படித்ததில் பிடித்தது ! நன்றி தீக்கதிர் நாளிதழ் ! மரணம் தீண்டமுடியாத உயிர்ப்புமிகு பாட்டுக்காரன்! சோழ. நாகராஜன் !

படித்ததில் பிடித்தது ! நன்றி தீக்கதிர்   நாளிதழ் !


மரணம் தீண்டமுடியாத உயிர்ப்புமிகு பாட்டுக்காரன்!  

 சோழ. நாகராஜன் !



ஆயிரக்கணக்கான அமரத்துவம் மிக்க பாடல்கள் என்றால் அது மிகையல்ல! புராணக் கதைகளை மெல்ல மெல்லவிடுத்து, சமூகக் கதைகளின் படங்களாகத் தமிழ் சினிமா நிறம் மாறிவந்த காலகட்டத்தின் இசைத் தேவையை இட்டு நிரப்பவந்தவராகவே விஸ்வநாதனை நாம் மதிப்பிட வேண்டும். மரபார்ந்த செவ்விசைக்கு ஏற்றமரபார்ந்த கருவிகளாலேயே இசைக்கப்பட்டு, மரபார்ந்த பாணியில் பாடுவோரால் நிரம்பி வழிந்துகொண்டிருந்த தமிழ் சினிமாசங்கீதத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சி, அதனைப் புத்துணர்ச்சிகொள்ளச் செய்த வரலாறுபடைத்தவர் அவரே.
செவ்விசையையும், மேலை இசையையும் மிகச்சரியான விகிதத்தில் கலந்துதந்து தமிழ் ரசிகர்களைத் தனதுமெல்லிசை எனும் புதுவகை இசையால் தன்வசமாக்கியவர் அவர். அந்தப் புது முயற்சிக்குத் தோதாகவே அவர் மேற்கத்திய இசைக் கருவிகள் பலவற்றையும் நமதுமரபார்ந்த கருவிகளோடு இணைசேர்த்துக்கொண்டார். அவரது எல்லாவகைப் புதுமைகளையும் சோதித்துப்பார்க்க களமமைத்துக் கொடுப்பதாகவே அன்றைய புதுமை நாயகர்களாக வந்துசேர்ந்திருந்தனர் எம்.ஜி. ராமச்சந்திரனும், சிவாஜி கணேசனும் அவர்களையொத்த இன்ன பிறரும். இவர்களுக்கான கதையமைப்பும் விஸ்வநாதனுக்கு ஒரு விரிந்த தளத்தை உண்டாக்கித் தந்து அதன் பயனாக சுவைகள் பலவாறான தேனமுதகானங்களை அவர் உருவாக்குகிற சூழலை உண்டாக்கியிருந்தது. எம்.எஸ்.வி. யின் அனைத்துப் புதுமை முயற்சிகளையும் மக்களிடம் வெற்றிகரமாக எடுத்துச்செல்லும் இசைத் தூதுவர்களாக வந்துசேர்ந்தனர் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும்.காலப்போக்கில் இவர்களோடு பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜே.யேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சித்ரா என்று விதம் விதமான பாடகர் குழாமும் விஸ்வநாதனின் இசைக்குத் தனித்த வலு சேர்த்தது. ஜெனோவா, பணம், குலேபகாவலி,மாலையிட்ட மங்கை, தேவதாஸ், சண்டிராணி, மருமகள், பாகப்பிரிவினை, பாலும் பழமும், மன்னாதிமன்னன், பாசமலர், நெஞ்சில் ஓர் ஆலயம், ஆலயமணி, கற்பகம், கர்ணன், பணத்தோட்டம், படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை என்று நகர்ந்த அந்த இருவரின் இசைப் பயணம் பேரருவியாகி, பெருநதியாகிப் பிரவாகமெடுத்தது. 1950 - 60 களில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்களின் புகழ் தென்னிந்திய சினிமாவின் சிகரத்திலிருந்தது. ராமமூர்த்தியை பிரியநேர்ந்தபோதும் விஸ்வநாதனுக்கு வீழ்ச்சியேதும் ஏற்பட்டுவிடவில்லை.
காரணம் அவரதுதனித்துவ இசைக் கோர்ப்புத் திறன். புதியபுதிய மெட்டுக்களை அவர் உற்பத்திசெய்துகொண்டேயிருந்தார். அவரது பங்களிப்பு நிற்காமல் தொடர்ந்துகொண்டேயிருந்தது. அன்பே வா, பெற்றால்தான் பிள்ளையா, ராமு, பாமா விஜயம், இரு மலர்கள், காவல்காரன், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டிவரை உறவு, எங்க ஊர் ராஜா, தெய்வமகன், சிவந்த மண்,எங்கள் தங்கம், பாபு, முகமது பின் துக்ளக்,பிராப்தம், ரிக்ஷாக்காரன், சவாலே சமாளி,ஞானஒளி, நீதி, பட்டிக்காடா பட்டணமா, உலகம் சுற்றும் வாலிபன், அவள் ஒருதொடர்கதை என்று அவரது படங்களின்பட்டியலும்கூட ஒரு பெருந்தொடர்கதைதான். முத்தான முத்தல்லவோ என்று ஒரு சாதாரணப் படம் 1976 ல் வந்தது. அதற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் அதில் ஒரு பாடலை வைத்திருப்பார். ஒரு பியானோ, ஒரு வயலின் மட்டும் விளையாடும் அந்தப் பாடலில். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து அவரே பாடிய அந்தப் பாடல் இப்படித் தொடங்கும்:எனக்கொரு காதலி இருக்கின்றாள் - அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்கீதம் அவளது வளையோசைநாதம் அவளது தமிழோசை...
இவை அவரே வெளியிட்ட சொந்தக்கொள்கை லட்சியப் பிரகடனம்போன்ற வரிகள். இசையெனும் அந்த தேவதையின்மீது தீராக் காதல் கொண்டவராகவே வாழ்ந்தார் எம்.எஸ்.வி. செவ்விசை வடிவமானாலும்,நாட்டுப்புற வடிவமானாலும், மேற்கத்திய இசை வடிவமானாலும் அவரது இசையில் அமைந்த பாடல்களைக் கடைக் கோடிப் பாமரனும் அவை தனது பாடல்கள் என்றான். செவ்விசையறிஞர்களும் அவற்றின்நேர்த்தியை வியந்து போற்றினர். சமுதாயத்தின் பல தரத்தாரும் அவரது பாடல்களைத் தமக்கு நெருக்கமானவையெனக் கருதியதில்தான் அவரது மேதைமை பொதிந்த இசையின் மகத்துவம் இருக்கிறது. படித்தோரும் பாமரரும் ஒன்றுபோல அவரது ரசிகர்களாக இருந்த, இருக்கிற அதிசயம் வேறெவருக்கும் இத்துணை விரிந்த அளவு கிட்டக்கூடுமா என்பது சந்தேகமே. அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மெட்டமைக்கிற மிக உன்னதமான பொறுப்பும் அவரிடமே வந்தது.கருவிகளை மிகச் சரியான பாவங்களில் பொருத்தி இசைக்கும் அவரது தனித் திறனே அவரது மகத்தான வெற்றிக்கு இன்னொரு காரணமெனலாம். ஷெனாய்,பியானோ மட்டுமல்லாது சீழ்க்கை எனும் வாயால் எழுப்பும் விசிலைக்கூட பல படங்களில் அவரொரு கருவியாக்கி வியக்கவைத்திருக்கிறார். மனயங்கத் சுப்பிரமணிய விஸ்வநாதன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் கேரளத்தின் பாலக்காட்டுக்கு அருகிலுள்ள எலப்புள்ளி எனும் சிற்றூரில் பிறந்தவர்.
இளம்வயதிலேயே தந்தையை இழந்ததால் அதிர்ஷ்டமில்லாதவன், ராசியில்லாதவன் என்றெல்லாம் ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார். தனது தீராத கலை வேட்கையாலும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தாலும் தன்மீதான பழிச்சொல்லைப் பொய்யாக்கியவர் அவர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் மிகச் சிறந்த இசை மேதைகளுள் ஒருவராக உயர்ந்திட்ட எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆயிரக்கணக்கான உயிர்ப்புமிக்க அமரத்துவப் பாடல்களை என்றேனும் மரணமென்பது தீண்டவும் இயலுமோ?
சோழ. நாகராஜன்

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்