விடுத்தார்கள். எனது நண்பர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுடன் சென்று இருந்தேன்.  வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் கவிஞர் மொய்தீன் அவர்களும் ஒரு நடுவராக மொத்தம் மூன்று நடுவர்களுடன் கவிதைப் போட்டி தொடங்கியது.  10 வழக்கறிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.

       கவிதைப் போட்டியில் வாசித்த கவிதைகள் காற்றோடு போய் விடும், இதனை நூலாக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் நண்பர் சந்திரன்.  அதனை ஏற்று நூல் வடிவம் பெற்று உங்கள் கரங்களில் உள்ளது இந்நூல்.  இப்படி ஒரு கவிதைப்போட்டி ஏற்பாடு செய்த இனிய நண்பர் கு. சாமிதுரை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இலக்கிய அணிக்கு முதல் பாராட்டு.  போட்டியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்களுக்கு இரண்டாவது பாராட்டு.

       சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள்.  "ஓய்வு என்பது படுத்து உறங்குவது அல்ல, வழக்கமான பணிகளில் இருந்து விடுபட்டு விருப்பமான செயலில் ஈடுபடுவதே ஓய்வு.  புத்துணர்வு தருவது, என்பார்கள்."  அது போல பரபரப்பான வழக்கமான பணிகள் விடுத்து கவிதை எழுதுவதில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள்.

            உள்ளத்தில் உள்ளது கவிதை, உண்மை உரைப்பது கவிதை, மகாகவி பாரதியார் பாணியில் ரௌத்திரம் பழகி, கனவு மெய்ப்பட வழி சொல்லும் விதமாக வடித்த கவிதைகள் மிக நன்று.  போட்டியில் கலந்து கொண்ட 10 கவிஞர்களுக்கும் பாராட்டுகள்.  வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.  எழுத எழுத்த்தான் கவிதை வசப்படும்.

       கவிதை வரிகள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.

வழக்கறிஞர் கவிஞர் இ. பினேகாஸ் கவிதை !

       பஞ்சத்திற்கு பணம் திருடிய கும்பலுக்கு
       ஆயுள் தண்டனை
       பாதசாரிகளை ஏற்றிக் கொன்ற சல்மாங்கானுக்கு?
       உச்சநீதிமன்றம் கூட மறுத்து விட்டது ரௌத்திரம் பழக!

       மக்கள் மனங்களில் எழுந்த கேள்வியை நெஞ்சில் உரத்துடன்,  நேர்மைத் திறத்துடன் சட்டத்துறையில் இருந்த போதும் துணிவுடன் வடித்த கவிதை நன்று.

வழக்கறிஞர் இராம. அருண் சுவாமிநாதன்.

       கோபமே தூண்டுதலின் முதல்படி
       தூண்டுதலே வேட்டையின் அடுத்தபடி
       பாரதியின் சொல்படி
       நடக்க வேண்டும் நேர்மையின் படி
       தவறு நடந்தால் சுட்டிக்காட்ட நீ
       சமூகத்தை படி.
       அதற்கு நீ கண்டிப்பாக ரௌத்திரம் படி.

       அநீதி, கண்டு காணாமல் இருப்பதில்லை.  அநீதியை தட்டிக் கேட்க ரௌத்திரம் பழக வேண்டும். 

வழக்கறிஞர் கவிஞர் பா. அரவிந்த்.

       கற்கள் கால்களை பதம் பார்த்தாலும்
       நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்தி விடவில்லை
       கடலில் கலக்கும் வரை!

       ஓடிக் கொண்டிருக்கும் நதியை வித்தியாசமாக பார்த்த பார்வை நன்று.  தோல்விக்கு துவளாதே என உணர்த்திய விதம் நன்று.

வழக்கறிஞர் கவிஞர் மாயக்கண்ணன் கவிதை

       நல்லவைகளை மாற்றிட வேண்டாம்
       நயவஞ்சகம் நிலைத்திட வேண்டாம்
       பெண் சிசுக் கொலை வேண்டாம்
       பொய்யர்களை மதிக்க வேண்டாம்
       மண்ணுலகில் இவையாவும் வேண்டாம்
       மக்களுக்குள் இவைகளை யாரும் விதைக்க வேண்டாம்.

       வேண்டாம் என்பதை பட்டியலிட்டு அறநெறி வேண்டும் வலியுறுத்தியது நன்று. 

வழக்கறிஞர் கவிஞர் கோ. கனேஷ்குமார் கவிதை

       நதிகளும் நீதிபதிகளும்
       தூய்மையாகவே இருக்க வேண்டும்.
       நீதித்துறையில் வழக்கறிஞராக இருந்த போதும்
       நீதிபதிகள் தூய்மையாக இருக்க வேண்டும்

என்ற வேண்டுகோள் நன்று.

வழக்கறிஞர் கவிஞர் கே. மகாராஜன் கவிதை

       கணினியின்றி அமையாது உலகு இது புதுமொழி
       மூவாயிரம் ஆண்டு மூத்த
       தமிழ் வித்தகன்
       கணியன் பூங்குன்றனை
       தோளில் தூக்கி சென்று
       எல்லைகளுக்கப்பால்
       அண்ட வெளியில்
       அள்ளித் தெளித்தவன்
       கனவு மெய்ப்பட வேண்டும்
       ஆம், கலாமின் கனவு மெய்ப்பட வேண்டும்.

வித்தியாசமாக மாமனிதர் அப்துல் கலாம் பற்றி பாரதியார் வரிகளோடு வடித்த கவிதை நன்று.

வழக்கறிஞர் கவிஞர் முனைவர் செ. குகசீலரூபன் கவிதை

       அரிசியில் தொடங்கி
       ஆகாய விமானம் வரை
       போலிகளை உலவ விடும்
       காலிகளை கருவிலே அறுக்க வேண்டும் !

       செய்தித் தாளில் பிளாஸ்டிக் அரிசி, சீனா அரிசி என்று படித்த போது அதிர்ந்து போனேன்.  அதனை நினைவூட்டும் விதமாக சமூக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வடித்த கவிதை நன்று. 

வழக்கறிஞர் கவிஞர் ச. அருண் ஆரோக்கியசாமி கவிதை !

       மதம் பிடித்த மிருகங்கள் காட்டிற்குள் இருந்தாலும்
       மதம் பிடிக்காத மானிடர்கள் நம் நாட்டிற்குள் வேண்டும்!

உண்மை. மதம் ஒரு அபின் என்ற லெனின் என்றார் .கடவுளை மற! மனிதனை நினை ! என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் . நாட்டில் நடக்கும் பெரும்பாலான வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் மதவெறியே காரணமாக உள்ளது.  மதம் பிடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியது நன்று.  கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எந்த  ஒரு வழிபாட்டு   இடத்தையும் இடித்ததாக வரலாறு இல்லை .ஆனால் கடவுள் உண்டு  என்பவர்கள்தான் இடித்துக் கொள்கிறார்கள் .மோதி வீழ்கிறார்கள் .பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டும் .மதம் மனிதனை பண்படுத்த வேண்டும் மற்றவரை புண் படுத்துதல்  தவறு .

வழக்கறிஞர் கவிஞர் ஆர். கருணாநிதி கவிதை !

       சாதியை உருவாக்கிய சமூகத்தில் பிறந்து
       சாதிக் கொடுமைகள் வேண்டாம்
       அன்பு தன்னில்
       செழித்திட வேண்டும் என்று பாடிய உன் 
       கனவு   மெய்ப்பட   வேண்டும்.
       மகாகவி பாரதி பற்றிய படப்பிடிப்பு மிக நன்று.

வழக்கறிஞர் கவிஞர் எஸ். லூயிஸ் கவிதை !

       ரௌத்திரம் பழகு!
       நெற்றிக்கண் திறப்பினும், பதவியின்  
       உச்சத்தில்  இருப்பினும்
       குற்றம் குற்றமே என்றுரைப்பாய்.

       திருவிளையாடல் நக்கீரன் கருத்தை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று.

       10 கவிஞர்களின் கவிதை வரிகளில் பதச்சோறாக சில மட்டுமே இங்கே சுட்டி உள்ளேன்.  உள்ளே சென்று படித்துப் பாருங்கள்.  கருப்பு அங்கி அணிந்த வழக்கறிஞர்களின் வெள்ளை உள்ளம், ரௌத்திரம் பழகிய நெஞ்சம், கனவு மெய்ப்பட வேண்டும் என்ற ஆதங்கம் அனைத்தும் நன்கு விளங்கும்.

தமிழ் படித்தவர்களை விட தமிழ் படிக்காதவர்கள் ,சட்டம் படித்தவர்கள் தமிழை மிகவும்  நேசிக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல்


கருத்துகள்