உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி

*****







இராமேசுவரம் எனும் தீவில் பிறந்து
இராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்!
நாத்திகர்களுக்கும் புனித ஊராக
நல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்!
படகோட்டி மகனாகப் பிறந்து அவர்
பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்!
செய்தித்தாள் விற்றுப் படித்து எல்லா
செய்தித்தாள்களின் தலைப்பு செய்தியானவர்!
எளிமையின் சின்னமாக விளங்கியவர்!
இனிமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்!
பொக்ரானில் அணுகுண்டு வெடித்தவர்!
பூஉலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்!
தமிழர்களின் பெருமையை உணர்த்தியவர்!
தன்னிகரில்லா மனிதராக உயர்ந்தவர்!
இரண்டாவது காந்தியடிகளாக வாழ்ந்தவர்!
இரண்டாவது நேருவாக வலம் வந்தவர்!
மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தவர்!
மாமனிதர் உழைப்பின் சிகரமானவர்!
இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவர்!
இலக்கணமாக வாழ்ந்திட்ட நல்லவர்!
கனவு நாயகனாக விளங்கியவர்!
கனவுகள் நனவாக உதவியவர்!
சோதிடம் நம்பாத பகுத்தறிவாளர்!
சோகம் வேண்டாமென போதித்தவர்!
கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர்!
குழந்தைகளை எந்நாளும் நேசித்தவர்!
மணம் முடிக்காமல் வாழந்தவர்!
மனித மனங்களை கொள்ளையடித்தவர்!
மயில்சாமி அண்ணாத்துரைக்கு குருவானவர்!
மட்டற்ற விஞ்ஞானிகளை உருவாக்கியவர்!
தூங்க விடாமல் செய்வதே கனவென்றவர்!
தூங்கிவிட்டார் நம்மைவிட்டு சென்று விட்டார்!
இராணுவ விமானங்களில் பயணித்தவர்!
அணுவளவும் அச்சம் என்றும் கொள்ளாதவர்!
உயர்ந்த விருதுகள் பல பெற்றபோதும்
உயரமாக தன்னை என்றும் கருதாதவர்!
கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்தவர்!
கோடிக்கும் பணத்திற்கும் என்றும் ஆசைப்படாதவர்!
செம்மையாக வாழ்ந்து காட்டிய தமிழர்
செந்தமிழர் திறனை உலகிற்கு உணர்த்தியவர்!
அக்னிச் சிறகுகள் எழுதி சாதித்தவர்
அக்னியை மனதிற்குள் விதைத்தவர்!
அமெரிக்கா நாசா அழைத்திட்ட போதும்
அன்போடு இந்தியாவிலேயே இருந்து வென்றவர்!
சென்ற இடமெல்லாம் உலகப் பொதுமறையை
செப்பாமல் இருந்ததில்லை அவர் !
திருக்குறளை உச்சரிப்பதோடு நின்றிடாமல்
திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர் !
தோன்றின் புகழொடு தோன்றி நின்றவர் !
தோல்விக்கு துவளாத உள்ளம் பெற்றவர் !

நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
நேர்மையில் சமரசம் செய்து கொள்ளாதவர் !
இந்தியா தவிர வேறுநாட்டில் பிறந்திருந்தால்
இவரை வாழ்நாள் குடியரசுத்தலைவராக்கி இருப்பர் !
இரண்டாம் முறை குடியரசுத்தலைவராக்காமல்
இரண்டாம் தர அரசியல் செய்தனர் !
தன்னம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்தவர் !
தன்னிகரில்லா மாமனிதராகச் சிறந்தவர் !
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் !
வையகம் போற்றும் மாமனிதர் !
உலக அரங்கில்நாட்டின் மதிப்பை உயர்த்தியவர் !
உலகம் மதித்திடும் ஒப்பற்ற மனிதர் !
ஆசிரியர் பணியே அறப்பணி என்றவர் !
அதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் !
கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர் !
கேள்விகளே அறிவை வளர்க்குமென நம்பியவர் !
எடை குறைவான செயற்கைக் கால்களில் நடப்பதை
என்று கண்டோரே அதனை மகிழ்வான தருணமென்றவர் !
மாணவர்களிடம் உரையாற்றும்போதே
மனம் விரும்பியபடி  மரணித்தவர் !  
மரணத்திற்கு என்றுமே அஞ்சாதவர் !
மரணத்தை வரலாறு ஆக்கியவர் !
இவர் போல யாரு உலகம் சொல்லும் !
‘இவருக்கு இணை இவரே
உலகம் உரைக்கும் !
யார் இறந்தாலும் ஈடுசெய்ய முடியா இழப்பு என்போம் !
இவர் இறந்தது உண்மையில் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு !
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்பவர் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்