மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

மழைநேரத் தேநீர்


தன்னம்பிக்கைக் கதைகள் !
நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை – 600 014.
பேச : 044-28482441 ; விலை : ரூ. 75/-
*****
       மதுரையில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூல்.  இணையத்தில், தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பாரத்த, கேட்ட, படித்த, பயனுள்ள தன்னம்பிக்கைக் கதைகளை மொத்தமாக நூலாகப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நூலின் தலைப்பு கவித்துவமாக மழைநேரத் தேநீரை நினைவூட்டி விடுகிறது.

       இன்றைய மாணவ சமுதாயம் இந்நூல் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம்.  இந்நூலிற்கு எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், இனிய நண்பர் கல்வியாளர் ரமேஷ் பிரபா, ஊடகவியலாளர் ஆர். ரெங்க ராஜ் பாண்டே, ஞாபகங்கள் பட இயக்குனர் ஜீவன், பேராசிரியர் முனைவர் மு. பெர்னாட்சா என பலரின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்க்கின்றன.  இந்த நூலை நூலாசிரியர், அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் காணிக்கையாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.

       53 கதைகள் உள்ளன.  சின்னச் சின்ன மின்னல் போல, குட்டிக் குட்டுக் கதைகள்.  படித்து முடித்தவுடன் தன்னம்பிக்கை விதை விதைக்கப்பட்டதை உணர முடிகின்றது.  பல தமிழாசிரியர்கள் பள்ளி, வீடு என்று சுருங்கி விடுவதை காண்கிறோம் . ஆனால் இனிய நண்பர் ஞா. சந்திரன் தமிழாசிரியர் பணியோடு நின்று விடாமல், அதையும் தாண்டி பேச்சு, எழுத்து என தடம் பதித்து வருபவர்.  உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடந்த வழக்கறிஞர்களின் கவிதைப் போட்டிக்கு நானும் நூலாசிரியரும் நடுவராக இருந்து, வந்தோம். சிறந்த சிந்தனையாளர் திரு. வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வதைப் போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர் நூலாசிரியர்.

       ‘தர்மம் தலை காக்கும்’ என்ற முதல் சிறுகதையே முத்தாய்ப்பானது.  இது கதை மட்டுமல்ல, நடந்த நிகழ்வும் கூட.  சிறுவனாக இருந்த போது குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டவனுக்கு மோர் கொடுத்து உதவினாள் ஒருத்தி.  பின்னாளில் அச்சிறுவன் மருத்துவர் ஆகி விடுகிறார்.  மோர் தந்த பெண்ணிற்கு மருத்துவம் புரிகிறான். " தங்களுடைய அன்பான மோருக்கு ஈடாக இந்த மருத்துவக் கட்டணம் செலுத்தப்பட்டது". என்கிறான்.  அவள் நெகிழ்ந்து மகிழ்ந்து விடுகிறாள்.

       இக்கதை உணர்த்துவது யாதெனில், ஒருவருக்கு பயன் கருதாது உதவி செய்தால். பின்னாளில் பல மடங்காக வேறு விதமாக நமக்கே பயனாக அமையும் என்பதை நன்கு உணர்த்தி விடுகிறது.  இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வோரு நற்செய்தி உள்ளது.  நம்பிக்கை ஊட்டும் விதமாக, மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பல கதைகள் உள்ளன.

       எளிய நடையில் பேசுவது போலவே இயல்பாக எழுதி உள்ளார்.  படிக்கும் அனைவருக்கும் எளிதில் விளங்கும்.  தந்தி தொலைக்காட்சியில் தினமும் காலையில் தொடர்ந்து பேசி வந்தார்.  பல்வேறு நூல்கள் படித்து, அவற்றில் மிகவும் பிடித்தவற்றை மக்களுக்கு பயன்படும் விதத்தில் எடுத்து இயம்பி வந்தார்.  அவற்றை நூலாகவும் வெளியிட்டது சிறப்பு.

       நூலாசிரியர், என்னுரையில் நான் சு(வா)சித்த, ரசித்த, கேட்ட, எனக்கு வழிகாட்டிய, ஊக்கமூட்டிய கதைகளை தொகுத்து வழங்கி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  தன்னுடைய கதைகள் என்று குறிப்பிடவில்லை, பாராட்டுகள். 

அடுத்த நூல் தங்களுடைய சொந்த படைப்பாக, நீங்களே வேறு புதிய சிறுகதைகள், வேறு கோணங்களில் சிந்தித்து வெளியிட வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் நூலாசிரியருக்கு வைக்கின்றேன்.  தொகுப்பு நூலை விட படைப்பு நூலே படைப்பாளிக்கு கூடுதல் சிறப்பு தரும்.  சொந்தமாக படைக்கும் ஆற்றல் உண்டு, படையுங்கள்.

       ஒவ்வொரு கதைக்கு இறுதியிலும் பொன்மொழிகள், அறிஞர்களின் கூற்றுகள் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு.  ‘நம்பிக்கையோடு நட’ கதை, பழங்கால நாணயம், ஓட்டை விழுந்த நாணயம் பையில் வைத்து இருக்கிறான்.  நாணயத்தை துணியில் சுற்றி எப்போதும் பையில் வைத்து உள்ளான். கடுமையாக உழைத்து முன்னேறுகிறான்.  தன் முன்னேற்றத்திற்கு அந்த நாணயமே காரணம் என்று நினைக்கிறான்.  ஒரு நாள் அந்த நாணயத்தை துணியை அவிழ்த்துப் பார்க்கிறான்.  ஓட்டை நாணயம் இல்லை, வேறு நாணயம் உள்ளது.  மனைவியிடம் எப்படி என்று கேட்ட போது, அவள் துணி துவைத்து காயப் போடும் போது நாணயம் வெளியே ஓடி விட்டது, கிடைக்கவில்லை.  நான் தான் வேறு நாணயத்தை வைத்து சுற்றி வைத்தேன் என்கிறாள், என்று தொலைந்தது? என்று கேட்கிறான்.  கொண்டு வந்த அன்றே, அந்த நாணயம் தொலைந்தது என்கிறாள்.  இதனை கதையாக எழுதி உள்ளார்.  நம்மில் பலர் இதன் காரணமாக, அதன் காரணமாக என்று மூட நம்பிக்கை கொள்வதை சாடும் விதமாக கதை உள்ளது.  இப்படி பல கதைகள் நூலில் உள்ளன.

       பாவை பதிப்பகம் மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்டு உள்ளனர்.  தன்னை உயர்வாகவும், பிறரை தாழ்வாகவும் எண்ணும் மனநிலை தவறு என்பதை, கிளி, காகம் மூலம் ‘இதுவும் மாறும்’ என்ற கதையில் உணர்த்தி உள்ளார்.  மனைவியை செவிடு என்று சந்தேகப்பட்ட கணவன் தான் செவிடு என்பதை ‘தன்னை அறிதல்’ கதையில் உணர்த்தி உள்ளார்.  சிறு சிறு துணுக்குகளை சிறுகதையாக வடித்து உள்ளார். 

மரத்தின் மீது கல் எறிந்தால் கனி தருகிறது.  ஞானி மீது கல் விழுந்தால் தண்டனை தரலாமா?, நான் மரத்திற்கும் கீழா? என ஞானி கேட்பது சிந்திக்க வைக்கின்றது ‘தீமைக்கு நன்மை’ சிறுகதை.  கோபம் வேண்டாம் என்பதையும் உணர்த்தி உள்ளார். 

நூல் முழுவதும் பல்வேறு நீதிக்கதைகள் உள்ளன.  நீதிக்கதைகள் படிக்கும் போது படிக்கும் வாசகர் மனதில் நீதியை விதைக்கும்.  பல்வேறு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பையே நிறுத்தி விட்டனர்.  நீதிபோதனையாக உள்ள இந்த நூலை மாணவர்களுக்கு பாட நூலாக்கலாம்.  மாணவர்கள் பண்பட உதவிடும் நூல்.  பாராட்டுகள்.



நன்றி

கருத்துகள்