உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !

கவிஞர் இரா .இரவி

குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தை
குழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை

அன்னையைக் கூட சென்னைக்கு அழைக்காதவர்
அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர் காமராசர்

நானிலம் போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர்
நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர் காமராசர்

கல்விப் புரட்சி பசுமைப் புரட்சி தொழில் புரட்சி
புரட்சிகள் பல புரிந்த புரட்சியாளர் காமராசர்

அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர்
பாலங்கள் பல கட்டி மக்களைக் காத்தவர் காமராசர்

முதல்வர் பதவியில் பெருமைகள்சேர்த்து முத்திரைப் பதித்தவர்
முதல்வர்களில் முதல்வராய் திகழ்ந்தவர் காமராசர்

கருப்பு காந்தி என்று மக்களால் அழைக்கப் பட்டவர்
வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர்

கதராடை மட்டுமே அவர் சேர்த்து வைத்த சொத்து
கல்வி கற்பித்ததால் கற்றவர்கள் யாவரும் சொத்து

குப்பனும் சுப்பனும் கல்வி கற்றது அவராலே
உயர் பதவிகள் பெற்றதும் காமராசராலே

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
பெரியாரே நேசித்த பச்சைத் தமிழர் காமராசர்

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !
உனக்கு நிகர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை !
-----------------------------------------------------------------------------
தென்னாட்டுக் காந்தி
– கவிஞர். இரா . இரவி
விருதுநகரில் பிறந்த விருதுக்காரர்
விவேகத்தில் சிறந்த திறமைக்காரர்
கிராமங்கள் முழுக்க கால்பதித்தவர்
மனிதநேயத்தின் மறுஉருவமாக நின்றவர்
தன்னிகரில்லா தமிழகத்தை
உயர்த்திக்காட்டியவர்
தரணியில் நேருவின்
பாராட்டைப் பெற்றவர்
தன்னலமற்ற தலைவராக வாழ்ந்தவர்
பொதுநலத்தையே
குறிக்கோளாக்க் கொண்டவர்
ஏழைப் பங்காளன் என்பதற்கு
இலக்கமாணவர்
ஏழைகளுக்கு
இலவசக்கல்வி நல்கியவர்
எளியவருக்கு
மதிய உணவு வழங்கியவர்
கற்றவர்கள் ஏழு என்பதை
முப்பத்தேழாக்கியவர்
கல்விக்கூடங்கள்
இருபத்தேழாயிரம் திறந்தவர்
விள்க்கேற்றி அறிவொளி
தந்த முதல்வர்
ஏழைகளின்
உயர்வுக்குச் சிந்தித்தவர்
வாழ்க்கையையே
தியாகம் செய்தவர்
கதராடை அணிந்த
சட்டைக்காரர்
கொண்ட கொள்கையில் பிடிப்புக்காரர்
இலட்சங்களுக்காக இலட்சியத்தை விடாதவர்
கோடிகளுக்காக கொள்கையை துறக்காதவர்
தென்னாட்டு காந்தியாக விளங்கியவர்
சுயமரியாதை எங்கும் இழக்காதவர்
சுதந்திரத்திற்காக போராடிய புரட்சிக்காரர்
பணத்தாசை பதவியாசை இல்லாதவர்
பகைவர்களும் பாராட்டும் பண்பாளர்
படிக்காத மேதை காமராசர் !
------------------------------------------------------------------
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த 
அருந்தமிழர் காமராசர் !      கவிஞர் இரா .இரவி !
வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம் 
வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் !
மாடு மேய்த்தால் சோறு கிடைக்கும் 
பள்ளிக்கு வந்தால் சோறு கிடைக்குமா ?

சோறு போட்டால் பள்ளிக்கு வருவாயா ?
சோறு போடுகிறேன் பள்ளிக்கு வா !

மதியஉணவு பள்ளிகளில் வழங்கிய வள்ளலார் !
மாணவர்களின் பசிப்  போக்கிய தாயுமானவர் !
மாட்டுக்குச்சிப் பிடித்த கரங்களில் எல்லாம் !
ஏட்டுப் புத்தகங்களை ஏந்திட வைத்தவர் !

படிக்காத பாமரர்களையும் படிக்க வைத்தார் !
பட்டங்கள் பதவிகள் பெறக் காரணமானார் !

எல்லோருக்கும் கல்வி  கிடைத்திடச் செய்தார் !
ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் நீக்கினார் !

சீருடை வழங்கி மாணவர்களை  ஓருடையாக்கினார் !
சின்னக்குழந்தைகளின் மன வாட்டம் போக்கினார் !

மூடநம்பிக்கைகளை முற்றிலும் தகர்த்தார் !
முன்னேற்றப் பாதைகள் பல வகுத்தார் !

அழியாத செல்வம் அறிவுச்செல்வம் !
அற்புதக்கல்வியை வழங்கிய கல்விவள்ளல் !

மருத்துவர் பொறியாளர் பெருகிடச் செய்தார் !
மக்களின் நலனை உயிர்மூச்சாகக் கொண்டார் !

அனைவரின் நெஞ்சத்தில் வாழ்கிறார் காமராசர் !
அகிலத்தில் காமராசருக்கு  இணை மராசரே !
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த 
அருந்தமிழர் காமராசர் !  ----------------------------------------------------------
 
.
கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
கற்றோரின் எண்ணிகையை  பன்  மடங்கு உயர்த்தியவர் !
கல்விச்சாலைகள் திறப்பதை தலையாய கடமையாகச் செய்தவர் !
மாடு  மேய்த்த சிறுவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தவர் !
மதிய உணவிட்டு கல்வி கற்றிட வழி வகை செய்தவர் !
தான் படிக்காவிட்டாலும் தமிழகத்தைப்  படிக்க வைத்தவர் !
தான் படிக்கட்டாக இருந்து பலரை உயர்த்தி விட்டவர் !

மருத்துவர்களும் பொறியாளர்களும் பெருகிடக் காரணமானவர் !
மாணவர்களுக்கு கல்வியின் மேன்மையை உணர்த்தியவர் !
கைநாட்டு வைக்கும் படிக்காத பாமரர்களின் குழந்தைகளுக்கு !
கல்வி மருத்துவக்கல்வி வழங்கிய மாமனிதர் அவர் !
சாத்திரம் சம்பிரதாயம் மூடத்தனம்  என்றும்  நம்பாதவர் !
சரித்திரத்தில் இடம் பெறும் வண்ணம் சாதனை நிகழ்த்தியவர் !
கதராடை அணிந்த கறுப்புச் சட்டைக்காரராக வாழ்ந்தவர் !
கட்டாயமாக அனைவரும்  கல்வி கற்க அறிவுறுத்தியவர் !
தன்னலம் கருதாது பொதுநலம்  பேணிய புனிதர் !
தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட வல்லவர் !
ஒரு சாதிக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்த கல்வியை !
அனைத்து சாதிக்கும் சொந்தம் என்று ஆக்கிய அற்புதர் !
காமராசரால் கல்வி கற்று உயர் அதிகாரியானோர்   பலர் !
காலமான போதும் காமராசரை இன்றும் வாழ்த்துவோர் உளர் !
கல்வி வள்ளல் பட்டத்திற்குப்  பொருத்தமான ஒரே மனிதர் !
கோடிகளைச் சுருட்டுவோருக்கு இன்று  கல்வி வள்ளல் பட்டம்  !   
கல்வி எட்டாக்கனியாக இருந்தது எட்டும் கனியாக்கியவர் ! 
கற்றோர் போற்றும் காமராசர் ! கல்வி நேசர் !
------------------------------
--------------------------------------------------------
கர்மவீரர் காமராசர் !  கவிஞர் இரா. இரவி !
முதல்வராக இருந்த போதும் அன்னையே கேட்டபோதும்
முப்பது ரூபாய் கூடுதலாகத்தர மறுத்தாய் அன்று
 

வட்டச் செயலாளர்கள் கூட வாரிசுகளுக்கு
வளைத்துப் போடுகின்றனர் சொத்துகளை இன்று
 

இலவசக் கல்வி வழங்கிட அரசுப்பள்ளிகளை
எங்கும் தாராளமாகத்திறந்து வைத்தாய் அன்று
 

அரசுப்பள்ளிகளை மூடி தனியார் பள்ளிகள்
அளவின்றி தாராளக் கொள்ளைக்கு வழிவகுத்தனர் இன்று
 

வெள்ளையனே வெளியேறு என்று வீரகோசமிட்டு
வாள் ஏந்தி போராடி வரலாறு படைத்தாய் அன்று
 

வெள்ளையனே வருக கொள்ளையடித்துச் செல்க
விரிக்கின்றனர் ரத்தினக்கம்பளம் இன்று
 

விவசாயத்தின் மேன்மையை உணர்ந்து நீ
விணாய் தரிசாக இருந்தவற்றை விளைநிலமாய் மாற்றினாய் அன்று
 

விளை நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
வாரி வாரி வழங்கி கையூட்டு பெறுகின்றனர் இன்று
 

தொழிற்சாலைகள் புதியன பல தொடங்கி நாட்டில்
தொழிற் புரட்சியை தொடங்கி வைத்தாய் அன்று
 

உள்ளுர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாட்டு
உலகத் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர் இன்று
 

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவருக்கும் அன்போடு கற்பித்தாய் நீ அன்று
 

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவரிடமும் காணாமல் போனது இன்று!


காமராசர் காலம் பொற்காலம்
காலமானதால் காலமானது
பொற்காலம் !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்